states

கட்சி தாவலுக்கு கடவுள் அனுமதி தந்தாரா?

மதச் சார்பின்மை பேசும் இடதுசாரிகள் கடவுளை, மதத்தை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் மதத்தின் பாதுகாவலர்கள் போல வேடம் போடுபவர்கள்தான் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிறார்கள். இதோ கண் முன்னால் கோவா சாட்சியம். முன்னாள் முதல்வர் திகம்பர்  காமத் தலைமையில், கோவா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபா  உட்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர், புதன்கிழமையன்று திடீரென பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரமோந்த் சாவந்தைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தி பாஜக வில் அவர்கள் இணைந்து விட்டதாக அறிவித்தனர். இவர்களின் அப்பட்டமான அரசியல் சந்தர்ப்ப வாதத்திற்கு  பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

“தேர்தலின்போது, கட்சி தாவமாட்டோம் என்று கோயிலில் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆனது?” என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி  வந்தனர். இதற்கு கட்சித் தாவலை தலைமையேற்று நடத்திய முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திகம்பர் காமத் பதிலளித்துள் ளார். அதில், “நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். சொல்லப் போனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்தது எல்லாம் உண்மைதான். ஆகவே தான் இப்போது மீண்டும் கோயிலுக்குச் சென்றேன். கடவுளிடம்  பாஜகவில் சேரும் எண்ணம் என் மனதில் இருப்பதைத் தெரிவித்தேன். என்ன செய்ய என்று கேட்டேன். கடவுள் சொன்னார். நீ நினைப்பதை செய், கவலைப் படாதே என்றார்”. எனக் கூறியுள்ளார். இதைவிட மதத்தை வேறு யாராவது இழிவு செய்ய இயலுமா? மத நம்பிக்கைகளை மலிவான அரசியலுக்கு பயன்படுத்தும் இவர்களின் செயலை விட மோசமானது எதுவும் இருக்க முடியுமா? இதற்கல்லவா கோபம் வர வேண்டும்!

இஸ்க்ரா