states

img

ஜம்மு காஷ்மீர்  தேர்தலில் சிபிஎம் கூட்டணி வெற்றி

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி கன்வீனராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. 
மோடி அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்  370 வது பிரிவை நீக்கி உத்தரவிட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு  உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருவது. இந்தகூட்டணி  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மீண்டும் வலியுறுத்தியும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் போராடி வந்தன. இந்நிலையில்  முதல் முறையாக கூட்டணி இணைந்து மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சந்தித்தன. ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியா போட்டியிட்டன. 
தேர்தல் நேரத்தில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா துக்கடா குழுக்கள் எனவும், தேச துரோகிகள் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்து குப்கர் மக்கள் கூட்டணியை பெருவாரியான இடங்களில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மொத்தமுள்ள 280 இடங்களில் 278 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் குப்கர் மக்கள் கூட்டணி அதிக பட்சமாக 60இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 51 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் 111 இடங்களை கைப்பற்றி முதன்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கு அடுத்த நிலையில் பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்றும் 34 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றும் 13 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றும் 7 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. சுயேச்சைகள் 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் 27 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 
சிபிஎம் 
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள 8மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. பிகிபாத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர்  ருபிஜன் 643 வாக்குகள் வித்தியாசத்திலும், குல்காம் பி தொகுதியில் முகைதீன்லோன்  663 வாக்குகள் வித்தியாசத்திலும், பொம்பே தொகுதியில் முகமது அப்சல் பரே 461 வாக்குகள் வித்தியாசத்திலும், க்யோ பி தொகுதியில்  முகமத் அபாஸ் ரதேர் 1668 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.