states

பி.எம். கேர்ஸ் அறங்காவலர்களாக ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் நியமனம்!

புதுதில்லி, செப்.22 - பி.எம். கேர்ஸ் நிதியத்திற்கு தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் புதிய அறக்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில், 2020-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் பல்வேறு வகையான இடர்பாடு கள் ஏற்படும் போது, மக்களுக்கு உதவி செய்வதற்கு, பிரதமர் தேசிய நிவாரண நிதியம் (Prime Minister’sRelief Fund - PMRF) என்ற அமைப்பு இருக்கிறது. நிறு வனங்கள், அமைப்புக்கள், தனிநபர்களிட மிருந்து இந்த அமைப்புக்கு வரும் நிதி,  பிரதமர் அலுவலகம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடையும். இதற்கான வரவு - செலவுக் கணக்கு அரசால் பராமரிக்கப்படும் என்பதுடன், மத்திய  தலைமைக் கணக்கு அதிகாரியின் தணிக்கைக்கும் உட்படுத்தப்படும். இதுதான் இவ்வளவு காலமும் இருந்த நடைமுறை.

ஆனால், ஒன்றிய பாஜக அமைச்ச ரவையானது, கொரோனாவையொட்டி திடீரென பிரதமரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund- PM CARES FUND) என்ற நிதியமைப்பை, கடந்த  மார்ச் 27-ஆம் தேதி அவசர அவசரமாக உரு வாக்கியது. மேலும் இந்த அமைப்புக்கு பிரதமர்  மோடி தலைவராகவும், மூத்த அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் நியமித்துக் கொள்ளப் பட்டனர். அப்போதே, பிரதமர் நிவாரண நிதியம் என்ற பொது அமைப்பு இருக்கும் போது, புதிதாக இந்த அமைப்பு எதற்கு? என்ற  கேள்விகள் எழுந்தன. எனினும், இந்த அமைப்புக்கு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நன்கொடையாக பெறப் பட்டன. தனியார்களிடமிருந்தும் நன்கொடை கள் வசூலிக்கப்பட்டன. எனினும், இப்போது வரை இந்த நிதியத்திற்கு வந்த நன்கொடை - அதிலிருந்து செலவிடப்பட்ட தொகை குறித்து எந்த விவரமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை. “பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் மோடி, மற்றும் 3 உறுப்பினர்கள் தவிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் உட்பட கூடுதலாக 3 உறுப்பினர்களை நியமித்து, பொதுநல அறக்கட்டளையாக செயல்படுத்த வேண்டும்; இதில் திரட்டப்படும் நிதியை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும்;  அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடைவெளி யில் அந்த அறக்கட்டளையின் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என அரவிந்த் வாக்மாரே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கும் கூட தொடர்ந்தார். எனினும், அந்த கோரிக்கை அப்போது கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமை யில் செவ்வாயன்று பி.எம். கேர்ஸ் அறங்காவ லர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அறங்காவ லர்களான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா, நாட்டின் பிரபல தொழிலதிபர்- டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். “புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களின் பங்களிப்பு ‘பிஎம் கேர்ஸ்’ நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும்” என்று கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

;