ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மத்திய ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும், ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை குத்தி, அவர்களைஒடுக்கும் முயற்சி நடப்பதாக மக்கள்ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கட்சியின் இளைஞரணித் தலைவர் வகிதூர் ரஹ்மானை, ‘பயங்கரவாதி’ முத்திரை குத்தி என்ஐஏ (NIA) கைது செய்துள்ள நிலையில், மெகபூபா முப்தி இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.“பிடிபி கட்சியின் சார்பில் அதன் தலைவர்வகிதூர் ரஹ்மான் பாரா வேட்பு மனுதாக்கல் செய்தபின்னர், கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த14 மாதங்களாக காவலில் அடைக்கப்பட்டி ருந்தபோதிலும், ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார். ஆயினும் அவர்வேட்புமனு தாக்கல் செய்தவுடனேயே மத்தியஅரசு அவரைக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது. மத்திய அரசு, மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்களை நடத்தும்போது, குப்கார் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருப்பதன் மூலம், ஜனநாயகத்தைக் கொன்று கொண்டிருக்கிறது” என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார். “முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் எனவும், சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் எனவும், சமூக ஆர்வலர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றும், மாணவர்களை சமூக விரோதிகள் என்றும் பாஜக முத்திரை குத்துகிறது. இவ்வாறு நாட்டில் அனைவருமே பயங்கரவாதிகள் என்றால்,பின்பு, யார்தான் இந்துஸ்தானியர்கள்? பாஜக தொண்டர்கள் மட்டும்தானா?என்றும் அவர் கேட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு சொல்வது போன்று,அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்துசெய்ததன் மூலம், அனைத்துப் பிரச்சனைகளும் புதைக்கப்பட்டுவிட்டன என்பது உண்மை யானால், காஷ்மீரில் மட்டும் ஒன்பது லட்சம் துருப்புக்களை நிறுத்தி வைத்திருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.