states

img

ஆட்சியை விட்டு பாஜக வெளியேறும்: நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணி

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜக ஆட்சியை விட்டு வெளியேற்றப்படும் என இந்தியா கூட்டணிக் கட்சிகள் முழு நம்பிக்கையில் உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பாஜக, ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்கிற, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகும் பிரச்சாரக் கட்டத்தின் போதும் வெளிப்பட்ட ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணுவதற்குத் தலைவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். பாஜக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றாலும், தற்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் இணைந்து, ஆட்சிக்கு வரலாம் என, இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருதுகின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் முழுமையான வெற்றியை இந்தியா அணி எதிர்பார்க்கிறது. பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமைகள் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள கர்நாடகாவிலும், விவசாயிகளின் கோபம் பொங்கி எழும் பஞ்சாபிலும் பெரும் வெற்றி கிடைக்கலாம். தெலுங்கானாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து, பிஆர்எஸ் பலவீனமடைந்துள்ளதால், அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஆந்திராவில் இந்தியா கூட்டணிக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு தற்போதைய ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் ஆதரவைப் பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது. ஒடிசாவில் உள்ள இந்தியா கூட்டணிக்கு அதிக நம்பிக்கை இல்லை.

ஆனால், பாஜகவுக்கும், பி.ஜே.டி.க்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், பி.ஜே.டி.யை உடன் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். பீகாரில் தேஜஸ்வி யாதவ் 40 இடங்களிலும், உ.பி.யில் அகிலேஷ் யாதவ் 80 இடங்களிலும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், பாஜகவுக்கு உதவும் வகையில் உ.பி.யில் பல இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது கவலை அளிப்பதாகும். 48 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் 2019 இல் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களை வென்றது. ஆனால் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியதால், மகாராஷ்டிராவில் என்டிஏ விடம் இருக்கும் இடங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான், தில்லி, இமாச்சல் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் இடங்கள் குறையும் என்பதும்  இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். இறுதியாக தீர்ப்பு எழுதப்படும் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 சனியன்று  நடைபெறுகிறது.  இதில் ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். உ.பி மற்றும் பஞ்சாபில் தலா 13 இடங்களிலும், இமாச்சலத்தில் 4 இடங்களிலும், சண்டிகரில் ஒன்றும், பீகாரில் 8 இடங்களிலும், வங்காளத்தில் 9 இடங்களிலும், ஒடிசாவில் 6 இடங்களிலும், ஜார்க்கண்டில் 3 இடங்களிலும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. ஜூன் 4 செவ்வாயன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இறுதிகட்டத்தில் பிரபலங்கள் ஏழாவது மற்றும் இறுதி கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் மோடி போட்டியிடும் வாரணாசி குறிப்பிடத்தக்கது.   எதிரணியில் காங்கிரஸின் அஜய் ராய், பிஎஸ்பியின் ஆதில் ஜமால் லாரி மற்றும் 4 சுயேச்சைகள் உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தின் சிபிஎம் வேட்பாளர்களாக ஜாதவ்பூரில் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, டம்டமில் சுஜன் சக்ரவர்த்தி, கொல்கத்தா தெற்கில் சைரா ஷா ஹலீம், டயமண்ட் ஹார்பரில் பிரதிகுர் ரஹ்மான் ஆகியோர் இறுதிக்கட்டத்தில் வலுவான போட்டியை ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பிடத்தக்க மற்ற தொகுதிகள் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங் ஆகியோர் போட்டியிடும் இமாச்சலத்தில் உள்ள மண்டி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் போட்டியிடும் இமாச்சலின் ஹமிர்பூர், லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடும் பீகாரின் பாடலிபுத்ரா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிடும் ஜலந்தர் ஆகியவையாகும்.

;