science

img

ஐன்ஸ்டீன் ஆகலாம் வாங்க..!!

கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவது, வெளிநாடுகளுக்குச் சென்று டாலரில் சம்பாதிப்பது போன்றவற்றோடெல்லாம் கூட ஒப்பிட வேண்டியதில்லை. விஞ்ஞானி ஆக விருப்பமா என்றால் வேகமாக வேண்டாம் என்று தலையாட்டுபவர்களில் சாதாரண தனியார் நிறுவன வேலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களும் உண்டு. ஆனால், விஞ்ஞானிகளாக விரும்புவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.மரியாதை, அங்கீகாரம் என்பதோடு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. பட்டப்படிப்பு, முதுகலை, ஆய்வு என்று தனது முழுக்கவனத்தையும் செலுத்தி முனைவர் பட்டத்தை வெல்பவருக்கு பல்வேறு ஆய்வு மையங்களில் பணி காத்திருக்கிறது. காலையில் பத்து மணிக்கு அலுவலகம் சென்று மாலை ஐந்தரை மணிக்கு திரும்பி விடும் மனநிலை ஆய்வுப்பணிக்கு உகந்ததாக இருக்காது. ஆனால், தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் வாய்ப்பு விஞ்ஞானிக்குக் கிடைக்கும்.

பத்தாம் வகுப்பு நிறைவு செய்யும்போதே அறிவியல் பாடங்களைத் தேர்வு செய்து கொள்வது நல்லது. இளம் விஞ்ஞானிகளுக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதற்கான வாய்ப்புகளும் மாணவப் பருத்திலேயே தரப்படுகின்றன. தன்னார்வத்தோடு இவற்றில் பங்கேற்பது அவசியம். இளம் பருவத்திலேயே ஆய்வு மனப்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவும். காரண காரியமின்றி எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, அதற்கான பதில்களைப் பெறும் வழக்கத்தை இளமையிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.அறிவியல் பாடப்பிரிவை எடுத்து, பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ளவர்கள் ஆய்வுகளை ஊக்குவிக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து பயிலலாம். கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற முயற்சிக்கலாம். பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்சி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாகும். அதேபோல் டாடா குழுமத்தின் அறிவியல் ஆய்வு மையங்களும் மேற்படிப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதை இலக்காகக் கொண்டு அறிவியல் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். கீழ்க்கண்ட மையங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. 

1. பாபா அணு ஆராய்ச்சி மையம்

2. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம்

3. விவசாய ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில்

4. வெப்பமண்டல வானிலைக்கான இந்திய மையம்

5. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக்கான கவுன்சில்

6. அறிவியல் மேம்பாட்டுக்கான இந்தியக் கழகம் திறமையான மாணவர்கள் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டால் ஐன்ஸ்டீன்கள் உருவாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

;