science

img

அறிவியல் கதிர் - ரமணன்

1. மக்காத பிளாஸ்டிக்கிலிருந்து மலிவான எரிபொருள் 

ஒரு துண்டு பிளாஸ்டிக் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.இது நிலமும் நீரும் மாசுபடக் காரணமாகிறது.பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதும் சாத்தியமில்லை.அதை மறு ஆக்கம் செய்வது ஒரு தீர்வாக இருக்கும்.இந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தியாகும் 5.6 மில்லியன்டன் பிளாஸ்டிக்கில் இருபது சதமே மறு சுழற்சி செய்யப்படுகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் இதற்கு புதுமையான தீர்வைக் கண்டிருக்கிறது. இந்த தொடக்க நிறுவனம்(startup) பிளாஸ்டிக்கை திரவ எரிபொருளாக மாற்றுகிறது.மலிவானதும் சுற்று சூழலுக்கு உகந்ததுமான இதை ஜெனெரேட்டர்,தொழிலக கொதிகலம்,அடுப்பு போன்றவைகளில் பயன்படுத்தலாம்.பிளாஸ்டிக் பொருட்களை ஆக்சிஜன் இல்லாமல் உயர்ந்த வெப்ப நிலையில் சிதைக்கும் வெப்ப வேதியியல்(thermo-chemical depolymerisation) முறையை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பமானது கார் டயர் சுருள்களை சிதைப்பதற்கு பயன்படும் ஒன்றாகும்.அதை மாற்றி பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.ஆக்சிஜன் இல்லாமல் உயர்ந்த வெப்ப நிலையில் சூடுபடுத்தும்போதுபிளாஸ்டிக் கழிவு ஆவியாகிறது.அதைக் குளிரவைத்து பைரோ ஆயில் அல்லது பயோ குரூட் எனும் பொருளாக மாற்றப்படுகிறது.இது பெட்ரோலுக்கு பத்திரமான மாற்றாகும்.இறுதியில் சிறிதளவுகூட திரவங்களோ வாயுக்களோ வெளிவிடப்படாததால்மொத்த நடைமுறையும் சுற்று சூழலுக்கு ஏற்றது. மேலும்பைரோ எண்ணெய் மற்ற எரிபோருட்களைவிட 25% மலிவானது. ஒரு டன் பிளாஸ்டிக் கழிவிலிருந்து500லிட்டர் எண்ணெய் கிடைக்குமாம்.

இந்த நிறுவன உரிமையாளர்களான வித்யா மற்றும் அமர்நாத் இணையர்கள் சென்னை ஐ ஐ டி,மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்,என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணையோடு பல காலம் ஆய்வுகள் மேற்கொண்டு இதை தொடங்கியுள்ளார்கள். ஆய்வு மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளுக்காக பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழத்துடனும் உள்நாட்டளவில் எஸ் எஸ் என் பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் தொழில்நுட்பக் கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார்கள். (பெட்டர் இந்தியாகோபி கரேலியா 22/10/19 கட்டுரையிலிருந்து)

2. அற்புதப் பாட்டிகள்கண்ட அரிய பாம்புகள் 

பிரான்ஸ் நாட்டில் பாட்டிகள் குழுவொன்று வாரத்தில் ஐந்து நாட்கள் கடலில் மூன்று கிலோமீட்டர் தூரம் நீந்தும் பழக்கம் உடையவர்கள்.இவர்கள்தங்களை‘அற்புதப் பாட்டிகள்’ என்றழைத்துக்கொள்கிறார்கள்.பாம்புகள் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு உதவி செய்து வந்தஇவர்கள் ஏராளமான எண்ணிக்கை கொண்டவிஷப் பாம்புகள் குடும்பம் ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். இந்தப் பாம்புகள் பதினைந்து வருடங்களில் ஆறு முறை மட்டுமே தென்பட்டுள்ளன.

3. கார் ஓட்டுங்கள்! ரிலாக்ஸ் ஆகுங்கள்!

அமெரிக்க ரிச்மாண்ட் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் எலிகளை சிறிய கார்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளார்கள். அவைகளுக்குஇனிப்புக் கஞ்சியை பரிசாக அளித்து இதை செய்ய வைத்துள்ளார்கள். இந்தப் பயிற்சியைக் கற்பதனால் அவைகளின் மன அழுத்த அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மன நோய்களுக்கு மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தும் முறையைக் கண்டறிவதற்கு எலிகளின் மூளை உதவும் என்கிறார் ஒரு ஆய்வாளர்.

4. தொடு உணர்ச்சி 

திறன் கைபேசிக்கு மேலுறையாகப் பயன்படும் செயற்கை தோல் ஒன்றை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் டெலிகாம் பாரிஸ் டெக் மற்றும் பாரிசிலுள்ள சார்பான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்இடைத்தள தோல்(Skin-On interface) என்றழைக்கப்படும் இதை கைபேசி,உடலில் பொருத்திக்கொள்ளும் கருவிகள்,மடிக்கணினி ஆகியவற்றில் பயன்படுத்தலாம்..இதன் மூலம் நமது உணர்ச்சிகளை தெரிவிக்கலாம்.எடுத்துக்காட்டாக அழுத்தமான பிடிப்பு கோபத்தையும், நிமிண்டுவது சிரிப்பையும்,லேசாக  தட்டுவது ஆச்சரியத்தையும் குறிக்கும் எமோஜிகளைக் காட்டும். இரண்டு சிலிக்கோன் அடுக்குகளுக்கிடையில் உணர்விகளாக செயல்படும் மிக மிக மெல்லிய கம்பிகள் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வேறுபட்ட சிலிக்கோனை வண்ணப் பொருளில் தோய்த்து வார்க்கப்படும்போது தோல் போன்ற இழைவு ஏற்படுகிறது. நேரடியாக ஒருவருடன் பேசும்போது அவரை தொடுவது போன்ற செயல்களால் நமது உணர்வுகளை தெரிவிக்கிறோம்.உரையாடலையும் அது செழுமைப்படுத்துகிறது. இப்பொழுது உரையாடல்கள் பெரும்பாலும் ஊடகங்கள் மூலமாகவே செய்யப்படுவதால் இந்த முறையை நாம் இழந்துவிட்டோம்.தங்களது இந்த கருவியினால் இரண்டு முறைகளின் சிறந்த அம்சங்களையும் இணைத்துள்ளோம் என்கிறார் ஆய்வு மாணவரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான மார்க் டெய்சியர் (Marc Teyssier). செயற்கை தோல் எனும் கருத்து ரோபோடிக்ஸ் துறையில் ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டதுதான்..ஆனால் இந்த ஆய்வு தினசரி பயன்படும் பொருட்களுக்கு அதை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்கிறது.

(18/10/2019 தி இன்டிபென்டென்ட் இதழில்  போஃபே வெஸ்டன் கட்டுரையிலிருந்து)


 

;