science

img

இலக்கை துல்லியமாக அடைந்தது சந்திரயான் 2

புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திரயான் 2 முதன்முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி நிலவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான் 2 நுழைந்ததாக பெங்களூருவில் இஸ்ரோ மையத் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், “நிலவின் சுற்று வட்டப்பாதையில் காலை 9.02 மணிக்கு நுழைந்தது சந்திரயான் 2. கடந்த 14ஆம் தேதி புவி சுற்று வட்டப்பாதையிலிருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்டது சந்திரயான் 2. விநாடிக்கு 10.3 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக அடைந்தது சந்திரயான் 2. நிலவின் பாதையில் நுழைந்த சந்திரயான், அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு ,அதன் பின், நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக வேகமெடுக்கத் துவங்கும்.’’ “ஆர்பிட்டர் நிலவின் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருந்து நிலவினை கண்காணித்து வரும். செப்டம்பர் 2ம் தேதி சந்திரயான் 2ல் இருந்து பிரிந்து வெளியேறும் லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும் நிலவின் மேற்பரப்பில் செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கும். சிறிதளவு பிழை ஏற்பட்டாலும் சந்திரயான் 2 பாதையில் மாற்றம் ஏற்பட்டு விடும்” எனத் தெரிவித்துள்ளார் சிவன்.

சந்திரயான் 2 நிலவை அடைய  அதிக காலம் ஏன்?

பெங்களூரு, ஆக. 20- இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும் சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 20 செவ்வாயன்று புவியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கு நாட்களில் நிலவை சென்றடைந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலம் அதே நிலவை அடைவதற்கு 48 நாட்களை எடுத்துக்கொண்டது இது ஏன்?

தாமதத்திற்கான காரணம் என்ன?

1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட மூன்று வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கே நாட்கள் அதாவது ஜூலை 20ஆம் தேதியே நிலவில் தரையிறங்கிவிட்டது. அந்த விண்கலத்திலிருந்துதான் அடுத்த நாள், அதாவது ஜூலை 21ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நிலவில் முதல் முறையாக காலடி வைத்து அங்கிருந்த பல்வேறு மாதிரிகளை எடுத்துக்கொண்டு, ஜூலை 24ஆம் தேதி பூமிக்கு திரும்பினர். அதாவது, ஒட்டுமொத்தமாக 8 நாட்கள் மூன்று மணிநேரத்தில் தனது பயணத்தை அப்பல்லோ நிறைவு செய்தது. மனிதர்கள் இல்லாமல், வெறும் நிலவை சுற்றிவரும் செயற்கைக்கோள் மற்றும் நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆய்வு வாகனத்தை மட்டும் கொண்டுள்ள சந்திரயான் 2 நிலவை சென்றடைவதற்கு 48 நாட்களை எடுத்துக்கொள்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பின்னால் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு காரணங்கள் உள்ளன.

அப்பல்லோ 11 விண்கலத்தின் மொத்த எடை 2,800 டன்களாக இருந்த நிலையில்,சந்திரயான் 2-இன் மொத்த எடை 640 டன்களாக உள்ளது. இஸ்ரோவை பொறுத்தவரை, செயற்கைக்கோள்களை விண்ணிற்குள் ஏந்திச் செல்வதற்கு குறைந்த எடை கொண்ட பிஎஸ்எல்வி ரக விண்கலங்கள் பயன்படுத்தப்படும். சந்திரயானை பொறுத்தவரை, இது சற்றே வேறுபட்ட விடயம். இந்தியாவின் பெரும்பாலான விண்வெளிப் பயணங்கள் செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதையே இலக்காக கொண்டுள்ளன. ஆனால், அதைவிட பல மடங்கு நீண்ட தூரத்திலுள்ள நிலவுக்கு பயணிக்கும் சந்திரயான் விண்கலனில் ஆய்வுக் கருவிகளின் எடை மட்டுமின்றி, அத்தனை தொலைவுக்கு பயணிக்க தேவையான எரிபொருளும் அதிகளவில் இருக்கும்.

பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேறிய அப்பல்லோவின் ஒரு பகுதியின் எடை மட்டும் 45.7 டன்கள். அதில் 80 சதவீதத்தை அதற்கான எரிபொருள் மட்டும் எடுத்துக் கொண்டது. விண்வெளி வீரர்களை நிலவிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான ஆய்வு கருவிகளும் பொருத்தப்பட்ட ஈகிள் எனும் விண்வெளி வாகனத்திற்காக மட்டுமின்றி அதை ஏந்திச் சென்ற சாட்டர்ன் V எஸ்ஏ 506 எனும் திறன் வாய்ந்த விண்கலத்திற்காகவும் அதில் அதிகளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. எனவே, மிகப் பெரிய விண்கலம் மற்றும் அதிகளவிலான எரிபொருள் ஆகியவையே அப்பல்லோ 11 விண்கலம் நான்கே நாட்களில் நிலவை சென்றடைந்ததற்கான காரணம் என்று கூறுகிறார் பிர்லா அறிவியல் மையத்தின் இயக்குநர் பி.ஜி. சித்தார்த்.

குறைந்த எரிபொருள், அதிக மைலேஜ்

சந்திரயான் 2ஐ நிலவுக்கு சுமந்து சென்றுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டால் எரிபொருள் உள்பட மொத்தமாக அதிகபட்சம் 640 டன்களை மட்டுமே சுமக்க இயலும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏற்கனவே சந்திரயானை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டது. அங்கிருந்து சந்திரயான் தனது நிலவு பயணத்தை தன்னந்தனியாக மேற்கொள்ள வேண்டும். அப்பல்லோ 11 பயணத்தில் விண்கலத்தின் எடை மட்டும் 45 டன்கள். ஆனால், நிலவின் சுற்றுவட்டப் பாதையை சுற்றிவரும் செயற்கைக்கோள், நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வாகனம், தானியங்கி இயந்திரம் மற்றும் எரிபொருள் ஆகிய அனைத்தையும் சேர்த்தே சந்திரயானின் மொத்த எடை நான்கு டன்னிற்கும் குறைவுதான்.

சந்திரயான் 2 திட்டத்தை மிகவும் குறைந்த எரிபொருள் செலவில் நிறைவேற்றும் வகையிலான தொழில்நுட்பம் மட்டுமின்றி புதிய உத்தியையும் இஸ்ரோ பயன்படுத்தியுள்ளது. அதாவது, நிலவில் நேரடியாக தரையிறங்குவதற்கு பதிலாக, முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் ஏற்படும் நேரத்தில் நிலவை நோக்கி செல்லும் திட்டத்தை சந்திரயான் கொண்டுள்ளது. அதே போன்று நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்ததும், தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இடம் அருகே வரும்வரை காத்திருந்து நிலவில் தரையிறங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\

அதாவது, பூமியின் சுற்றுவட்டப் பாதையை 23 நாட்களுக்கு சுற்றி வரும் சந்திரயான் 2, 23ஆவது நாள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி, ஏழு நாட்களில், அதாவது தனது பயணத்தை தொடங்கிய 30ஆவது நாளில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும். நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த 13ஆவது நாள், சந்திரயான் 2யிலிருந்து தனியே பிரியும் ஆய்வு வாகனம், பூமியிலிருந்து சந்திரயான் புறப்பட்ட 48ஆவது நாளில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். மேற்குறிப்பிட்டுள்ள வித்தியாசமான அணுகுமுறையின் காரணமாகவே இஸ்ரோவால் மிகவும் குறைந்த செலவில் சந்திரயான் 2 திட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளதாக பி.ஜி. சித்தார்த் கூறுகிறார்.

 

;