குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நாளாக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின்படி உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், 1964 இல் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளையும் ரோஜா மலர்களையும் மிகவும் நேசித்தவர். நாட்டின் சொத்தாக திகழும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), தேசிய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களை (NIT) உருவாக்கினார் நேரு. மேலும், 1955 இல் இந்திய குழந்தைகள், அவர்களின் சொந்த அனுபவங்களையும் கதைகளையும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை வழங்குவதற்காக இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தையும் நிறுவினார் ஜவஹர்லால் நேரு. குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும், சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய காலக் கட்டத்தில், குழந்தைகளின் கல்வி மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் தாக்குதல்களை ஒழித்துக்கட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.