சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்ட நிலையில் நிலவை மிகவும் நெருங்கி உள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செப்டம்பர் 1 ஆம் தேதியன்று மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 119 கிமீ தொலைவையும் அதிக பட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது.
செப்டம்பர் 2 திங்களன்று மதியம் 1.15மணியளவில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று காலை லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. அப்போது, நிலவின் நீள்வட்டப்பாதையில் குறைந்தபட்சமாக 104 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 128 கிமீ தொலைவிலும் லேண்டர் சுற்றத் தொடங்கியது.
இன்று அதிகாலை லேண்டரின் சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. இதற்காக புதனன்று அதிகாலை 3.42 மணியளவில் திட்டமிட்டபடி, அதன் என்ஜின் 9 வினாடிகள் இயக்கப்பட்டது. இதனால், லேண்டர் நிலவை மேலும் நெருங்கி, குறைந்தபட்சம் 35 கி.மீ., அதிகபட்சம் 101 கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. அதேசமயம் ஆர்பிட்டர் குறைந்தபட்சம் 96 கிமீ, அதிகபட்சம் 125கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் நிலவை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 7ம் தி நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறக்கப்படும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் ஓராண்டு காலம் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் 14 நாட்கள் ஆராய்ச்சி பணியை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.