states

கேரள வெளிநாடுவாழ் மலையாளிகளின் நலன் காக்கும் நோர்க்கா ரூட்ஸ்

கேரள முதல்வரைத் தலைவராகக் கொண்டு கேரள வெளிநாடுவாழ் மலையாளிகளின் நலன்சார்ந்து இயங்கிவரும் நோர்க்கா ரூட்ஸ் எனப்படும் அமைப்பு வெளிநாடுவாழ் மலையாளிகளுக்காக பல்வேறு சேவைகளைப் புரிந்து வருகிறது.  வெளிநாட்டிற்கு வேலைதேடிச் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடைமுறைகள், விசா ஏற்பாடுகள், பல்வேறு வேலைகள் குறிப்பாக மருத்துவச் செவிலியர்கள் வேலைக்கான பல்வேறு நாடுகளுடனான ஒப்பந்தங்கள், தூதரக சான்றளிப்பு, அடையாள அட்டைகள் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை நோர்க்கா ரூட்ஸ் செய்துவருகிறது. வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டுத் தாயகம் திரும்புவோர் பயனடையும் வகையில் அவர்களுக்கான பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களை நோர்க்கா அமல்படுத்திவருகிறது. வெளிநாடுவாழ்வோர் பாதுகாப்பு பியர்ல் திட்டம் (ரூபாய் இரண்டு லட்சம் வரை), மைக்ரோ திட்டம் (ஐந்து லட்சம் வரை) மெகா திட்டம் (இரண்டு கோடி வரை) என்.டி.பி.ஆர்.இ.எம். திட்டம் (30 லட்சம் வரை) போன்ற பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.