states

img

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்... இன்று 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை....

திருவனந்தபுரம்:
கேரளத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கோவிட் தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியில், உள்ளாட்சி தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. மூன்றாம் கட்டத்தில் அதிக அளவாக 78.64 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின. மூன்று கட்டங்களிலுமாக 76.17 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி புதனன்று(டிச.16) காலை 8 மணிக்கு தொடங்கும். முதல்முடிவுகள் அரை மணி நேரத்தில்வெளியாகும்.

244 மையங்கள்
கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவானவாக்குகள் எண்ணிக்கை 244 மையங்களில்நடைபெற உள்ளன. கிராம பஞ்சாயத்துகளின்முடிவுகள் காலை 11 மணிக்குள் தெரியவரும். நண்பகல் வாக்கில் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையர் வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், மூன்று அடுக்கு பஞ்சாயத்துகளின் வாக்கு எண்ணிக்கை மண்டல அடிப்படையில் 152 மையங்களில் நடைபெறும். 86 நகராட்சிகள் மற்றும் ஆறு மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த மையங்களில் நடைபெறும் என்றார்.

தகவலுக்கான ‘டிரெண்ட்’
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல்ஆணையத்தின் ‘டிரெண்ட்’ வலைத்தளம் தயாராக உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் முடிவுகளும் மாவட்டம், கிராமம், தொகுதி, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகள் அடிப்படையில் இணைய தளத்தில் கிடைக்கும். வார்டுகளில் வாக்குச் சாவடி அடிப்படையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பினதும் எண்ணும் நிலையை அறிய முடியும்.

டிச.21ல் பதவியேற்பு
வெற்றி பெற்றவர்கள் டிசம்பர் 21 ஆம் தேதி மாநிலத்தில் உள்ளாட்சி மன்றங்களில் பதவியேற்பர். தேர்வான மூத்த உறுப்பினர் முதலில் சத்திய பிரமாணம் வாசித்து பதவி ஏற்பார். மற்ற உறுப்பினர்கள் அவரது தலைமையில் பதவியேற்பார்கள். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இந்த மாதம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் வி.பாஸ்கரன் தெரிவித்தார்.

;