science

img

அறிவியல் கதிர்

♦ மீள்கிறதா ஓசோன் படலம்?
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க 1987ஆம் ஆண்டு மாண்ட்ரீல் பன்னாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி ஓசோன் படலத்தை குறைக்கும் பல்வேறு பொருட்களை படிப்படியாக அகற்றவேண்டும். இந்த ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐநா சபை அறிக்கை அளிக்கிறது. அதன் இந்த ஆண்டு அறிக்கையில் ஓசோன் படலம் நாற்பது ஆண்டுகளுக்குள் பழைய நிலைமைக்கு திரும்பும் வழியில் பயணிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கையும் செய்கிறது. 

♦ தரம் அதிகமுள்ள 
மறுசுழற்சிக் கான்கிரீட் கட்டிடம் கட்டும்போதும் இடிக்கப்படும்போதும் உண்டாகும் வீணான கான்கிரீட்டை சூரிய வெப்ப ஆற்றலைக் கொண்டு மறு சுழற்சி செய்யும் முறையை ஐஐடி சென்னை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கழிவுகளை இயந்திர முறையில் உடைத்துக் கிடைக்கும் மறு சுழற்சிக் கான்கிரீட் வீணான கான்கிரீட்டை விட தரம் உயர்ந்ததாக உள்ளதாம். ராஜஸ்தானிலுள்ள சூரிய வெப்ப ஆற்றல் ஆலையில் இதை செய்முறை சோதனை செய்து காட்டியிருக்கிறார்கள். 
 

♦ பிளாஸ்டிக் கழிவிலிருந்து கரி 
பிளாஸ்டிக் கழிவை அதிக துளைகள் கொண்ட மரக்கரியாக மாற்றும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழக பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கரி கார்பனை சேமிக்கக்கூடியவை. மண்ணுக்கு வளம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படக்கூடியது. பிளாஸ்டிக் கழிவை சோளக்கழிவுடன் கலந்து அதிக அழுத்தப்பட்ட கொதிநீரில் சமைக்கப்பட்டு இந்தக் கரி உண்டாக்கப்படுகிறது.. 

♦ தொலைதொடர்பில் லேசர் தொழில்நுட்பம் 
தரவுகளை ஒளி மூலம் கடத்தும் மரபான கண்ணாடி இழைகளுக்குப்(optic fibre) பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை இரண்டு காற்று அடுக்குகள் வழியாக செலுத்தும் முறையை மேரிலாண்ட் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஹோவர்ட் மில்ச்பெர்க் கண்டறிந்துள்ளார். இந்த சோதனையில் லேசர் ஒளிக்கற்றைகளின் நடுப்பகுதி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. ஒளிரும் டோனட்டுகளின்(doughnuts) அடுக்குகள் போல் இவை காட்சி தருவதால் இதற்கு டோனட் முறை எனப் பெயரிட்டுள்ளார்கள். இதற்குள் குளிர்ந்த காற்றும் அதற்கு மேல் சூடான காற்றும் குழாய் வடிவில் உருவாக்கப்படுகிறது. கண்ணாடி இழை முறையில் ஒளி புகும் மைய அச்சும் அதன் மேல் பிளாஸ்டிக் உறையும் உள்ளதைப் போன்று இந்த அமைப்பு விளங்குகிறது. இந்த சோதனையில் 50மீட்டர் நீளத்திற்கு அலை வழிகாட்டியை அமைக்க முடிந்தது. லேசர் கற்றையின் ஆற்றலை அதிகப்படுத்தி இதை கிலோமீட்டர்களாக்குவதே இப்போதைய சவாலாகும். அந்த அளவிற்கு இட வசதியுள்ள சோதனை சாலைகளில் செய்து பார்க்க வேண்டும் என்கிறார் மில்ச்பெர்க். இது ராணுவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்றாலும் தானும் தனது குழுவினரும் பொருட்களின் வேதியியல் பண்புகளை கண்டறிவது போன்ற அறிவியல் முறைகளிலேயே கவனம் செலுத்தப்போவதாக மில்ச்பெர்க் கூறுகிறார். இது போன்ற காற்றின் அடிப்படையில் இயங்கும் அலை வழிகாட்டிகள் ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் ஒளியை தொலை தூரத்தில் இருக்கும் அமைப்புகளுக்கு செலுத்துவதால் ஆய்வு செய்யவேண்டிய ஒரு மாதிரியின் அருகில் சென்று சோதனைகள் நடத்த தேவையில்லை.

♦ எல்லா மதுவும் ஆபத்தானதே 
உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கையின்படி எந்த விதமான மதுவும் எந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும். குடல் புற்று நோய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட ஏழு விதமான புற்று நோய்கள் மது அருந்துவதனால் ஏற்படக்கூடும். மதுவை உட்கொள்ளும்போது அது உடலினுள் சென்று பல்வேறு வேதிப்போருளாக சிதைந்து விடுவதால் புற்று நோய் உண்டாகிறது. எனவே விலை, தரம் என்ற வேறுபாடு இல்லாமல் புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது என்கிறது அந்த அறிக்கை.