states

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம்

சென்னை, டிச. 11- சென்னை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனை வருக்கும் நிவாரண நிதி வழங்கப் படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். அவர்,  மேலும் அவர் கூறியதாவது: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யால் சென்னைக்கு வரவிருந்த பேராபத்து தடுக்கப் பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருந்த இடங்களில் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அரசின் போதிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சியினர் அவ தூறு பரப்பி வருகின்றனர். புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரை அமைச்சர்கள் களத்தில் உள்ளோம். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டது. தில்லியில் உள்ள தலைவர்கள் போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. கொரோனாவைப் போல மிக்ஜம் புயல் பாதிப்பும், முதலமைச்சர் திறம்பட கையாண்டுள்ளார். மேலும், நிவாரண நிதி வழங்கு வதில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. வரியை கொடுப்பதில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது.  ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்குவதாக அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார். அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 10 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு சார்பில் எந்த ஒரு விவரத்தையும் மூடி மறைக்கவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசிடம் பேசி ரூ.5,000 கோடி நிவாரணத் தொகை பெற்று தர வேண்டும். மிக்ஜம் புயலை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர் கொண்டுள்ளது. சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு களை அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.

டிச. 16 முதல் டோக்கன்
சென்னையை பொறுத்தவரை அனைவருக்கும், அதாவது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். அடுத்த 10 நாட்க ளுக்குள் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கும். மேலும், திருவள்ளூர் உள்ளிட்ட இதர மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வட்டங்கள், பாதிக்கப்பட்ட தாலுகாக்கள் என கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்கப் படும். காஞ்சிபுரம்  மாவட்டத்தில் எத்தனை வட்டங்கள் பாதிக்கப் பட்டன, எத்தனை தாலுகாக்கள் பாதிக்கப்பட்டன என்பதை கணக்கெடுப்பது, அந்த தாலுகா மற்றும் வட்டங்களில் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார். தற்போதைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை குடும்ப அட்டை அடிப்படையில்தான் கணக்கெடுத்துள்ளனர். குடும்ப அட்டை இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசுக்கு முறையீடு செய்து நிவாரணம் பெறலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.