சென்னை, டிச.4- ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள், 1987ஆம் ஆண்டு முதல் விமானத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப் போது முதலே சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இருந்து வருகிறது. தற்போது முதன் முறையாக சென்னை விமான நிலையம் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், கொரோனா பரவல் காரண மாக சவூதி அரேபிய அரசாங்கமே வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது.
அதனால் இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை பாதிக்கப்பட்டது. இப்போது நிலைமை ஓரளவு சீராகியுள்ள பின்னணியில் சென்னையை மட்டும் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது நியாயமல்ல. ஒருவேளை கொரோனா பெருந்தொற்று பரவலை காரணமாக சுட்டிக்காட்டினாலும் கூட, இங்கிருந்து கொச்சிக்கு 700 கிலோமீட்டர் பயணம் செய்து, அங்கிருந்து விமானத்தில் புறப்படுவது எந்த வகையில் பாதுகாப்பு என்ற கேள்வியை முன்வைத்தும், சென்னையில் இருந்து புறப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தி யும் 2021 நவம்பர் 5 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அமைச்ச ருக்கு கடிதம் எழுதினார்.
இதே கோரிக்கைக் காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பிரத மருக்கு 2021 நவம்பர் 11 அன்று கடிதம் எழுதி யுள்ளார். முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னை யிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ளனர் என்றும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணம் மேற் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதுபற்றி நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பிய போது, பதில் அளித்த ஒன்றிய பாஜக அமைச்சர் ‘தமிழக அரசிட மிருந்து கோரிக்கை எழவில்லை’ என அடிப்ப டையற்ற தவறான தகவலை சொல்லியுள்ளார். இது நாடாளுமன்ற உரிமை மீறல் ஆகும். மேலும், சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, எல்லாரையும் கலந்தா லோசித்து எடுத்த முடிவு என்கிறார். ஆனால் இது குறித்து தமிழக அரசை கலந்தாலோ சிக்கவில்லை. தொடர்ச்சியாக, ஒன்றிய அரசாங்கம் தமிழ கத்திற்கு இழைத்துவரும் அநீதிகளின் பட்டிய லில் இதுவும் சேர்ந்துகொண்டுள்ளது. உடனடி யாக, ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்தும் புறப்படுவதற்கான ஏற்பாட்டை ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.