science

img

ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி

நார்வேயில் இருந்து உணவு கிடைக்காமல் நரி ஒன்று தனியாக கனடாவரை பயணித்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நார்வே நாட்டுக்குச் சொந்தமான ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டத்தில் இருக்கும் ஸ்பீட்ஸ்பெர்ஜன் தீவில் இருந்து வடக்கு கனடாவுக்கு, 76 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து 3,506 கிலோமீட்டர் தூரத்தை அந்த நரி கடந்துள்ளது. 

நார்வே போலார் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், நரிக்குட்டி ஒன்றின் கழுத்தில் ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

பயணத்தைத் தொடங்கிய 21 நாட்களில் 1,512 கிலோ மீட்டர் பயணித்தது அந்த நரிக்குட்டி. சில நாட்களுக்குப் பிறகு தனது பயணத்தின் இரண்டாம் பகுதியில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்தது. நாளொன்றுக்கு சராசரியாக 46 கிலோ மீட்டரை விட சற்று கூடுதலான தொலைவை கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில் 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து, 76 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து 3,506 கிலோமீட்டர் தூரத்தை அந்த நரி கடந்துள்ளது. 

இதுகுறித்து போலார் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஈவா பியூலி (Eva Fuglei) கூறுகையில்,” பொதுவாக இப்பகுதியில் கோடைக்காலத்தில் விலங்குகளுக்கு உணவுத்தட்டுப்பாடு இருப்பதில்லை. ஆனால் பனிக்காலம் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்திவிடுகிறது. இதன் காரணமாகவே இந்த நரி இதுவரை தனது வாழ்நாளில் பார்த்தேயிராத இடங்களுக்கு பயணித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நரிகளின் பயணம் பாதிப்படைந்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, உருகிவரும் ஆர்க்டிக் பனிதான். இதனால் பனிக்காலத்தில் உணவு அதிகம் கிடைக்கும் ஐஸ்லாந்து பக்கம் பயணிக்க முடியாமல் தவிக்கின்றன இந்த நரிகள். இது இப்படியே சென்றால், பனிக்காலத்தில் ஷ்வல்பார்டு தீவு தனித்துவிடப்படும், இதனால் உணவுக்கு வழி இருக்காது என்பது நிதர்சனம். இந்தப் பெண் நரியைப் பொறுத்தவரை, சில மாதங்களுக்கு முன்பு ட்ராக்கர் செயல்பாடு நின்றுள்ளதால், கனடாவில் அது எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்கப்போகிறது என யாருக்கும் தெரியாது. ஆனால், உணவுப்பழக்கம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அதனால் அங்கு உயிர்பிழைக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 

;