science

img

வேளாண் நிலம் : மராட்டிய மாநிலத்தில் புதிய வேளாண் வாழ்வாதாரத் திட்டங்கள்

வறட்சியின் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பேப்பர் பைகள் தயாரிப்பில் ஈடுபடுவதன் வாயிலாக தங்கள் கிராமங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் விற்பனை வாயிலாக சந்தையின் தேவையை நிறைவு செய்வதுடன் அதிக அளவு லாபமும் பெற்று வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மழை இல்லாமல் வறண்ட காரணத்தால் புதிய வேளாண் சார்ந்த வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்தி அவுரங்காபாத் பகுதி விவசாயிகள் புதிய வேளாண் சார்ந்த வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டு அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் லாபம் பெற்று வருகின்றனர். 

குறிப்பாக, ஷெல்கான் (Shelgaon) மற்றும் நார்லா (Narla) என்ற அதிக அளவு வறட்சி பாதித்த கிராமங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்கு சென்றுவிட்டது. முந்தைய சராசரி அளவான 675 மி.மீ. என்ற அளவை விட மிகவும் குறைந்து 135 மி.மீ. என்ற அளவிற்கு வந்துவிட்டதே கடுமையான தண்ணீர் பிரச்சனைக்கு காரணம். இத்தகைய நடைமுறை சூழலில் கடந்த 2017 - 18 ஆண்டுகளில் ஷெல்கான் கிராமத்திலும் 2018 - 2019 ஆண்டில் நார்லா கிராமத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி அவற்றை மீட்டு விவசாயிகளுக்கு பிடபிள்யுசி (PWC) இந்தியா நிறுவனம் வழங்கியது. இதன் வாயிலாக விவசாயிகளை வெள்ளாடுகளை வளர்க்க செய்வதே நோக்கம். நார்லா கிராமத்தில் மட்டும் மொத்தமாக 227 வெள்ளாடுகள் கேட்டு விண்ணப்பமும் ஷெல்கான் கிராமத்தில் 304 வெள்ளாடுகள் கேட்டு விண்ணப்பங்களும் பெற்றப்பட்டு வெள்ளாடுகள் பிடபுள்யுசி இந்தியா (PWC india) அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டன. 

ஒரு வெள்ளாடு சுமார் ரூ.6 ஆயிரம் என்ற அளவில் விவசாயி 2 ஆயிரம் மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள பணம் பிடபுள்யுசி (PWC) இந்தியாவின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டது. முன்பு தங்கத்தை அடகு வைத்து தங்களது தேவைகளுக்கு கடன் பெற்ற விவசாயிகள் தற்போது வெள்ளாடுகள் விற்பனை வாயிலாக தங்களது நிதி தேவையை சந்தித்து வருகின்றனர். 

அடுத்ததாக விவசாயிகள் பேப்பர் பைகள் செய்யும் தொழிலுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மும்பை போன்ற பெருநகரங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை உள்ளதால் பேப்பர் பைகளின் தேவை அதிகமாக காணப்பட்டது. இத்தேவையை நிறைவு செய்ய கிராம மக்கள் மும்பை வரை சென்று தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து அதிகளவு லாபம் சம்பாதித்து வருகின்றனர்.இவ்வாறு வறட்சியின் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பேப்பர் பைகள் தயாரிப்பில் ஈடுபடுவதன் வாயிலாக தங்கள் கிராமங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் விற்பனை வாயிலாக சந்தையின் தேவையை நிறைவு செய்வதுடன் அதிக அளவு லாபமும் பெற்று வருகின்றனர். இத்தகைய புதிய வேளாண் சார்ந்த வாழ்வாதாரத் திட்டங்களை வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக விவசாயிகள், கிராமங்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பின்பற்றினால் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தங்களது வாழ்வாதாரங்களை பாதுகாப்பதுடன் அதிகளவு லாபமும் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை.

முனைவர் தி.ராஜ்பிரவின்

கட்டுரையாளர்: 
இணைப் பேராசிரியர் வேளாண் விரிவாக்கத் துறை அண்ணாமலை பல்கலைக் கழகம்