தஞ்சாவூர், ஆக.4 - கடந்த எட்டு மாதங்களாக போராடி வரும் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தி, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தங்க.காசி நாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை வகித்த னர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் நாக.முருகேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், மாநிலப் பொருளாளர் சி. பெருமாள், மாநில செயலாளர் எஸ்.நாராயணசாமி, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாது காப்பு சங்கம் சுந்தர.விமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், சி.ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், திரு மண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயி களுக்கு தர வேண்டிய கரும்பு பணம் பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் உள்ள கடனுக்கு ஆலை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டு, இந்த போலிக் கடன் பிரச்சனையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். எட்டு மாதங்களாக போராடி வரும் விவ சாயிகளின் கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும். முதலமைச்சர் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தை முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
கூட்டுறவு சர்க்கரை ஆலையாக மாற்றுக!
முன்னதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “திரு மண்டங்குடி கரும்பு விவசாயிகள் பிரச்சனை குறித்து மாநில அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. கால்ஸ் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. எனவே கால்ஸ் நிறு வனம் எவ்வளவு பணம் கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருக்கிறார்களோ, அந்த பணத்தை கொடுத்து மாநில அரசு சர்க்கரை ஆலையை எடுத்து நடத்த வேண்டும். இதனை கூட்டுறவு சர்க்கரை ஆலையாக மாற்றி, டெல்டா மாவட்ட கரும்பு விவசாயிகளை பாது காக்க வேண்டும். 248 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கை அரசின் செவிகளுக்கு எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது” என்றார்.
அரசு உத்தரவை ஏற்க மறுக்கும் கால்ஸ் நிறுவனம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், ரூ.1,500 கோடி மதிப்புள்ள இரண்டு சர்க்கரை ஆலைகளையும் கால்ஸ் நிறுவனம் வெறும் 150 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கக் கூடிய உத்தரவை கால்ஸ் நிறுவனம் ஏற்க மறுக்கிறது என்றால், மாநில அரசாங்கம் இந்த ஆலையை ஏற்று கூட்டுறவு நிறுவனமாக நடத்த வேண்டும் என்றார்.