சென்னை,செப்.16- தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1 என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறி முறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1. என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிக ளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். இதில் இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அனைத்து மருத்து வமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் , 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தை கள், தீவிரமான சுவாசப் பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சனைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூயன்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கியுள்ளார்.