states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தடகள வீரருக்கு முதல்வர் பாராட்டு 

ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தமிழ்நாட்டின் செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வருவதற்கு பாராட்டுகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் எய்ம்ஸ் முடியுமாம்!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து, மதுரை தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 2019 ஜன. 27 அன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் “5 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கானப் பணிகள் நிறைவுபெறும். மேலும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட ஒன்றிய அரசு ரூ.2,145 கோடி ஒதுக்கியுள்ளதாக”, ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் கூறினார். 

“முச்சதம்” அடித்த இஞ்சி 

காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளை வாங்க மக்கள் வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கும் சாம்பார் வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஞ்சி ரூ.190-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.300-க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு காரணமாக  இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி  இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக முத்துசாமி நிய மிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

விசாரணை தேதி இன்று முடிவு

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தேதி குறித்து  வெள்ளியன்று முடிவு எடுக்கப்படும் என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில்கொள்ள வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு வஞ்சகம் இழைப்பதா?

சரக்கு போக்குவரத்திற்காக உத்தரப்பிரதேசம், குஜராத் உட்பட 9 மாநிலங்கள் வழியாக செல்லும் சரக்கு ரயில் பாதையை பிரதமர் மோடி வெள்ளியன்று தொடங்கி வைக்கிறார்.  ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சரக்கு ரயில்களுக்கான தனி பாதை அமைக்கும் பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கான எந்த ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ இதுவரை செய்யப்படவில்லை. இது நீடிக்குமானால், வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானம்

கொரோனா தாக்கத்தால் 2022-ம் ஆண்டு டிசம்பர் 12 தேதியிலிருந்து சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் மட்டும் செயல்பட்டது. இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்,  அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் ஜூலை 16 முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

விளையாட்டை மேம்படுத்த ரூ.2 கோடி

சிப்காட் சார்பில் நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR Fund) கீழ் விளையாட்டு போட்டி களை மேம்படுத்துவதற்காகவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும் ரூ.2 கோடி நிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வியாழனன்று வழங்கினார்.

அமலாக்கத்துறைக்கு உத்தரவு 

செந்தில் பாலாஜி வழக்கில் அனைத்து ஆவணங்களை யும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கை சனிக்கிழமை முழு நாள் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்படும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடி, ஜூலை 6- சுழல் காற்று காரணமாக தூத்துக்குடி யில் மீனவர்கள் 3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் சுழல் காற்றானது 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் 3ஆவது நாளாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசை படகு மீனவர்கள் மற்றும்  தாளமுத்து நகர், ராஜபாளையம், திரேஸ்புரம், இனிகோ நகர், புதிய துறைமுகம் கடற்கரை நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க  செல்லவில்லை.  தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதே போன்று இனிகோ நகர் புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வெள்ளப்பட்டி, சிலுவைப்பட்டி  மீனவ கிராமத்தில்  உள்ள நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்கள்.

‘பழங்குடியின சமூகம் பாஜகவை மன்னிக்காது’

“எத்தனை கால்களை கழுவினாலும் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பழங்குடி யின சமூகம் மன்னிக்காது” என, பாஜக தலைவர் பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த பழங்குடி யின தொழிலாளியின் கால்களை மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கழுவும் வீடியோ வுக்கு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பணம் கேட்டு மிரட்டினாரா?

குஜராத் பாஜக இளைஞரணி தலைவர் பிரசாந்த் கோரட்டிடம் இருந்து பணம், வைரங்கள் கேட்டு மிரட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணையில் பாஜக எம்பி தேஜஸ்வி  சூர்யாவின் போன் மூலம் மிரட்டல் வந்ததாக தெரியவர, தனது கையடக்கத் தொலைபேசியை யாரோ  திருடிச் சென்றதாகவும், பிரசாந்த் கோரட்டிடம் இருந்து பணம், வைரங்கள் கேட்டு மிரட்ட தனது மொபைல் போன் பயன்படுத்தப்பட்டதாகவும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா சமாளித்துள்ளார்.

‘ஷிண்டே ஒரு மாதத்தில் இடைநீக்கம் செய்யப்படலாம்’

“மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் செயலுக்காக (ஆட்சி கவிழ்ப்பு) ஒரு மாதத்தில் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படலாம். ஷிண்டேவையும் அவரது 16 எம்எல்ஏக்களையும் தூக்கி எறிந்தால் முதல்வர் பதவி அஜித் பவாருக்கு வரலாம்” என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். 

காங்கிரசில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர்கள்

குஜராத் மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள 5 ஆம் ஆத்மி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் 5 பேர் மட்டுமல்லாமல், தனது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டரோடு குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் கரைந்தனர்.

‘கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார்’

“கர்நாடகா போன்ற மாநிலங்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வ தற்காக இந்திய உணவுக் கழகத்திற்கு (எப்சிஐ) கிலோ ஒன்றுக்கு ரூ.34 செலுத்தத் தயாராக  உள்ளன. ஆனால் இதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. காரணம், ஏழைகளின் உணவுப் பாது காப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட எத்தனால் உற்பத்திக்கான அரிசியை வழங்கு வதற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கர்நாடக மக்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசை வேரோடு அகற்றுவோம்: லாலு

“யார் மீதும் மோடி அரசு விருப்பப்படி வழக்குப் பதிவு செய்கிறது. அதிகப்படியான அநீதி, சித்ர வதை நல்லதல்ல. இதுபோன்ற குற்றம் புரிபவர் நீண்ட காலம் ஆட்சி செய்ய மாட்டார்கள்.  நாங்கள் மோடி அரசாங்கத்தை வேரோடு அகற்றுவோம்” என ஆர்ஜேடியின் 27-வது நிறுவன தின நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.

35 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டாடா ஸ்டீல்

ஒழுக்கமின்மை, பாலியல் துஷ்பிரயோகம், வட்டி முரண்பாடு, அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்துதல் போன்ற பிரச்சனைகளால் டாடா ஸ்டீல் நிறுவனம் 35 முக்கிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏற்கெனவே டாடா குழுமத்தின் டிசிஎஸ் வேலைக்காக லஞ்சம் பெற்ற புகாரில் 6 முக்கிய ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) மசோதா 2023இன் கீழ் புதிய வரைவு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. மசோதாவில் உள்ள விதிமுறைகளை மீறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என முன்மொழிவுகள் உள்ளன. 

ஜம்மு மகா காளி கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு

ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற மகா காளி கோவில் நிர்வாகம் பக்தர்கள், பார்வை யாளர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.  தலையை மறைக்குமாறும், ஷார்ட்ஸ் (ட்ரவுசர்கள்), மினி ஸ்கர்ட்கள், கிழிந்த ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிவதைத் தவிர்த்து ‘கண்ணியமாக’ உடை அணிந்து வரவேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எழிலகத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை,ஜூலை 6- சென்னை சேப்பாக்கம் எழிலகத் தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பொதுப் பணித்துறை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, புதன்கிழமை (ஜூலை 5) அரசு அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நீர்வளத் துறையின் கீழ் கடல் அரிப்பு  தடுப்புப் பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி  செயற்பொறியாளராக உள்ள பாஸ்கரன் அறையில் நடந்த சோதனையின் போது கட்டு கட்டாக பணம் சிக்கியது.  அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது  அதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 பணம் இருந்தது தெரியவந்தது. பின்னர், அந்த பணத்திற்கு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் கணக்கு கேட்டனர். ஆனால் அவர் உரிய  கணக்கு காட்டாததால் மொத்த பணத்தை யும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது.

நீதிமன்றத்தில்  வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை

செங்கல்பட்டு, ஜூலை 6- செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக லோகேஷ் என்பவர் வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் திடீரென அங்கு வந்த  ஐந்து பேர் கொண்ட கும்பல் லோகேஷை  அரிவாளால் வெட்டியது. இதிலிருந்து தப்பித்து ஓடியதால், கையில் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அந்த  கும்பல் வீசியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிக மாக கூடியிருந்ததால் அந்த கும்பல்  சம்பவ இடத்திலிருந்து தப்பித்து  ஓடிவிட்டது. தாம்பரம் அருகே உள்ள  இரும்புலியூரை சேர்ந்த லோகேஷ்  மீது தாம்பரம், ஓட்டேரி காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா

மாமல்லபுரம்,ஜூலை 6- சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டா வது ஆண்டாக இந்த திருவிழா மாமல்ல புரத்தில் நடைபெற உள்ளது. காற்றாடித் திருவிழாவில் இந்தியா வில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா,  வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடு களில் இருந்து கலைஞர்கள் பங்கேற் கின்றனர். வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட் களுக்கு பயன்படுத்தும் நைலான் வகைநூலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகை யில் பல வண்ணங்களில் 4 நாட்கள் காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது.  3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் மாமல்லபுரத்தில் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.