பன்றியின் இதயம் பலனளிக்குமா?
அமெரிக்காவிலுள்ள மேரிலாண்ட் மருத்துவ மனையில் இறக்கும் தருவாயிலிருந்த ஒரு வருக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பன்றி யின் இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பின் அவர் எழுந்து நாற்காலியில் உட்காரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு நடக்கும் இரண்டாவது மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஆகும். கடந்த வருடம் மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவர் இரண்டு மாதங்களே பிழைத்திருந்தார். மனித உறுப்புகள் கிடைப்பதில் மிகுந்த தட்டுப்பாடு உள்ளதால் விலங்கு களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக் கின்றன. நமது தற்காப்பு அமைப்பு .(immune system) அத்தகைய அயல் திசுக்களை உடனடியாக அழித்துவிடுகின்றனஎனவே மனித உறுப்புகளை ஒத்திருக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேறு சில மருத்துவமனைகளில் பன்றியின் இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக கிடைத்த உடலில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கற்றுக்கொண்டு, செனோடிரான்ஸ் பிளாண்ட்ஸ் எனப்படும் விலங்கு உறுப்பு மாற்று சிகிச்சை துறையில் முறையான ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். கடுமையான பரிசோதனைகள் இல்லா மல் உயிருள்ள ஒரு மனிதரில் இத்தகைய முயற்சி நடத்து வதற்கு அந்த மருத்துவமனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டியிருந்தது. இத்தகைய அனுமதி, வேறு எந்த வாய்ப்பும் இல்லாத அவசர நிலைமைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த முறையிலுள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டுள்ளேன் என்று அந்த நோயாளி ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மனைவி “ இன்னும் சிறிது காலம் சேர்ந்து இருக்கலாம் என்பதை தவிர வேறு எதிர்பார்ப்புகள் இல்லை. வீட்டின் முன்பக்கத்தில் அமர்ந்து சேர்ந்து காப்பி குடிப்பது என்கிற எளிய விசயமாகக் கூட அது இருக்கலாம்” என்கிறார்.
புயலின் வேகம் கூடுவதன் காரணம்
புயல்களின் வேகம் ஒரு நாளுக்குள் 56கிமீ வேகம் அதிகரித்தால் அதை தீவிர புயல் என்று அமெரிக்க தேசிய புயல் மய்யம் வரையறை செய்துள்ளது. அண்மையில் அமெரிக்காவில் வீசிய புயல்கள் லீ மற்றும் ஜோவா இந்த வரையறையை எளிதாக தாண்டி வீசியது. இதனால் மக்களுக்கு அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைப்பதில்லை. உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் அதிக சேதம் உண்டாகின்றன. குறுகிய நேரத்தில் புயலின் வேகம் அதிகரிப்பதற்கு கடலின் வெப்பமான நீர்ப்பரப்பு, காற்று மண்டலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் செங்குத்தான காற்றின் அலைக்கழிப்பு ஆகியவை காரணம் என்கிறார் கொலோரோடா மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி பிலிப் கிளாட்ஸ்பக். விண்ட் ஷியர் எனப்படும் காற்றின் அலைக்கழிப்பு, காற்று மண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறு திசைகளில் காற்று வீசுவதால் ஏற்படுகிறது. இந்த நிகழ்வானது புயலின் மையத்திலிருந்து வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் இழுத்து இறுக்கமான சுழலாக மாறி புயலின் மேற்பகுதியை தள்ளி செல்கிறது. காலநிலை கணினி மாதிரிகளைக் கொண்டு இவ்வாறு வேகம் அதிகரிப்பதற்கு மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களே காரணம் என்று அறியப்பட்டுள்ளது.
4 இலட்சம் ஆண்டு பழமையான மர கருவிகள்
ஸாம்பியா நாட்டில் கலம்பூ அருவி தொல்பொருள் அகழ்விடத்தில் 476000 ஆண்டுகளுக்கு முந்தய ஒன்றுக்கொன்று இணைக்கும் மரத்துண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மனிதர்கள் கட்டு மானங்களுக்கு மரத்தை நீண்ட காலம் முன்பே பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. நமக்கு கிடைத்துள்ள மிகப்பழைய மனிதப் படிமங்கள் 315000 ஆண்டுகளுக்கு முந்தை யதே. இந்த மரத் துண்டுகள் அதற்கு ஒரு இலட்சம் ஆண்டு களுக்கு முந்தையது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளிவந்துள்ளது. தொடக்க கற்காலத்தை சேர்ந்த மரத்தொல்பொருட்கள் மிகவும் அரிதானது. ஏனெனில் மரம் அவ்வளவு நீண்ட காலம் அழியாமலிருக்காது. ஆனால் சாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மரத்துண்டுகள், நீர் நிரம்பிய படிமங்களில் இருந்ததால் கெடாமல் பேணப்பட்டிருந்தனவாம். கலம்பூ அருவியில் அதிக உயரத்தில் நீர் நிறைந்திருக்குமாம். இதனால் ஆக்சிஜன் குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே அழுகுவதை தாமதப்படுத்துகிறது. மேலும் அதன்மீது படியும் சேறு போன்றவை புதைப்படிவமாக மாற்றுகின்றன. இதைப் போன்ற தொடக்க கற்காலத்தை சேர்ந்த வேலைப்பாடுகள் கொண்ட மரத்துண்டுகள் ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலோ ஈரோ ஆசியப் பகுதியிலோ காணப்படவில்லை. மரத்துண்டுகள் தவிர ஆப்பு, தோண்டும் குச்சி, வெட்டப்பட்ட மரத்துண்டு மற்றும் கிளை ஆகியவையும் அங்கு கிடைத்துள்ளன.