science

img

அறிவியல் கதிர்

♦ புண்களை விரைவாக  ஆற்ற எலெக்ட்ரானிக்  பேண்டேஜ்
அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புண்களை விரைவாக குணப்படுத்தும் இழுதன்மை கொண்ட சிறிய பேண்டேஜ் ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். இந்தக் கருவியின் ஒரு பக்கத்தில் இரண்டு மின்முனை கள் உள்ளன. சிறிய பூ வடிவிலான முனை புண்ணின் மேலும் இன்னொரு வட்ட வடிவமான முனை அருகி லுள்ள ஆரோக்கியமான திசுவிலும் பொருந்தியுள்ளது. இன்னொரு பக்கத்தில் கருவியை இயக்கத் தேவையான மின்சாரத்தை பெறும் ஒரு சுருளும் புண் குறித்த தரவுகளை அளிப்பதற்கான அமைப்பும் உள்ளன. இந்த பேண்டேஜ் புண்பட்ட பகுதியில் மின் அதிர்வுகளை செலுத்தி குணமாவதை விரைவுபடுத்துகிறது.எலிகளில் செய்யப்பட பரிசோதனைகளில் சர்க்கரை நோயினால் ஏற்படும் காயங்களை 30 சதவீத விரைவாக ஆற்றுவது காணப்பட்டது. புண் ஆறுவதை கண்காணிப்பதுடன் ஆறியபின் இந்த பேண்டேஜ் உடலில் கரைந்து விடுகிறது.

♦ பாசியும் பேக்டீரியாவும் –  ஒரு  நட்பு – பகைமை உறவு 
ஒளிச்சேர்க்கை செய்யும் பிளாங்டன் (plankton) வகையை சேர்ந்த ஒரு கடல் பாசியானது ஒரு பேக்டீரியல் நுண்ணுயிரியுடன் நட்பு - பகைமை கலந்த உறவு கொண்டுள்ளது. ஒற்றை செல்லாலான இந்தப் பாசியால் தனக்கு வேண்டிய பி வைட்டமினை உற்பத்தி செய்ய இயலாது. ஆகவே பேக்டீரியாவிற்குத் தேவையான சத்துகளை அளித்து அவற்றை ஈர்க்கின்றன.  ஆனால் பாசிகள் வயதாகி சத்துகளை உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு செல்லும்போது பேக்டீரியாக்கள் அவற்றைக் கொன்று உணவாக்கிக் கொண்டுவிடுகின்றன. இந்த நிலையிலும் கடல் பாசியானது ரோசியோபேக்டர் எனும் பேக்டீரியாவிற்குத் தேவையான பென்சோயேட் எனும் வேதிப் பொருளை அளித்து அவற்றுடன் நட்பாக இருக்குமாம்.ஆனால் இந்த வேதிப்பொருளை பயன்படுத்த முடியாத மற்ற பேக்டீரியாக்கள் அவற்றை அழித்து விடுமாம். திடீரென பாசிகள் அதிக அளவில் மலர்வதும் பின் அழிந்துவிடுவதும் இந்த நிகழ்வுகளினால்தான்.  இதே போன்ற உறவுகள் மற்ற பாசிகளுக்கும் பேக்டீரியாக்களுக்கும் இடையில் இருக்குமானால் பாசிகளின் திடீர் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அவை ஒரு முக்கியப் பங்காற்றலாம். பாசிகளின் கூட்டம் நச்சுத்தன்மை கொண்டது.ஆனால் அவை ஏராளமான கார்பன் டை ஆக்சைடை உயிரியல் பொருளாக நிலைநிறுத்துகின்றன. கடலிலுள்ள கார்பன் வளத்திற்கு அவை முக்கிய ஆதாரமாக உள்ளன. புவியிலுள்ள மொத்த கார்பனில் பாதியை பாசிகள் நிலைநிறுத்துகின்றன. அவற்றில் 20-50 சதவீதம் பேக்டீரியாக்களுக்கு செல்கிறது. கடலுக்குள் செல்லும் கார்பன் இவ்வாறுதான் கடத்தப்படுகிறது என்றால் அதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஏதென்ஸை சேர்ந்த ஜார்ஜியா பல்கலைக்கழக நுண்ணுயிரியல் சூழலியலாளர் மேரி ஆன் மோரன்.

தொட்டால்சுருங்கியின் இயக்கம் 
தொட்டால்சுருங்கி செடியின் இலைகள் மூடுவதும் திறப்பதும் பார்த்திருப் போம். இதன் அடிப்படையான வேதியியல் இயக்கத்தை ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அதன் இலையை விலங்கினமோ அல்லது வேறு ஏதோ ஒன்று உரசும்போது, அதன்  இலைக்காம்புகளின் ஒரு பகுதியிலிருந்து பொட்டாசி யம் அயனியும் தண்ணீரும் இன்னொரு பகுதிக்கு செல்கின்றன. தண்ணீரை இழந்த பகுதி தளர்ந்தும் மற்ற பகுதிகள் தடித்தும் மாறுகின்றன. இதனால் இலைகள் இரண்டாக மடித்துக் கொள்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்துடன் சில கட்டமைப்பு மாற்றங்களையும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த உயிரியல் பொறியாளர் டேவிட் சிலேபோடா ஆய்வு செய்துள்ளனர்.  இலையின் அடிப்பகுதியில் இருக்கும் நுட்பமான முள் போன்ற பகுதி இலை எல்லாப் பக்கங்களிலும் தடிக்காமல், மடங்கும் அச்சின் ஓரமாக தடிக்க வைக்கிறது. மேலும் விரிவடையும் தசைப்பகுதிகள் சுருக்கங்களாக உள்ளன. அவற்றினுள் நீர் புகுந்து அவை விரிவடை கின்றன. செல் அமைப்புகளும் சுருங்கி விரிவடைய சிறப்பாக ஹார்மோனியத்திலுள்ளது போல உள்ளன. சில தாவரங்கள் வேகமாக வும் சில மெதுவாகவும் சுருங்குகின்றன. அவை ஏன் சுருங்குகின்றன என்பதும் ஒரு கேள்வி. விலங்குகள் மேயாமலிருக்கவும் குளிர் வான இரவுகளில் அதிக வெப்பம் வெளிவிடா மலிருக்கவும் செய்கின்றன என்று கூறுகிறார்கள்.

♦ 2000  ஆண்டுகளுக்கு  முன்பே நவீன  கழிவறை
உலகத்தின் மிகப் பழமையான மேற்கத்திய பாணி கழிவறையை (flush toilet) தொல்லியியல் ஆய்வாளர்கள் சீனாவில் கண்டுள்ளார்கள். 2400ஆண்டு பழமையான இதன் உடைந்த பகுதிகளும் வளைந்த குழாயும் ஒரு ஆய்வுக் குழுவால் சியான் பகுதியின் பழைய அரண்மனை இடிபாடுகளில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் இதை ‘சொகுசு பொருள்’ என்று விவரிக்கிறார்கள்.

♦ பெண்களுக்கு  எதிரான  காற்று மாசு
காற்றிலுள்ள நைட்ரஸ் ஆக்சைட் போன்ற மாசுக்கள் அதிகரிப்பதால் மாத விடாய் கடந்த பெண்களுக்கு ஆஸ்டி யோபோராசிஸ் (osteoporosis) எனும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிற தாம். நைட்ரஸ் ஆக்சைடின் பாதிப்பு கீழ்தண்டுவடப் பகுதியில்தான் அதிகம் காணப்படு கிறது. 50வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இரண்டில் ஒருவருக்கு ஆஸ்டியோ போராசிஸ் நோயால் எலும்பு முறிவு ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

;