states

img

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தைக் காணவில்லை

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பொய்யுரைக்கு பதிலடிகொடுத்ததோடு, தாமதத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது தான் காரணம் என குற்றம்சாட்டி அடையாளப்பூர்வ போராட்டம் நடத்திய மக்களவை உறுப்பினர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர். 

திருப்பரங்குன்றம், செப்.23- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாண வர் சேர்க்கை இடங்களும் 100ல்  இருந்து 250 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடி யும், தொற்று நோய்ப் பிரிவுக்கு கூடுத லாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வியாழனன்று மதுரையில் தெரிவித்திருந்தார். ஜே.பி.நட்டா கூறியது போல் 95 சதவீத பணிகள் தங்களுக்குத் தெரி யாமல் எப்படி நடந்தேறியது என  அதிர்ச்சியடைந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும், விருது நகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் வெள்ளியன்று எய்ம்ஸ் மருத்துவமனை வளா கத்திற்கு வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., புல்புல் பறவைகள் மூலம் 95  சதவீத வேலையை  முடித்த மதுரை  எய்ம்ஸ் கட்டடத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும்  வந்துள் ளோம். செய்தியாளர்களாகிய நீங்களும் வந்துள்ளீர்கள். கீழ்வானம் வரை மதுரை கிழவி  வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடக்கிறது நிலம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ரூ.1,200 கோடியில் முடியும் என தீர்மானிக்கப்பட்டிருந்த பணிகால தாமதத்தால் ரூ.1,900 கோடி யாக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமே கட்டப்படு கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணி மட்டுமே ஜப்பான் நிறு வனத்தின் நிதியுதவிடன் செயல் படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 80 சத வீதம் முதல் 90 சதவீத நிதியை ஜப்பான்  நிறுவனம் வழங்குகிறது. 10 முதல் 20 சதவீத நிதியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது.

டெண்டர் விடுவதே முடக்கம்

சமீபத்தில் ஒன்றிய சுகாதாரத் துறை செயலரை சந்தித்துப்பேசிய போது, எய்ம்ஸ் பணிகள் அப்படியே தான் உள்ளது என்றார். குறிப்பாக ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.1,900 கோடியாக மதிப்பீட்டுத் தொகை உயர் ந்துள்ளது. இதில் உயர்த்தப்பட்ட தொகையில் ஒன்றிய அரசின் பங்குத் தொகைக்கு ஒன்றிய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததால் டெண்டர் விடும் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. பொய்  பேசுவதே பாஜக-வினரின் வேலையாக உள்ளது. இங்கு வந்து பார்த்தால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் மாயமாகிவிட்டது. வைக்கப்பட்ட செங்கலையும் காண வில்லை என்றார்.

அறியாமையில்  பேசும் அண்ணாமலை

மாநில அரசு நிதியளித்தால் எய்ம்ஸ்  பணிகள் விரைவாக நிறைவடையும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறாரே? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், “அண்ணாமலை அறியாமையால் பேசுகிறார். “இந்தி யாவில் எந்த எய்ம்ஸ் மருத்துவமனை க்கும் மாநில அரசு நிதி வழங்க வில்லை. ஒன்றிய அரசின் நிதி மூலமே மருத்துவமனைகள் அமைக்கப்படு கின்றன. மாநில அரசின் பங்களிப்பு என்பது நிலத்தை ஒதுக்கீடு செய்து தரு வது மட்டுமே. நிலம் ஒதுக்கித் தரும்  பணியை மாநில அரசு நிறைவேற்றி யுள்ளது. பணிகள் தாமதமாவதற்கு  காரணம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காதது தான் என்றார்.

அரசாணையை வெளியிடவேண்டும்

மதுரை விமான நிலையத்தை சர்வ தேச விமான நிலையமாக மாற்றுவது குறித்துப் பேசிய நட்டா, ரூ.550 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியதாக கூறி யுள்ளாரே என்ற கேள்விக்கு சு.வெங்க டேசன், “நிதி ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை ஒன்றிய பாஜக அரசு வெளியிட வேண்டும்” என்றார்.

காணாமல் போன  கிணறு கதையா?

விருதுநகர் மக்களவை உறுப்பி னர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “கிணற்றைக் காணவில்லை” என காமெடி போல் உள்ளது ஜே.பி.நட்டா வின் பேச்சு. காணாமல் போன கிணற்றை கண்டுபிடிக்க காவல் துறையுடன் நடிகர் வடிவேலு வருவார். அதைப் போல கட்டிமுடிக்கப்பட்ட “எய்ம்ஸ் மருத்துவமனையைத் தேடி”  வந்துள்ளோம். இங்கே வந்து பார்த்தால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையையும் காணவில்லை. வைத்த ஒரு செங்கலையும் காணவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தையும் காணவில்லை. பொய்பேசி, தவறான செய்திகளை மதுரை மக்களிடமும், தமிழக மக்களிடமும் ஜே.பி.நட்டா  கூறிச் சென்றுள்ளார். இந்த உண்மை யை தமிழகம் முழுமைக்கும் தெரியப் படுத்த வேண்டியது எங்களது கடமை என்றார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் ஜெயக்குமார், தீத்தாரப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். ஜே.பி. நட்டாவின் பேச்சு மோசடி யானது என்பதை நிரூபிக்கும் வகை யில், 95 சதவீதம் பணிகள் நிறை வடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்ற பதாகைகளை ஏந்தி நின்ற னர் மருத்துவமனையை பார்வையிட வந்தவர்கள்.
 

 

;