states

அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி!

ரஃபா, மே 29 - உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3.6 கோடி இன்ஸ்டா சமூக ஊடகப் பயனாளர்கள் “அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி” என்ற படத்தைப் பகிர்ந்து, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.  பாலஸ்தீனர்களின் கடைசிப் புகலிடமாக உள்ள ரஃபா நகரில் ஊடுருவி இஸ்ரேல் ராணுவம்  தரைவழியாகவும் வான்வழியாகவும் கொடிய தாக்குதலை நடத்தி வருகிறது. கூடாரங்களில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களின் மீது ஈவிரக்கமின்றி  குண்டுகளை வீசி கொடூரமான முறையில் படுகொலை செய்து வருகிறது.  இந்த தாக்குதலால் குழந்தைகள் தலைவெடித்துச் சிதறியும் பலர் உயிருடன் எரிந்தும் போன பயங்கரம் அரங்கேறி வருகிறது. இந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆதரவுக்குழுக்கள் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மே  28 அன்று இன்ஸ்டா  ஊடகத்தை பயன்படுத்துகிற சுமார் 3.6 கோடி  பயனாளர்கள் “All eyes on rafah” “அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி” என்று எழுதப்பட்ட - செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட - புகைப்படத்தைப் பகிர்ந்து இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஏன் செயற்கை நுண்ணறிவு படம்?  மெட்டா நிறுவனத்தின் முதலாளியான உள்ள மார்க் ஸூக்கர்பெர்க் தீவிர வலதுசாரி பிற்போக்குவாதி ஆவார். தனது மெட்டா சமூக வலைத்தளங்களான  பேஸ் புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இஸ்ரேல் தலைவர்களை, அவர்களது போர்க்குற்றங்களை விமர்சித்து கருத்துக்களை பகிரும் போது அந்த பதிவுகளை  ‘பிரச்சனைக்குரிய பதிவுகள்’ என காரணம் கூறி, மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக நீக்கி வருகிறது. மேலும் கணக்கையே முடக்கி விடுகிறது. இந்நிலையில் தணிக்கையில் இருந்து தப்பிக்கவே,  இந்த செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தை உலகம் முழுவதும் இன்ஸ்டா பயனாளர்கள்  பகிர்ந்துள்ளார். அவரது நிறுவனத்தைப் பயன்படுத்தி, அவரது வலதுசாரி சிந்தனைக்கு எதிராகவே போர் தொடுத்துள்ளனர்.