states

img

மோடி அரசின் மோசடிக்கு வக்காலத்து வாங்குவதா? தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

விழுப்புரம்:
விவசாயிகள் பிரச்சனையில் மோடி அரசு இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி னார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் விழுப்புரம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 4 வெள்ளியன்று  நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விவசாயிகளுக்கு விரோதமாக 3 சட்டங்களை மோடி அரசு அமல்படுத்திஉள்ளது. இதனால் இனி அரசுகொள்முதல் இருக்காது, குறைந்த பட்ச ஆதார விலை இருக்காது. ஒப்பந்தவிவசாய சட்டத்தின்படி ஒப்பந்த விலை கிடைக்கும் என கூறுகிறார்கள்.  புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக பிரதமர் கூறுகிறார்.ஒருபுறம் மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பிரதமர்பிரமாதமான சட்டம் என பாராட்டி பேசுகிறார். பிரதமர் இரட்டை வேடம்போடுகிறார். ஒப்பந்த விவசாயத்தின் படி ஒப்பந்த விலை வாங்கிக் கொடுப்பேன் என ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியா முழுவதும் கரும்புவிவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் சர்க்கரை ஆலைகள் கரும்பை கொள்முதல் செய்து வருகின்றன. கரும்பு விலையை மாநில அரசு தீர்மானிக்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள முதலாளிகள் மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை கொடுக்க முடியாது என மறுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதிலும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை முதலாளிகள் 60 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் ரூ. 8,000 கோடி பாக்கி வைத்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு  சர்க்கரை ஆலை முதலாளிகளிடம் இருக்கிற பாக்கியை மோடி வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே?

இந்த ஒப்பந்த விலை என்பது விவசாயிகளை ஏமாற்றும் மோசடி வேலை.இந்த மோசடி வேலையைத்தான் மோடிநல்லது என கூறுகிறார். அதற்கு தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வக்காலத்து வாங்கி, அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை எனக் கூறுகிறார். எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், 2020 மின் மசோதா திருத்த சட்டம் ஆகியவற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும், தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, தலைவர் வி.அர்ச்சுணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்டிஓ.முருகன், தலைவர் பி.சிவராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சித்ரா, தலைவர் எஸ்.நீலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்டச் செயலாளர் ஆ.சவுரிராஜன், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

+++++++++++++++++++++++++++

விவசாயிகளுக்கு ஆதரவாக  நாடு முழுவதும் எழுச்சி... போலீசார் தடியடி, பல்லாயிரக்கணக்கானோர் கைது

புதுதில்லி:
அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் சார்பிலும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பிலும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவில் மாநிலம் முழுவதும் டிசம்பர் 2 அன்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்தும் மக்கள் பங்கேற்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, ஆயிரமாயிரமாய் மக்கள் அணிதிரண்டனர். சாலைகள் முடக்கப்பட்டன.  தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தெலுங்கானா விவசாயிகள் சங்க செயலாளர் டி.சாகர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.  ஆந்திராவில் 150 மையங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இங்கும் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் 21 மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ராஜஸ்தானில் 25 மாவட்டங்களிலும் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் போராட்டங்களில் கலந்துகொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல இடங்களிலும், ஒடிசாவில் 14 மாவட்டங்களில் 50மையங்களிலும் போராட்டங்கள் நடந்தன. ஒடிசாவில் பல இடங்களிலும் போராட்டக்காரர்கள் மீதுபோலீசார் தடியடி நடத்தினர். மத்தியப் பிரதேசத்தில் போலீசார் மத்திய கிசான் குழு உறுப்பினரான அசோக் திவாரியைக் கைது செய்து இழுத்துச்சென்றனர். 250-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தி லிருந்து தில்லி நோக்கி வந்த சுமார் 100 வாகனங்கள் பல்வால் என்னுமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.சத்தீஸ்கர்  மாநிலத்தில் 20 மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன. பீகாரில்மாநிலம் முழுவதும் அனைத்துத்தரப்பின ரும் ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. குஜராத்திலும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் சில மாநிலங்களில் தொடர் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தில்லி எல்லைப் பகுதியில் ஒருமைப்பாட்டு இயக்கங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு, போராடும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.பல மாநிலங்களும் டிசம்பர் 5ஆம்தேதி முதல் போராட்டத்தை மேலும் தீவிரமாக எழுச்சியுடன் நடத்திடவும், இதனை டிசம்பர் 10ஆம்  தேதி வரைக்கும் தொடர்வதற்கும் திட்டமிட்டுள்ளன. டிசம்பர் 5ஆம்தேதி அன்று நரேந்திர மோடி ,அமித் ஷா, அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் கொடும்பாவிகளை நாடு முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் எரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்போராட்டங்களில் இதர வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு மிகவும் விரிவான அளவில் இயக்கங்கள் நடத்திட வேண்டும் என்று தன்னுடைய அனைத்துக் கிளைகளுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் அசோக் தாவ்லே மற்றும்பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் அறைகூவல் விடுத்துள்ளனர். (ந.நி.)

;