states

img

எஸ்.பி.வேலுமணி வழக்கு: அக்.12இல் இறுதி விசாரணை

சென்னை,செப்.22- மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு  மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு சென்னை உயர்  நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்த தாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பரா சரண் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018 இல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;