சென்னை,செப்.14- சென்னை பெரம்பூர் அருகே உள்ள 74ஆவது வட்டத்தில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்களை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு : சென்னை மாநகராட்சி மண்டலம் -6, கோட்டம் 74க்குட்பட்ட ஏகாங்கிபுரம், சேமத்தம்மன் காலனி, ராஜீவ்காந்தி நகர், டேங்க் பண்ட் ரோடு மற்றும் கொன்னுர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் 940 குடும்பங்கள் கடந்த இரண்டு தலைமுறைகளாக தொடர்ந்து வசித்து வருகின்றனர். மேற்படி குடும்பங்களில் பலர் சொத்து வரி கட்டி வருவதுடன், மின் இணைப்பு, ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி குடும்பங்களுக்கு கூடுதல் கோட்ட தென்னக ரயில்வே மேலாளர் 15.03.2022 அன்று அனுப்பிய கடிதத்தில் மக்கள் குடியிருக்கும் நிலம் ரயில்வேக்குச் சொந்தமானது என்றும், மேற்படி மக்களை அங்கிருந்து காலி செய்ய வேண்டுமெனவும், 5.4.2022 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும் கடிதம் அளித்திருந்தனர். இது குறித்து தங்களுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் 6.5.2022 அன்று சிபிஎம் சார்பில் கடிதம் அளித்திருந்தோம். அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு குடியிருப்பை பாதுகாக்குமாறு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 4.5.2022 தேதியிட்ட கடிதத்தின் மூலம் 15 தினங்களுக்குள் மேற்படி குடியிருப்பை காலி செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் குடியிருப்பிலிருந்து அகற்றப்படுவீர்கள் எனக் கடிதம் அளித்துள்ளனர். மேற்கண்டவாறு ரயில்வே நிர்வாகம் கடிதம் கொடுத்தவுடன் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். மேற்கண்ட மக்கள் குடியிருக்கும் நிலம் ரயில்வேக்கு சொந்தமானதா என்கிற பிரச்சனை இருப்பினும் மேற்படி நிலம் ரயில்வேயின் பயன்பாட்டில் இல்லாத பகுதியாகும். மேலும், 02.03.1995 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் அவர்கள் “மேற்படி பகுதி குடிசைப் பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டது என்றும், வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் வெளியேற்றம் செய்ய இயலாது” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் விரோதக் கொள்கைகளை கடைப்பிடித்து வரும் ஒன்றிய மோடி அரசு தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலி நிலங்களை விற்று பணமாக்கும் வகையில்“நிலம் பணமாக்கல் கழகம்” என்பதை உருவாக்கியுள்ளது. மேற்படி திட்டத்தின் மூலம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா என்கிற சந்தேகம் எழுகின்றது. பல ஆண்டு காலமாக வசிக்கும் மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த நிலையில் அம்மக்களை அங்கிருந்து காலி செய்யச் சொல்லுவது அத்து மீறிய நடவடிக்கையாகும். இவர்களின் குழந்தைகளும் சுற்று வட்டார பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றியே இவர்களின் வேலை வாய்ப்பும் அமைந்து வருகிறது. ஆகவே, தாங்கள் தலையிட்டு பல்லாண்டு காலமாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாது காக்க ரயில்வே நிலங்களை கையகப் படுத்தி குடியிருப்பை பாதுகாக்கவும், இயலாத பட்சத்தில் அருகாமையில் மாற்று குடியிருப்பை உத்தரவாதம் செய்யவும், அதுவரை இக்குடியிருப்பில் குடி யிருக்கும் மக்களை அங்கிருந்து அகற்றாத வாறு பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.