states

காதல் தம்பதியரை திருவிழாவில் அனுமதிக்க வேண்டும்!

உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை, ஜூலை 7-   பட்டியலினத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது கணவரையும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தொட்டியம் பகுதியைச் சேர்ந்த  வனிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் ஒரு மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.  அதில், “நான் திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்.  இதனால் ஊரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன்  மற்றும் மகா மாரியம்மன் கோவிலில் உள்ளே  என்னையும் எனது கணவரையும் அனுமதிக்க  கோவில் கமிட்டி உறுப்பினர்கள் மறுக்கின்ற னர். மேலும் கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.  ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னிடம் வரியை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே, கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னுடைய வரியை ஏற்றுக் கொள்ளவும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய என்னையும், எனது கணவரையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி  புகழேந்தி முன்பு வெள்ளியன்றுநடைபெற்றது.  மனுதாரர் தரப்பில், கடந்த மூன்று வருடங்களாக கிராம நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து விசார ணை செய்தபோது ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோவில் திருவிழாக் களில் அனுமதி வழங்கப்பட்டதாக கமிட்டி உறுப் பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பு பதிலளித்தது.  கோவில் கமிட்டி தரப்பில், ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சி யில் யாரையும் கலந்து கொள்ளக் கூடாது என தெரிவிக்கவில்லை .அனைவரும் கலந்து  கொள்ள அனுமதி உண்டு என்று தெரி விக்கப்பட்டது.

ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

இதனையடுத்து நீதிபதி கூறுகையில், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் 3 வருடங்களாக கிராம மற்றும் கோவில் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற பழக்கம் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ளதா? என்பது குறித்த அறிக்கையை ஜூலை 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.  கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான மனுதாரரின் வரியை கிராம கமிட்டி பெற்றுக் கொண்டதையும், கும்பாபிஷேக நிகழ்ச்சி மற்றும் கோவிலில் மனுதாரர் அனுமதிக்கப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.