science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) புதிய விண்வெளி தொலைநோக்கி 

இந்தியாவின் முதல் திரவ ஆடி தொலைநோக்கி (Liquid Mirror Telescope (LMT) உத்தரகண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூப்பர் நோவா, ண்குப்பைகள், எரிகற்கள் மற்ற விண்வெளிப் பொருட்களை கண்காணிக்க முடியும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலைநோக்கியான இதை இந்திய, பெல்ஜியம் மற்றும் கனடா நாட்டு விண்வெளியாளர்கள் கட்டமைத்துள்ளார்கள். 2450 மீட்டர் உயரத்தில்  நைனிடால் நகரத்திலுள்ள தேவஸ்தால் ஆய்வு மையத்தில் இது உள்ளது.

2 ) எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தீப்பற்றாத பேட்டரி

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது போன்ற பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு தீர்வாக ஐஐடி சென்னை வேதிப் பொறியியல் துறை துத்தநாக (zinc-air) பேட்டரிகளை உருவாக்கியுள்ளது. இது தற்போதுள்ள லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு நல்ல மாற்றாக இருக்கும் என்கிறார் அந்தத் துறையின் உதவிப் பேராசிரியர் அர்விந்த் குமார் சந்திரன். இது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் செலவு குறைவானதாகவும் லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு இணையான மைலேஜ் தரக் கூடியதாகவும் இருக்கும்.தயாரிப்பதற்கும் பராமரிக்கவும் எளிதானது; இந்தியாவில் அதிக எண்ணிகையில் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார். துத்தநாகம் நமது ஊட்ட சத்துக்களில் ஒன்று என்பதால் லித்தியத்தை விட பாதுகாப்பானது.    இந்த பேட்டரியில் துத்தநாகம் ஒரு மின் துருவமாகவும் காற்றிலிருந்து பெறப்படும் ஆக்சிஜன் மற்றொரு துருவமாகவும் உள்ளன. இவை ஒரு நீர்ம மின்பகுப்பு திரவத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் தீப்பற்றுவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. பேட்டரி செயல்படாமல் போனாலோ அல்லது தவறாக இயங்கினாலோ அதிகபட்ச விளைவு என்பது அதிலிருந்து மின்சாரம் வராது என்பதே. மேலும் டிஸ்சார்ஜ் ஆன லித்தியம் பேட்டரிகளை மாற்றி முழுவதும் மின் ஏற்றம் செய்யப்பட வேறு ஒரு பேட்டரியை பொறுத்த வேண்டும். ஆனால் துத்தநாக பேட்டரியில் ஜின்க் கேசட் என்பதை மட்டும் மாற்றினால் போதுமானது. கழற்றப்பட்ட கேசட்டிலுள்ள துத்தநாக ஆக்சைடை துத்தநாகமாக மாற்றலாம் என்பதால் இது சுற்றுசூழலுக்கும் உகந்தது. லித்தியம் பேட்டரிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. துத்தநாக பேட்டரிகளில் மேற்கொண்டு ஆய்வு செய்தால் இந்தியாவிலேயே அவற்றை உற்பத்தி செய்யலாம்.நமது நாட்டில் துத்தாகம் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த ஆய்வுக் குழு வாகன உற்பத்தியாளர்களுடன் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதாம். இதில் ஒரு குறைபாடு என்னவென்றால் இதை இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாது.

3 ) 3டி காதுகள் 

அமெரிக்காவில் 20வயதுப் பெண்மணிக்கு அவளது திசுக்களிலிருந்தே 3டி முறையில் தயாரிக்கப்பட்ட காது பொருத்தப்பட்டுள்ளது. இவர் சிறிய ஒழுங்கற்ற காதுகளுடன் பிறந்தவர். இதுவே உயிர் திசுக்களிலிருந்து முதன் முதலாக செய்யப்பட்ட 3D உறுப்பு எனக் கருதப்படுகிறது. இந்த புதிய காது, கார்டிலேஜ் திசுக்களை உருவாக்கி இயற்கையான காது போலவே தோற்றத்தை அளிக்கும்.

4 ) முப்பாட்டன் மரம் 

தென் சிலி நாட்டின் ஒரு காட்டில் 5484 ஆண்டு பழமையான மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆய்வின் படி இதுதான் உலகின் மிகப் பழமையான மரம் என்று கருதப்படுகிறது.இதுவரை கலிபோர்னியாவிலுள்ள 4853 ஆண்டு பழமையான முள்கூம்பு பைன் மரம்தான் மிகப் பழமையானது என்ற பெருமையைப் பெற்றிருந்தது. இப்போது கண்டறியப்பட்ட அலெர்சி மரம் அதை முறியடித்துவிட்டது. இந்த மரத்தை ‘முப்பாட்டன்’ என்றழைக்கிறார்கள்.

5 ) நோய் சிகிச்சையில் கிளையால் செல்கள் 

மூளையின் செயல்பாடுகளுக்கு அங்குள்ள நரம்பு செல்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன என்று கருதப்பட்டு வந்தது. கிளையல்(glial) செல்கள் என்பவை துணை உறுப்புகளாக இருந்தன. ஆனால் அண்மைக்கால ஆய்வு முடிவுகள் அவை நினைவு, கற்றல், யோசித்தல் ஆகிய செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று காட்டுகின்றன. இன்னொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு அவை மூளையில் மட்டுமல்ல, இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் பல உறுப்புகளில் உள்ளன. அவை அங்குள்ள நரம்பு செல்களுக்கு துணை புரிவதுடன் அந்த உறுப்புகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றன என்பது தெரிய வரலாம். இவற்றின் செயல்பாடுகளை அறிவதன் மூலம் இதய நோய்கள், நோய் எதிர்ப்பு மண்டல சிக்கல்கள், நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றிற்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் கண்டறியப்படலாம் என்கிறார் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நரம்பு உயிரியலாளர் சாரா அகர்மேன். எலிகளின் கல்லீரலிலுள்ள கிளியால் செல்களை கண்டறிந்த டவான் லூகாஸ் ‘இவைகளில் நாம் கவனம் செலுத்தாவிட்டால், நமது முன்னேற்றம் தாமதமாகும் ‘ என்கிறார். இவர் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஜென்டெக் நிறுவனத்தை சேர்ந்த நரம்பு நோய் எதிர்ப்பு துறையியலாளர்.   


 

;