science

img

வண்ணக்கதிர்- அறிவியல் கதிர்

♦ ஒரு நட்சத்திரம் பிறக்கும் காட்சி 
ஒரு நட்சத்திரம் பிறக்கும் தருணத்தை உலகத்தின் ஆற்றல் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. L1527 என்று பெயரிடப்பட்ட முன் பருவ நட்சத்திரம் கடிகாரக் குடுவை வடிவத்தில் புதிய நட்சத்திரமாக உருவாகும் படங் களை நாசா பகிர்ந்துள்ளது. புதிய நட்சத்திரத்தின் முன் தோன்றலான  L1527, 100000 ஆண்டு பழமையானது என்றும் நட்சத்திர உருவாக்கத்தின் தொடக்க நிலையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அது கடிகாரக் குடுவையின் கழுத்துப் பகுதியில் மறைந்துள்ளது என்றும் நாசா தெரி வித்துள்ளது.

♦ தேனீக்களின் வாழ்நாள் பாதியாகக் குறைகிறது?                                                                                                                                                                                                                                                                                                                                                                          தேனீக்கள் குடியிருப்பில் தேனீக்கள் வயதாகி இறப்பதும் பின் தேனீ வளர்ப் பாளர்கள் அதற்குப் பதிலாக புதிய காலனியை ஏற்படுத்துவதும் வழக்கமான ஒன்றுதான்.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதிக அளவு இறப்புகள் ஏற்படுகின்றன என அமெரிக்க தேனீ வளர்ப்பாளர் கள் கூறுகின்றனர். இது குறித்த ஒரு ஆய்வில் தனிப்பட்ட தேனீக் களை சோதனை சாலையில்  கட்டுப் படுத்தப்பட்ட நிலைமைகளில் வளர்த்தபோது அவற்றின் ஆயுட்காலம் 1970களை விட 50% குறைந்தது தெரிய வந்துள்ளது.சுற்றுசூழல் நெருக்கடிகளுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலைமைகளில் அதாவது சோதனை சாலை சூழலில் தேனீக்களின் வாழ்நாள் குறைவது குறித்த முதல்முறை ஆய்வு இது என்றும் இதன் மூலம் காலனிகள் அழிவதில்  மரபு ரீதியான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன என்று மேரிலேண்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.  தேனீக்களின் வாழ்நாள் குறைவதுடன் அவற்றில் 10% அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.1970களில் 34 நாட்களாக இருந்த வாழ்நாள் இப்போது 18 நாட்களாக குறைந்துவிட்டதாம். பயிர்களில் பூச்சிக்கொல்லி தெளிப்பதால் தேனீக்கள் அவற்றின் மகரந்தத்தை உட்கொள்ளும்போது அவையும் அவற்றின் உடலுக்குள் சென்றுவிடுகின்றன. அதன் வாழ்நாள் குறைவதற்கு இது காரணமாகிறது. வெளிப்புறத்தில் தேனீக்களை வளர்க்கும் காலனிகளின் சூழல், சோதனை சாலை சூழலிலிருந்து வேறுபட்டது என்றாலும் சோதனை சாலை தேனீக்கள் குறித்த வரலாற்று ஆவணங்கள் அவற்றின் வாழ்நாள் காலனி தேனீக்களுடன் ஒத்திருப்பதைக் காட்டுகிறது. ஒரு சூழலில் அவற்றின் வாழ்நாளைக் குறைக்கும் தனித்துவமான காரணிகள் மற்றொன்றி லும் குறைக்கும் என அறிவியலாளர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள்.    

♦ செவித்திறனுக்கு ஆபத்து 
பெரும் சத்தத்துடன் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், காது மற்றும் தலையில் பொருத்திக் கொள்ளும் ஒலிவாங்கிகள் ஆகியவற்றில் பாதுகாப்பற்ற முறையில் கேட்பது போன்றவற்றால் 12-34 வயதினர் 135கோடிப்பேர் செவித்திறன் இழக்கும் அபாயம் உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.கேட்கும்திறன் இழப்பு குறித்த 33ஆய்வுகளை பரிசீலனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது. அரசாங்கம் ‘பாதுகாப்பாக கேட்பது’ குறித்த விதிகளை முன்னுரிமை கொடுத்து வகுக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.  

♦ தேனீக்களின் கணித அறிவு 
நம்மில் பலர் எண்களை வரிசைப்படுத்தும்போது சிறிய எண்கள் இடமாகவும் பெரிய எண்களை வலமாகவும் மனதில் வரிசைப்படுத்துகிறோம்.இதேபோல் சிறிய பொருட்களை இடமாகவும் பெரிய பொருட்களை வலமாகவும் வரிசைப்படுத்தும் போக்கு காணப்படுகிறது. இதே தன்மை தேனீக்களுக்கும் இருக்கிறதா என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தேனீக்களால் எண்களை எண்ணவும் சீரோ என்கிற கருதுகோளைப் புரிந்துகொள்ளவும் முடியும் என்று இதற்கு முந்தய ஆய்வுகள் காட்டியிருந்தன.  பிரான்ஸ் நாட்டிலிலுள்ள பால் சபாதியர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியலாளர் ஜியார்பா நடத்திய ஆய்வில் தேனீக்களுக்கு சர்க்கரை நீரை அளித்து எண்களை அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட பயிற்சிக்குப் பின் இடமும் வலமும் ஒரே போன்ற எண்கள் மாட்டப்பட்ட பெட்டிக்குள் ஈக்கள் அனுப்பப்பட்டன.இரண்டு பக்கமும் மூன்று என்கிற எண் இருந்தால் ஒன்று என்கிற சிறிய எண்ணைப் பார்த்து பயிற்சி பெற்றிருந்த தேனீக்கள் 72% வலது பக்கமும் ஐந்து என்கிற எண்ணைப் பார்த்து பயிற்சி பெற்றிருந்த தேனீக்கள் 73% இடது பக்கமும் பறந்தன. பயிற்சி பெற்ற எண்ணும் சோதனைக்கு வைக்கப்பட்ட எண்ணும் ஒன்றாக இருந்தால் தேனீக்கள் இடது வலது என்கிற எந்த முன்னுரிமையும் தரவில்லை. இது தேனீக்களின் மூளையில் எண் வரிசை என்று ஒன்று உள்ளதைக் காட்டுகிறது என்கிறார் ஜியார்பா.  

 தேனீக்கள் மட்டுமல்ல பல்வேறு விலங்கினங்களிலும் இத்தகைய தன்மை அல்லது அதில் ஒரு பகுதியாவது இருக்கிறது என்கிறார். ஆனால் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த புரிதலியல் அறிஞர் ரபேல் நூன்ஸ், எண்களை வரிசைப்படுத்துதல் போன்ற சிக்கலான மனித இயல்புகளை இவ்வாறு எளிமைபடுத்துதல் தவறு என்கிறார். கோழிக்குஞ்சில் நடத்தப்பட்ட இதைப்போன்ற ஆய்வுகளை விமர்சித்துள்ள அவர் மனித குழுக்கள் சிலவற்றில் பிறப்பில் இல்லாத இத்தகைய தன்மைகள் தேனீக்கள்,கோழிகள் போன்றவற்றில் மட்டும் எவ்வாறு பிறப்பிலேயே உள்ளது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார். ஜியார்பாவும் மனிதர்களில் சிலர் இடமிருந்து வலமாக எண்ணுவது இல்லை என்பதை கலாச்சாரம் மூலம்தான் விளக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த தன்மைக்கு உயிரியல் ரீதியான காரணங்கள் உள்ளன என்கிறார். கோழி,தேனி,மனிதர்கள் ஆகியவற்றின் இந்த தன்மைக்கு மூளை இடது மற்றும் வலது புற தகவல்களை வேறுபட்ட முறையில் பகுத்தறிவது காரணமாக இருக்கலாம். இப்படி எண்களை வரிசைப்படுத்துவது விலங்கினங்களிடையே பரவலாக இருப்பது உண்மையானால் நமது மனம் சிந்திப்பதை போல் விலங்குகளின் சிந்தனையும் ஒத்து உள்ளது என்பதை வெளிப்படுத்தும். சில புரிந்து கொள்ளும் ஆற்றல்கள் மனித இனத்திற்கே உரித்தானது என்று தோன்றினாலும் பிற விலங்கினங்களின் ஆற்றலை புறக்கணிப்பது தவறானது என்கிறார் ஜியார்பா.

;