சென்னை,ஜூன் 14- நடப்பாண்டு சாகுபடிக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியம் உறுதி செய்யக்கோரி ஜூன் 17 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டும். மேட்டூர் அணையில் நீர் இருப்பு 45 அடிக்குள் உள்ளதாலும், நீர்வரத்து மிகக் குறைந்த அளவே வருவதாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு கடந்தாண்டு காவிரியில் தண்ணீர் திறக்காததால் தற்போது மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதற்கு பிரதான காரணமாகும். ஜுன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். தற்போதுள்ள நிலையில் குறுவை சாகுபடி நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில் காவிரியில் கர்நாடக அரசு அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கையாண்டு வருகிறது. கடந்தாண்டு தமிழ்நாட்டிற்கு சுமார் 99 டி.எம்.சி தண்ணீரை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்தாண்டு ஜுன் மாதத்தில் 9.19 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும். எனவே, நடப்பாண்டு சாகுபடிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியம் உறுதிப்படுத்திட வலியுறுத்தியும், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு மாறாக காவிரியில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளை கண்டித்தும், ஒன்றிய அரசு இதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், காவிரியில் தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை பாது காத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜூன் 17 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் மாவட்ட/வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகளும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.