science

img

அறிவியல் கதிர்

செரோடோனினும் பார்கின்சன்ஸ் நோயும் 

பார்கின்சன்ஸ் நோய் (Parkinson‘s disease) என்பது மூளையில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவகை நோய். இது மிக மெதுவாக வளருகின்றது. கையில் லேசான நடுக்கத்தில் தொடங்கி  கைகால்களில் இறுக்கத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்தை  மெதுவாக்குவது என வளர்கிறது. இதை ஆரம்பத்திலியே கண்டறியும் முறையை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வியாதி பிறவியிலேயே உயிர்க் கூறுகளின் திடீர் மாற்றங்கள் (genetic mutation) காரணமாக  வரலாம். ஆய்வாளர்கள் இப்படிப்பட்ட 14 நோயாளிகள், வேறு காரணங்களால்  நோய்வாய்ப்பட்ட 65 பேர், ஆரோக்கியமான  25 பேர் என மூன்று வகையினரை  ஆய்வுக்கு உட்படுத்தியதில் மூளையில் செரோடொனின் என்ற வேதிப் பொருள் சுரப்பதில் ஏற்படும் மாறுதல்கள் இந்த நோய் வருவதற்கு வெகு காலம் முன்னே தோன்றிவிடுகிறது. எனவே செரோடொனின் சுரக்கும் விதம் இந்த நோய் எவ்வளவு முற்றியிருக்கிறது என்பதை அறிய மிகச் சிறந்த அளவீடு என்கிறார் மன நல, உளவியல் மற்றும் நரம்பியல் கழகத்தின் ஹீத்தர் வில்சன்.

அமெரிக்க பூர்வகுடிகள் சைபீரியாவில்?

சைபீரியாவிலுள்ள யானா நதி அருகில் 31000 ஆண்டுப் பழமையான பால் பற்களின் டி என் ஏ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை அறிந்திராத மனித இனம் ஒன்று பனிக்காலத்தில்(Ice Age)அங்கு வாழ்ந்திருந்தார்கள் என்று இதிலிருந்து அறியப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஒரு விரிவான ஆய்வின் ஒரு பகுதி. இதே ஆய்வில் சைபீரியாவின் இன்னொரு பகுதியில் 10000 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்க பூர்வ குடிகளுடன் உயிரியல் ரீதியாக தொடர்புடையது என்றும் அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே நெருங்கிய உயிரியல் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மலிவு விலை மாசு அறி கருவிகள்(AQMS)

இந்தியாவில் காற்று மாசினால் 2 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் 15 லட்சம் இறப்புகள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  உலக அளவில் காற்று மாசினால்  3௦ இலட்சம் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. இது மலேரியா, காச நோய், எச்.ஐ.வி  ஆகிய நோய்களினால் ஏற்படும் மொத்த இறப்புகளுக்கு சமம்.காற்று மாசு  ஏற்படுத்தும் காரணிகளே பருவ நிலை  மாற்றங்களையும் இயக்கும் முக்கிய விசைகளாக இருக்கின்றன. காற்று மாசின் மோசமான விளைவுகளை இவ்வாறு துல்லியமாக ஆவணப்படுத்தியிருந்தபோதிலும்  உலக மக்கள் தொகையில் 92% பேர் வசிக்கும் இடங்களில் காற்று மாசு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைவிட கூடுதலாக இருக்கிறது இந்தியாவில் அதிக மாசுபட்டிருக்கும் பெரு நகரங்களில் காற்றின் தரத்தை கண்காணிப்பது போதுமானதாக இல்லை. ஆகவே அது ஒரு சுகாதார நெருக்கடி என்று அடையாளங் காணப்படுவதில்லை. அதை தீர்ப்பதுமில்லை. அரசாங்கம் சில நகரங்களில் அதுவும் சில பகுதிகளில் மட்டுமே  கண்காணிப்பு செய்கின்றது. ஆகவே குடியிருக்கும் மக்களுக்கு தங்கள் பகுதி எவ்வளவு மாசு பட்டிருக்கிறது என்பது தெரிவதில்லை. இங்குதான் மலிவு விலை கண்காணிப்பு சாதனங்கள்(Low Cost AQM-Air Quality Monitors) உதவுகின்றன. பெங்களூரில் ஒயிட் பீல்ட் எனும் பகுதியில் கிராபைட் இந்தியா எனும் தொழிற்சாலை அந்தப் பகுதியில் மாசுபடுவதற்கு பெருமளவு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அங்கு 13 இடங்களில் ஏகியுஎம்(AQM) பொருத்தப்பட்டபின் அந்த தொழிற்சாலை தான் மாசுபடுவதற்குக்காரணம் என்று  நிரூபிக்கப்பட்டது.நீண்ட  சட்டப் போராட்டத் திற்குப் பிறகு அந்த  தொழிற்சாலை மூடப்பட்டது.   வடசென்னையில் மக்கள் நெருக்கமாக  வாழும் பகுதியில் அனல்மின் நிலையம்  அமைக்க திட்டமிடப்பட்டது. சூழலியல் ஆர்வலர்களும் மீனவ சமுதாய மக்களும் எதிர்த்தபின் அது கைவிடப்பட்டது. 2௦17ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் கடுமை யான காற்று மாசு மற்றும் புகை  எச்சரிக்கை யினால் பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஓரிரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதிலெல்லாம் விழிப்புடன் இருக்கவும் மாசு ஏற்படுத்துபவர்களை தண்டிக்கவும் குறைந்த செலவு ஏகியூஎம்(AQM)தான் மக்களுக்கு உதவின.

கடந்த சில வருடங்களாகத்தான் குறைந்த செலவு ஏகியுஎம்கள் சந்தைக்கு வந்துள்ளன. அவை எளிதாக பொருத்தவும் அளவீடுகளை எடுத்து ஆய்வு செய்யவும் முடிகிறது. அரசாங்கம் பொருத்தும் ஏகியுஎம்கள் பெரும் விலைகொண்டவை. அளவீடுகள் மிகத் தாமதமாகவே  எடுக்கமுடியும். இதற்கு மாறாக குறைந்த செலவு ஏகியூஎம்கள் பயனீட்டாளரின் அருகாமையில் இயங்குகிறது; சாதாரண மக்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்றில் எந்த  அளவு மாசுபட்டிருக்கிறது எனபதை எச்சரிக்கிறது.   காற்று மாசினால் ஏற்படும் உடல் நலக் குறைவு குறித்து முதலில் ஆய்வுகள் நடத்திய  சித்தரஞ்சன் தேசிய புற்று நோய் ஆய்வு மைய மேனாள் துணை இயக்குனர் மனாஸ் ரஞ்சன் ராய் ‘புகை பிடிக்காத  1.3 இலட்சம் மக்களிடம் நடத்திய ஆய்வில் காற்று மாசு உடல்  நலத்தையும் மன நலத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது என்பதைக் கண்டோம்’ என்கிறார். ‘பி எம்1௦ போன்ற ஒற்றைக் காரணியை துல்லியமாகவும் தொடர்ந்து சரியாகவும் அளவிடும் கருவி கூட பெரிதும் உதவும்’ என்றார்.  

ஐ ஐ டி கான்பூர் ஆய்வாளர்கள் துல்லியமாக தரவுகளைத் தரும்விதமாக இந்தக் கருவிகளை மேம்படுத்தியிருப்பதும்(calibrate) இந்தக் கருவிகளின் பயன்பாடு உயர்வதற்கு உதவி  செய்திருக்கிறது.   ஒழுங்குபடுத்தும் (REGULATORY) பணிக்காக அரசாங்கத்தால் பொருத்தப்படும் கருவிகள் மிகத் துல்லியமாக இயங்க வேண்டும். இந்த மலிவு விலைக் கருவிகள் அதை செய்ய முடியாது. ஆனால் நாங்கள் அதை  சரியான அளவீடுகளுக்கு மிக நெருக்கமாக காட்டும் விதமாக மேம்படுத்தியிருக்கிறோம்’ என்கிறார் அந்த மையத்தை சேர்ந்த எஸ்.என்.திரிபாதி. ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல் கூட்டணியின் தலைவர் ஐஸ்வர்யா சுதிர் தங்களது அமைப்பு பெங்களூரில் நாற்பது இடங்களில் இந்தக் கருவிகளைப் பொருத்தி வருவதாகக் கூறுகிறார். எந்த அளவிற்கு இந்தக் கருவிகள் நெருக்கமாக பொருத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நடவடிக்கைகள் எடுப்பதும் எளிது.மேலும் காற்று மாசை ஏற்படுத்தும் ஆதார இடங்களையும் கண்டுகொள்ள முடியும் என்கிறார் அவர். தரவுகளை ஜனநாயகப்படுத்துவதில்தான் இந்த மலிவு விலைக் கருவிகளின் உண்மையான மதிப்பு இருக்கிறது என்கிறார் ஹெல்த் எனெர்ஜி இனிஷியேடிவ் (HEI) சேர்ந்த ஷிவேதா நாராயன். ‘இது விலை மதிப்பற்ற கருவி. காற்று மாசினால் பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் நிர்வா கத்திடம் ஆதாரங்களைக் காட்டி நடவடிக்கை எடுக்க கோர முடியும் என்கிறார் அவர்.

(தி இந்து ஆங்கில நாளிதழ் 08/06/19 சிபி அரசு கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்)


 

;