மருத்துவ நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் எச்சரிக்கை
ஜலந்தர், அக். 17 - மருத்துவக் கல்லூரியில் இந்தியில் வழங்குவது, இந்திய மருத்துவத் துறையின் தரத்தை சீர்குலைத்து விடும்; 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்று பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்புகள், இதுவரை ஆங்கில வழியிலேயே வழங்கப் பட்டு வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் நாடு களும் ஆங்கில வழியிலேயே மருத்துவக் கல்வி வழங்கப்படுகின்றன. உலகின் மருத்துவ ஆராய்ச்சிகளும் ஆங்கிலத்திலேயே நடை பெற்று வருகின்றன. ஆனால், அனைத்திலும் இந்தி மொழியைப் புகுத்தும் நரேந்திர மோடி அரசு, தற்போது மருத்துவக் கல்வியிலும் இந்தியைப் புகுத்தியுள்ளது.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசு, மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான வேலையில் இறங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. எனினும், இந்தியாவில் முதன்முறையாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தி லுள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளின் முத லாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உயிர்வேதியியல் மற்றும் உடலியல் ஆகிய மூன்று எம்.பி.பி.எஸ். பாடங்கள் இந்தி மொழியிலேயே கற்பிக்கப்படும் நடைமுறை துவங்கியுள்ளது. இந்த திட்டத்தைத் துவங்கி வைத்து, பாடப்புத்தகங்களை வெளியிட்டுப் பேசிய உள்துறை அமித் ஷா, “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இனி கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்காது. அவர்கள் இனி தங்கள் சொந்த மொழியிலேயே பயில முடியும். தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூற, பிரதமர் நரேந்திர மோடியும் புளகாங்கிதம் அடைந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மருத்துவத் துறையில் இது ஒரு வரவேற்கத்தக்க தொடக்கமாகும். நாட்டில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. லட்சக் கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில்தான், இந்தி மொழிவழி எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு இந்திய மருத்துவத் துறையின் தரத்தை சீர்குலைத்து விடும் என்று இந்திய மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு சுகாதார அகாடமியின் முதன்மை ஆய்வாள ரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது மருத்துவக் கல்வி நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். படிப்பை வழங்கும் அரசின் நடவடிக்கை, நாட்டை 20 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துச் செல்லும். ரஷ்யா, சீனா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் மருத்துவ மாணவர்களுக்கு உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், அந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், இந்தியாவைப் போல் புகழ் பெற்றவை அல்ல. அதனால்தான், அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், நாம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறாதவரை, அவர்களை இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்ய அனுமதிப்பதில்லை.
அதேநேரம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிறு வனங்கள் உயர் புகழ் பெற்றுள்ளன. இந்த கல்வி நிறுவனங்கள் எல்லாம் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பிக்கின்றன. எனவே, தற்போது இந்தியாவிலுள்ள கல்வியின் தரத்தை அரசு சீர்குலைக்கக் கூடாது. இந்தியில் மருத்துவப் படிப்புகளை கற்றுத் தரக்கூடிய ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பது மத்தியப் பிரதேச அரசுக்கு சவாலாக இருக்கும். மேலும் ஆசிரியர்களுக்கு இந்தியில் பயிற்றுவிப்பதற்கு முழுப் பாடத்திட்டத்தையும் மொழிபெயர்ப்பதுடன் பயிற்சி அளிக்க வேண்டும், இது கடினமான செயலாகும். மருத்துவக் கல்வி எம்.பி.பி.எஸ் படிப்புடன் நின்றுவிடாது. விரைவில் முதுகலை மருத்துவப் படிப்புகளும் பிராந்திய மொழி களில் உருவாக்கப்பட வேண்டும்.
பலர் மருத்துவக் கல்விக்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரந்து விரிந்திருக்கும் உயர் மருத்துவக் கல்வி நிலையங்களை நோக்கி செல்கின்றனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் மருத்துவர் பணியாற்ற முடியாது. அவர்கள் பிற வாய்ப்புகளையும் தேட விரும்புவார்கள். தமிழ்நாடு, கேரளா என தென்மாநில மாண வர்கள் இந்தியில் சரளமான பேச்சுத்திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்தியில் மருத்துவக் கல்வி எனும் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும். எம்.பி.பி.எஸ். என் பது அடிப்படையில் பட்டப்படிப்பு அல்ல. உயி ராபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தை யும் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில், அரசின் நடவடிக்கை தென்னிந்தியா அல்லது வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமானதல்ல. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இத்தகைய பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள். இன்று மருத்துவப் பட்டதாரிகளில் கணிச மான பகுதியினர் ஆராய்ச்சி, வணிகம் மற்றும் நிர்வாகம், மருந்துகள் மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய துறைகளில் வேலை செய்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு (WHO), யுனிசெப் (UNICEF) போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை டாக்டர்கள் பின்பற்ற வேண்டும். இந்தத் துறைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இந்நிலையில், இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ முடியாது. இதனால் பிராந்திய மொழி, நடுத்தர பட்டதாரிகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருக்கும். மருத்துவப் பட்டதாரிகளிடையே மறைமுகமான படிநிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஆங்கிலவழி அல்லாத பட்டதாரிகள் தங்கள் சகாக்களை விட குறைவானவர்களாக நடத்தப்படுவர். இவ்வாறு டாக்டர் நரேஷ் புரோஹித் கூறியுள்ளார்.