ஜெய் ஸ்ரீ ராம்
கோசமிட்ட “வானரங்கள்”
பரிசாக கிடைத்த தோல்வியை
எந்த முழக்கமிட்டு வரவேற்பார்கள்.
மைதானங்களை கைப்பற்றி
பெயர் சூட்டிக்கொண்டவர்கள்
வெற்றியை விலைக்கு வாங்க
முடியாமல்
தோற்றுப்போனார்கள்.
அரசியல் சூதாட்டக்காரர்களால்
மட்டைப்பந்தாட்ட வீரர்கள்
பலியானார்கள்.
வான் சாகசங்களில்
பூத்தூவி மகிழ்ந்த
காவி முகங்களில்
தோல்வி
காரி உமிழ்ந்திருக்கிறது.
எல்லாவற்றிலும்
மதங் கலந்தார்கள்
விளையாட்டும்
ஒரு வினைப்பயனாய் மாறி
பாடம் நடத்தியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து வெளியேறி
பாரதமென்று படையெடுத்தார்கள்
மணிமுடி யெங்கும்
மண் பூசி நின்றார்கள்.
தோற்றாலும் வீரன்
வெற்றிக்கு கைகொடுப்பான்
கோப்பையை கொடுத்த கோழை
“கோ”வென்று அழுது ஓடுகிறார்.
வெற்றியும் தோல்வியும்
வீரர்களுக்கு மட்டுமே அழகு
அழுகுணி அரசியல்
ஊளைகளுக்கல்ல.
எமது இந்திய வீரர்கள்
மீண்டும் ஜெயிப்பார்கள்
அப்போது
விளையாட்டரங்கம்
இந்திய மக்கள் வசம் இருக்கும்
அன்றெழுப்பும்
ஒற்றை முழக்கத்தில்
எந்த மதமும் கலந்திருக்காது.
- செ. தமிழ்ராஜ், மதுரை