விழுப்புரம்,அக்.12- கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், பொருளாளர் கே.பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், மழையில் பாதிக்கப்பட்டு உள்ள நெல் பயிர்களை அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதா 2022 யை திரும்பப் பெற வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம், கடலூர், கிருஷ்ண கிரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்கள் நீர் ஆதாரம் பெரும் தென் பெண்ணை ஆற்றில் உடைந்த எல்லீஸ் சத்திரம், தளவனூர் தடுப் பணைகளை தரமானதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.