science

img

பரிணாம விருட்சத்தின் கிளைகள் - தொகுப்பு : ரமணன்

ஹோமினின் என்ற உயிரியல் இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனமாக மாறியது.இந்த இனத்தில் 3.8மில்லியன் வருடங்களுக்கும்  3 மில்லியன் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது  ஆஸ்ட்ரலோபிதகஸ் அபாரென்சிஸ் (Australopithecus afarensis) என்ற குடும்பம். இதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபலமான படிமம்(fossil) லூசி எனப்படும் பகுதி எலும்புக்கூடு ஆகும். இதுதான் மனிதனின் மிகப் பழமையான முன்னோர் என நீண்ட நாட்களாக கருதப்பட்டு வந்தது. 4.2 மில்லியன் வருடங்களுக்கும் 3.9 மில்லியன் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த ஆஸ்ட்ரலோபிதகஸ் அனாமென்சிஸ் (Australopithecus anamensis) என்ற ஒரு உயிரியல் குடும்பம் ஏ.அபாரென்சிஸ் குடும்பத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. ஏ.அனாமென்சிஸ் படிமங்கள் 1995 ஆம் ஆண்டு முதலில் கென்யாவிலும் பின்னர் எத்தியோப்பியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் 3.8 மில்லியன் வருடங்கள் பழமையான மண்டையோடு ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு MRD என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஏ.அனாமென்சிஸ் மாதிரிகளை ஒத்த அம்சங்களைக் கொண்டிருக்கிறது. எனவே அந்தக் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த மண்டையோடு உடையாமல் கச்சிதமாக இருந்ததால் முதன்முதலாக அறிவியலாளர்களால் முகம், மூளைப் பெட்டகம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்ய முடிந்ததோடு ஏ.அனாமென்சிஸ் குடும்பத்தின் படிமங்களில் இல்லாத மண்டையோட்டுப் பாகங்களை இதில் பார்வையிட முடிந்தது. MRD மண்டையோட்டில் பல புதிய வெளி அம்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவை மனித பரிணாம தொடரில் பிற்கால குடும்பங்களின் பிரத்தியேகமானவை என்று வழமையாக கருதப்பட்டுவந்தவை. எடுத்துக்காட்டாக இதன் மேல் அண்ணம் ஏஅனாமென்சிஸ் மற்றும் ஏ.அபாரென்சிஸ் மாதிரிகளின் மேல் அண்ணத்தைவிட ஆழமாக இருக்கிறது. பின்னால் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா ஆஸ்ட்ரலோபிதகஸ் குடும்பத்திலும்  இதுவே மிக ஆழமானதாக இருக்கிறது.

ஏ.அனாமென்சிஸ் குடும்பத்திலிருந்து லூசி குடும்பம் சிறிது சிறிதாக பரிணாமம் அடைந்தது என்று கருதப்படுகிற. வளர்ச்சி முறை அனாஜெனிசிஸ் என்றழைக்கப்படும். இந்த வளர்ச்சிப் போக்கில் வேறு கிளைவழிகள் இல்லை என்று நீண்ட காலமாக பரவலாக கருதப்பட்டுவந்த கருதுகோளை MRD மண்டையோடு கேள்விக்குள்ளாக்கியது. இந்த நவீன அம்சங்கள் ஏற்கனவே பழைய இனங்களில் இருப்பதால் லூசி குடும்பம் ஏ.அனாமென்சிஸ் குடும்பத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் பிரிந்து வந்தே தோன்றியிருக்கும் என்பதே பெரும்பாலும் சரியான கருதுகோளாக இருக்க முடியும்.இந்த முறைக்கு கிளாடோஜெனிசிஸ் என்று பெயர். ஆனால் ஏ.அபாரென்சிஸ் எப்பொழுது கிளைகளாக பிரிந்தது என்று தெரியவில்லை. கிளாடோஜெனிசிஸ் முறைக்கு இன்னொரு ஆதாரமாக 1981ஆம் ஆண்டு எதியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3.9 மில்லியன் வருடப்பழமையான  நெற்றி எலும்பு உள்ளது. இதன் வடிவம் MRD மண்டையோட்டிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.இதிலிருந்து இந்தப் படிமம் ஏ.அபாரென்சிஸ்சை சேர்ந்தது என்று தோன்றுகிறது.

அப்படியானால் மனிதப் பரிணாம கால வரிசையை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஏ.அனாமென்சிஸ் 4.2 மில்லியனுக்கும் 3.8 மில்லியனுக்கும் இடைப்பட்ட காலமாகவும் ஏ.அபாரென்சிஸ் 3.9 மில்லியனுக்கும் 3 மில்லியனுக்கும் இடைப்பட்ட காலமாகவும்  இருந்ததாக கொள்ள வேண்டும். இதன் மூலம் இரண்டு குடும்பங்களும் 100000 வருடங்கள் ஒன்றாக இருந்தது என்று பொருள்படுகிறது. ஆகவே  ஏ.அபாரென்சிஸ் ஒரே முன்னோரிலிருந்து சிறிது சிறிதாக பரிணாமம் அடைந்திருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் நம்முடைய பரிணாம வளர்ச்சிக் கோட்டில் பெரும்பாலான குடும்பங்கள் முன்பு இருந்தவற்றிலிருந்து கிளைகளாகப் பிரிந்தே தோன்றியுள்ளன. பின்னாளில் வந்த -மனிதனாக பரிணாமம் அடைந்த-ஆஸ்ட்ரலோபிதகஸ் ஹோமினின் இனத்திற்கும் லூசி இனம்தான் முன்னோர் என்ற கருதுகோள் இந்தக் கண்டுபிடிப்பினால் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

இந்த அண்மைக்கால கண்டுபிடிப்பு நமது பரிணாமத்தின் கடந்த காலம் குறித்து புதிய வெளிச்சங்களைக் கொடுத்திருக்கிறது என்பது தெளிவு. அதே சமயம் தொடக்க கால ஹோமினின்களுக்கு இடையேயான தொடர்புகளை இன்னும் சிக்கலாக்கியிருக்கிறது.பிளியோசீன் காலத்தின் மத்தியப் பகுதி (5.3-2.6 மில்லியன் வருடங்களுக்கிடையில்) பல்வேறு நிலப்பகுதிகளில் பரந்துபட்ட, பலவிதமான சமகால இனங்களால் நிரம்பியிருந்தது என்றாகிவிட்டது இந்த இனங்களுக்கிடையேயான தொடர்புகளை விளக்குவதும் அவைகளுடைய புறத் தோற்றங்களை வரையறுப்பதும் சிக்கலான நுணுக்கமான ஹோமினின் பரிணாமக் கதையை கட்டுடைப்பதும் எளிய பணி அல்ல. ஒவ்வொரு புதிய தலங்களில் கிடைக்கும் மாதிரிகளும் பரிணாமப் பாதையில் வேறுபட்ட புள்ளிகளை காட்டுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளை பரிணாம விருட்சத்தில் உறுதியான நம்பத்தகுந்த கிளைகளாக பொருத்துவது எளிதல்ல.

வேறுபட்ட காலப் பகுப்புகளையும் புவியியல் இடங்களையும் சேர்ந்த மாதிரிகள் இன்றுள்ள படிம ஆவணங்களில் போதுமான அளவில் இடம் பெறாமல் உள்ளன. அவற்றை அதிக அளவில் சேர்ப்பது இந்தக் கேள்விகளுக்கு விடை காண உதவும். அதேசமயம் அவை நாம் இதுவரை அறிந்திருப்பதை தலைகீழாக மாற்றவும் செய்யும். கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கும் நடைபெற்றுள்ள கண்டுபிடிப்புகள் நமது கடந்த கால பரிணாமத்தை முற்றிலும் புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. புதிய படிமங்கள் ஏற்கனவே உள்ள கருதுகோள்களை எப்பொழுதும் உறுதிப்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. கையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நமது பார்வைகளை மாற்றிக்கொள்ளவும் புதிய கருதுகோள்களை ஏற்படுத்தவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

(தி ஒயர் இதழில்
ஹெஸ்டர் ஹெகராஃப் 
(Hester Hanegraef) என்ற மானுடவியல் ஆய்வாளர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)