science

img

அமெரிக்க அரசியல் வானில் சாண்டர்ஸ் எனும் சிறு ஒளி - அ.கோவிந்தராஜன்

வலதுசாரிகளுக்கு எதிரான சிறு சிறு நம்பிக்கைகளைக் கூட இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பகிர்ந்துக் கொள்ள வேண்டியுள்ளது. நம்பிக்கைக்குரிய  சிறு விஷயங்கள்   அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், கீழை நாடுகள் என உலகில்  எங்கு  நடைபெற்றாலும் நமது பேசு பொருளாக்கி கொள்ள வேண்டியுள்ளது. அத்தகு பேசு பொருளில் ஒன்று தான் பெர்னி சாண்டர்ஸ் எனும் பெயர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்  பெர்னி சாண்டர்ஸ். இவர் ஜனநாயக கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சோசலிச கருத்துகளை  அமெரிக்க அரசியலில் தொடர்ந்து முன்வைப்பவர். 78 வயதுடைய பெர்னி சாண்டர்ஸ் தொடர்ச்சியாக வங்கி, பொது சுகாதாரம், குடியேற்றம் என பலச் சீர்திருத்தங்களை அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறச் செய்பவர். இச்சீர்திருத்தங்கள் எல்லாம் பொருளாதார பலம் பொருந்தியவர்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். இருந்தாலும் விடாப்பிடியாக மக்கள் நலனில் நின்று அவர்களுக்காக பேசி வருபவர். இத்தகு பெர்னி சாண்டர்ஸை இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, உலகமே  உற்றுக் கவனித்து வருகிறது. ஏன், ஜனநாயகக் கட்சியினரே கூட பெர்னி சாண்டர்ஸ்  குறித்து தற்பொழுது அலற ஆரம்பித்துள்ளனர். காரணம், 2020 நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். இத்தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதற்கான  உட்கட்சித் தேர்தல் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல மாகாணங்களில் பெர்னி சாண்டர்ஸ் பெறும் வாக்குகளும், வெற்றிகளும் பலரை பயமுறுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் இதயப்பகுதியான அயோவாவிலும், வடகிழக்கு பகுதியான நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்திலும் பிற ஜனநாயக கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் பெர்னி சாண்டர்ஸ் மிகப் பெரும் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். 

குறிப்பாக, மாறுபட்ட வெவ்வேறான சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியான நெவாடாவில் சமீபத்தில் சாண்டர்ஸ் பெற்ற வெற்றி தான்  பலரை கலக்கமுறச் செய்துள்ளது. வயது, பாலினம், கல்வி மற்றும் வருமானம் ஆகிய எந்த வித வித்தியாசங்களுமின்றி வெள்ளையர்கள், லத்தினோக்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் சாண்டர்ஸ் நெவடாவில் பெற்ற வாக்குகள் மிக முக்கியமானவை. ஒரு வான வில்லில் உள்ள கலவையான வண்ணங்கள் போன்றது இவ்வெற்றி. இந்நிலையில் ‘சூப்பர் செவ்வாய்கிழமை’ என்று அழைக்கப்படும் மார்ச் 3 அன்று கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட 14 மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தல்களிலும் பெர்னி சாண்டர்ஸ்க்கு  போதிய பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டால்,  ஜனநாயக கட்சி சார்பாக  வேட்பாளராக  தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து அவரை தடுத்து நிறுத்துவது கடினம். எனவே, மார்ச் 3 அன்று நடைபெற உள்ள போட்டியிலேயே சாண்டர்ஸை தோற்கடிக்கும் முயற்சிகள் துவங்கி உள்ளன. 

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியிலேயே மிகவும் பிரபலமான, அதிகாரம் மிக்க ஹிலாரி கிளிண்டன் பல முறைகேடுகள் செய்யப்பட்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போட்டியிலேயே சாண்டர்ஸ் 46 சதவீத பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார். ஒரு வேளை சாண்டர்ஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தால்  டிரம்ப் வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற கருத்து கூட இருந்தது. இப்பின்னணியில் தான் தற்போது சாண்டர்ஸ் பெற்று வரும் வெற்றிகளை நாம் நம்பிக்கையோடு பார்க்க வேண்டியுள்ளது. 

தன்னை ‘ஜனநாயக சோசலிஸ்ட்’ என்று அழைத்துக் கொள்ளும் சாண்டர்ஸ் முன் வைக்கும் கொள்கைகள் தான் இப்பொழுது உலகம் முழுக்க நம்பிக்கையளிக்கிறது. அனைவருக்கும் இலவச மருத்துவம், அனைவருக்கும் கல்லூரி வரையிலான இலவசக் கல்வி, பணக்காரர்களுக்கு கூடுதலான வரி, எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல், வால் ஸ்ட்ரீட்டிலிருந்து பொருளாதாரத்தை மாற்று திசையில் திருப்புவது, அதிகாரத்தையும், செல்வத்தையும் மறுபங்கீடு செய்தல் என சாண்டர்ஸ் முன் வைக்கும் கொள்கைகள் தான் அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. அமெரிக்க அதிகார வர்க்கத்திற்கும் அச்சுறுத்தலைத் தருகிறது. ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் நாட்டிலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சோசலிச கருத்துகளைக் கொண்ட ஒருவர் தொடர்ச்சியாக அக்கருத்துகளை முன் வைப்பதும், அடை காப்பது போல் காத்து வருவதும் உரிய சூழ்நிலை வரும் பொழுது அக்கருத்துகள் முன்னுக்கு வருவதும் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள். அடுத்து வரும் நாட்களில் பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக பிரகாசமான வாய்ப்பு இருந்தாலும் கூட நிறுத்தப்படாமல் போகலாம்; இல்லை, வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் அவர் முன் வைக்கும் மாற்றினை அவ்வளவு எளிதாக அமெரிக்க தேர்தல் கடந்து சென்றிட முடியாது என்பது மட்டும் உறுதி.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மதுரை மாநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்

;