states

பல் பிடுங்கிய விவகாரம் விசாரணை அதிகாரி அமுதா முன்பு மேலும் 3 பேர் நேரில் ஆஜர்

திருநெல்வேலி, ஏப்.18- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பை உதவி எஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது நெல்லை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10 ஆம் தேதி விசாரணை நடத்தினார். தொடர்ந்து திங்கட்கிழமை அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது 2 ஆம் கட்ட விசாரணையை தொடங்கினார். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16, 17 வயதுள்ள 2 சிறுவர்கள் ஆகிய 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சிவந்திபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, உள்பட 11 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அவர்களிடம் அதிகாரி அமுதா நள்ளிரவு 12.15 மணி வரை விசாரணை நடத்தினார். மேலும் 3 பேரும் விளக்கம் அளிக்க வந்திருந்த நிலையில் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்துசெவ்வாய்கிழமை  காலை 11 மணிக்கு 2 ஆவது நாளாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது வேதநாராயணன், மாரியப்பன், சுபாஷ் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இதற்கிடையே மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதாவை நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர்கள் அம்பை காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

;