states

மக்களின் போராட்டங்களுக்கு ஆயுதமாக திகழும் தீக்கதிர்

சென்னை, ஜூலை 11 - மக்களின் போராட்டங்களுக்கு ஆயுதமாக தீக்கதிர் திகழ்வதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான  மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.  மத்திய சென்னை மாவட்டம் சார்பில் திங்க ளன்று வழங்கப்பட்ட 509 தீக்கதிர் சந்தாவுக்கான தொகையை பெற்றுக்கொண்டு அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: திருவல்லிக்கேணியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய சந்தா சேகரிப்பு இயக்கம், ஆயிரம் விளக்கு பகுதி பகத்சிங் சிலைக்கு மாலை  அணிவித்து நிறைவு செய்துள்ளோம். தேனீக்கள் சென்று பூக்களில் தேன் சேகரிப்பதை போன்று மாவட்டம் முழுவதும் தோழர்கள் சந்தாவை சேகரித்து தேனடையாக தந்துள்ளனர். எனவே, தீர்மானித்துள்ள இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு கர்ணன், மாமன்னன் படங்கள் வந்துள்ளது. காவிரி தொடங்கும் குடகில் பிறந்த தோழர் பி.சீனிவாசராவ், கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டத்திற்கு கொடியேற்றிவிட்டால், பட்டியலின தலித்துகள் திருத்துறைப்பூண்டி நகரத்திற்குள் செல்லக் கூடாது. கட்டுப்பாட்டை மீறினால் கட்டி வைத்து விடுவார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறு

இந்த நிலையில், தோழர் வேயண்ணா மனைவியை பாம்பு  கடித்து விட்டது. திருத்துறைப் பூண்டிக்கு சென்று நாட்டு மருந்து  கடையில் மருந்து வாங்கியவரை பிடித்து கட்டி வைத்து விட்டனர்.  இதனையறிந்து சென்ற பி.சீனிவாசராவ், காட்டுமிராண்டி தனமான முறையை ரத்து செய்யும்  வரை தேர் ஓடாது என்று போராட்டத்தை தொடங்கினார். 12 நாட்கள் தேரை ஓட விடாமல் செங்கொடி இயக்கம் நிறுத்தி வைத்தது. அந்த கொடிய உத்தரவு தகர்த்தெறியப்பட்டு, அனைத்து மக்களும் தேரை இழுத்து செல்லும்  நிலை உருவானது. அத்தகைய போராட்டம் நடத்திதான் இயக்கத்தை வளர்த்துள்ளோம். இது தான் கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறு.  ‘ஜனசக்தி’ ஏட்டை கொண்டு வருவதி லும் அவர் மிகப் பெரும் பங்காற்றினார்.

சிந்தனை சிற்பி 

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர், 40 வயதுக்கு பிறகுதான் சட்டம் படித்து வழக்கறிஞரானார். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உயர்நீதிமன்றம் சென்ற அவரை சக வழக்கறிஞர்கள் அவமதித்தனர். அடுத்தநாள், சட்டப் புத்தகங்களை வலைக்குள் போட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று அதிர்வை உருவாக்கிய புரட்சியாளர். உலக புரட்சியாளர்கள் அனைவருமே படிப்பாளிகளாக, சிறந்த வாசிப்பாளர்களாக இருந் துள்ளனர். பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்லும் முன் லெனின் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார். தீக்கதிர் பத்திரிகையை வளர்ப்பது இடதுசாரி அரசியலை விதைப்பது போன்றது. தொழிலாளி வர்க்கத்தின் அரசியலை கொண்டு செல்ல மிகுந்த இடர்பாடுகளுக்கும், இன்னல்களுக்கும் இடையில் நாளிதழை நடத்துகிறோம். திருவல்லிக்கேணியில் கரையோர குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கட்சி போராடி வருகிறது. அத்தகைய போராட்டங்களுக்கு தீக்கதிர் நம்முயை ஆயுதம், வாள், கேடயம் என்கிற உணர்வோடு தவம்போல் அரும்பணியாற்றி இலக்கை நோக்கி சென்றுள்ளோம்; சிங்காரவேலரோடும், பகத்சிங் கோடும் தொடர்ந்து முன்னேறு வோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வுகளின் போது தீக்கதிர் சி.கல்யாணசுந்தரம், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வே.ஆறுமுகம், வி.தனலட்சுமி, இ.சர்வேசன், எஸ்.சிவசுப்பிரமணி யம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;