science

img

நிலவில் ஹைட்ரஜனை தேடும் பிரக்யான் ரோவர்!

நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஹைட்ரஜன் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பாகம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.

இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. சில மணி நேரங்களுக்குப் பிறகு லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.

தரை இறங்கிய இடத்திலிருந்தபடி லேண்டரும், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ரோவரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ரோவரில் உள்ள லிப்ஸ் சாதனம் மூலம், நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பதை இஸ்ரோ கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ரோவரில் உள்ள லிப்ஸ் (Laser-Induced Breakdown Spectroscope-LIBS) ஆய்வுக் கருவியின் மூலம் தென்துருவத்துக்கு அருகே உள்ள நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் (கந்தகம்) தனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹைட்ரஜனைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.