science

img

சர்வீஸ் ஸ்டேசன்...!அனுபவக்கதை

மாலை நாலுமணி இருக்கும், மேகங்கள் கருத்து மழை வருவது போல் இருந்தது. சங்க அலுவலகம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணன் ஏதோ நியாபகம்வர பைக்கை மெயின் ரோட்டில் இருந்து வலதுபுறம் திருப்பி குண்டும் குழியுமாக இருந்த மண்ரோட்டில் செலுத்தினார். நூறு மீட்டர் தூரம் மண்ரோட்டில் சென்று வேங்கையனின் சர்வீஸ் ஸ்டேசனில் கிருஷ்ணன் தனது பைக்கை கொண்டுபோய் நிறுத்தினார். பல நாட்களாக கழுவாமல் சரியாக கவனிக்காமல் இருந்த காரணத்தால் காய்ந்துபோன மண்சேறும் அழுக்கும் பைக்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.அழுக்கினை ஆசைதீர அப்பியிருந்த சர்வீஸ் ஸ்டேசனுக்குரிய சீருடையை அணிந்து சிரித்த முகத்துடன் "வாங்க, வாங்க.. எங்க தோழர் பலமாசமா இந்த பக்கமே வரலையே" வேங்கையன் வரவேற்க, "ஆமாம் தோழர் எங்க வரலாமுன்னா, கொஞ்சம் வேலை" பைக்கை தள்ளி வேங்கையன் கட்டுப்பாட்டில் கொடுத்தபடியே கிருஷ்ணன் பதில் சொன்னார்.கிருஷ்ணன் ஒரு தொழிற்சங்க பொறுப்பாளர். வேங்கையன் சங்கத்தில் ஒரு உறுப்பினர். வேங்கையன் சொந்தமாக வாகனங்களை கழுவும் சர்வீஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். வேங்கையனுடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேர் அங்கு பணியாற்றுகின்றனர். ஒருவர் பழனியப்பன் மற்றொருவர் மாரப்பன்."பழனிப்பா இந்தா தோழர் வண்டியை ஒரு அடி அடிச்சுடு" வேங்கையன் பழனியப்பன் வசம் வண்டியை ஒப்படைத்தார். "இன்னைக்கு தண்ணி மட்டும் அடிச்சுக்கலாம், மழை கழிஞ்சப்பறம் சோப்பாயில் போட்டு வண்டியை தேச்சு கழுவிக்கலாம் தலைவரே" பழனியப்பன் தலைவரிடம் பேசியபடியே கம்ப்ரசர் சுவிட்சைப்போட்டு இயக்கினார்.தண்ணீருடன் காற்றும் சேர்ந்துகொண்டதால் வேகம் அதிகரித்து பழனியப்பன் கையில் இருந்த தண்ணீர் பைப் சாமியாடியது. அதன் வாயில் இருந்து பீரிட்டு வந்த காற்றுடன் கலந்த தண்ணீர் பைக்கின் மேல் ஆவேசமாக பாய்ந்தது. தண்ணீரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சேறும் அழுக்கும் ஓட்டம் பிடித்தன."ஒருநாளைக்கு எத்தனை வண்டிகள் வரும்" பணிமனையில் இருந்த பழைய சேர் ஒன்றில் அமர்ந்தபடி கிருஷ்ணன் வேங்கையனிடம் கேட்டார். "கரெக்டா சொல்லமுடியாதுங்க தோழர், ஒருநாளைக்கு முப்பது வண்டிகூட வரும், ஒவ்வொரு நாளைக்கு மூனுவண்டி வந்தா பெருசு" பஸ்சில் இருந்து கழற்றிய பழைய குசன் சீட்டில் அமர்ந்திருந்த வேங்கையன் சிரித்தபடியே கூறினார்.


"இன்னைக்கு அவ்வளவுதான் பொழப்பு, மழை இருட்டிக்கிச்சு, உங்க வண்டிதான் கடைசி தலைவரே" வண்டியின்மேல் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியே பழனியப்பன் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நொடியே "சொலசொல வென" மழை பெய்ய ஆரம்பித்தது. கழுவிய வண்டியை கொட்டகைக்குள் தள்ளி நிறுத்திவிட்டு "பாத்தீங்களா, நா சொன்னது சரியாப்போச்சா" பழனியப்பன் சிரித்தார்."ஒரு வண்டிக்கு எவ்வளவு வாங்குவீங்க, ஒரு நாளைக்கு சராசரியா எவ்வளவு கிடைக்கும்" கிருஷ்ணன் கேட்க, "பைக்குன்னா 80 ரூவா, பஸ் லாரின்னா 250 ரூவா, டேங்கர்ன்னா 600 ரூவா, மினி வண்டின்னா 150 ரூவா வாங்குவோம்" வேங்கையன் பட்டியல் போட்டார்."இப்ப பஸ், லாரிக்கு 50 ரூவா ஏத்தி 300 ரூவா வாங்கலாமுனு யோசிச்சிருக்கோம் தலைவரே, கிரீஸ் டீசல் விலையெல்லாம் தாறுமாறா ஏறிப்போச்சு" வேலையை முடித்து கையை கழுவியபடியே பழனியப்பன் கூறினார். "எங்க தோழரே 300 ரூவா வாங்கினா அதுல பாதிக்கு மேல கிரீசுக்கே செலவாயிருது, ஒன்றும் கட்டுபடியாக மாட்டீங்குது" வேங்கையன் பொருட்களை ஒழுங்குபடுத்தியபடியே புலம்பினார்."அப்ப மாதம் என்னதான் வருமானம் கிடைக்குது, எப்படி சமாளிக்கிறீங்க, ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டாயிரம் வீதம் மாதம் ஒரு அறுபதாயிரம் கிடைக்குமா?" கிருஷ்ணன் வேங்கையனிடம் தொழில் நிலைமை குறித்து கேட்டார்."அறுபதாயிரம் கிடைச்சா பரவாயில்லையே தோழர், ஓரளவு சமாளிச்சுருவோம், மாதம் ஐம்பதாயிரம் தாண்டுறதே கஷ்டம்" சிரமத்தை வேங்கையன் கிருஷ்ணனிடம் பகிர்ந்தார். "அப்ப செலவு" கிருஷ்ணன் வேங்கையனிடம் பரிவுடன் கேட்டார்."மாதாமாதம் கரெண்ட்பில் பதினோராயிரம், கீரீஸ் ஆயில் டீசல் ஆறாயிரம், இடத்து வாடகை பனிரண்டாயிரம், ஆள்கூலி பனிரண்டாயிரம், இதர பராமரிப்பு இரண்டாயிரம், டீசெலவு, சாப்பாடு செலவு இரண்டாயிரம் இப்படி எல்லாம் கழிச்சு பாத்தா.! மிச்சம் இருப்பது தான் எனக்கு தோழர், என்னமோ கவுரவத்திற்கு தொழில் செய்யுறம் அவ்வளவு தான்" வேதனையை வெளிப்படுத்தி மாதமுழுவதுமான தொழில் பட்ஜெட்டை போட்ட வேங்கையன். "மழை உட்டுருச்சு இருங்க தோழர், தம்பிய டீ வாங்கிட்டு வரச்சொல்ரேன்" என தனது பக்கத்து லாரி பட்டறையில் வேலை செய்யும் சின்னத்தம்பியை பார்க்கச் சென்றார்.


"இந்த சர்ட்டை தொவைச்சு எத்தனை நாளாச்சு, தொவைக்கலாமல்ல" பக்கத்தில் நின்ற பழனியப்பனிடம் கிருஷ்ணன் கேட்டார். "இதுதாங்க தலைவரே தொழிலோட அடையாளமே இதுதான். இத தொவைச்சா வாங்குற சம்பளம் சோப்பு வாங்கத்தான் ஆகும்" வெட்கம் கலந்த சிரிப்புடன் பழனியப்பன் கூறினார்."உங்களுக்கு ஒருநாளைக்கு சம்பளம் எவ்வளவு" கிருஷ்ணன் கேட்டார். "சம்பளமா 350 ரூவா தலைவரே, பாவம் தொழில் நல்லா இருந்தா கேட்காமலே சம்பளத்த சேத்து கொடுத்துருவாரு, இப்ப எங்க சம்பளத்தவிட அவருடைய கூலி குறைவாத்தான் இருக்குமுனு நினைக்கிறேன், ஏன்னா வருமானத்தவிட செலவு ஜாஸ்தியா செய்யுறாரு பாவம், எல்லா பொருளோட வெலையும் ஏறிப்போச்சு, கரண்டுபில்லு, வாடகை ஒன்னும் சமாலிக்க முடியல அவரால, நானே கண்கூடா பாக்குறேன்" தனது சக தோழனின் உண்மை நிலையை தொழிலாளிக்கே உரிய நேர்மை எண்ணத்துடன் பழனியப்பன் வெளிப்படுத்தினார்."மொதல்ல இந்த மோடிய வூட்டுக்கு அனுப்புனாத்தான் நாடு நல்லா இருக்கும், என்னைக்கு ரூவா நோட்டு செல்லாதுனு அறிவிச்சாறோ அப்பவே எல்லாத் தொழிலும் படுத்துருச்சு" பழனியப்பன் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.அப்போது சின்னத்தம்பியை பார்த்து விட்டு அங்கு வந்த வேங்கையன் "ஆமாங்க தோழர் கள்ள நோட்ட ஒழிக்கிறேன், கருப்பணத்தை ஒழிக்கிறேன்னு சொல்லி இந்த கூறுகெட்ட மனுசன் சனங்களை கெணத்துல தள்ளின மாதிரி தள்ளி தும்பப்படுத்துனது தா மிச்சம், கருப்பு பணமெல்லாம் வெள்ளையாத்தா மாறிச்சோ தவுர ஒழியுமில்லை, கிழியுமில்லை" என தனது பங்குக்கு கூறினார்."அதோடு உட்டாரா, உலகத்திலேயே சனங்க மேல வரிபோட்டத்துக்காக நடுச்சாமத்துல விழா கொண்டாடுன ஒரே மனுசன் மோடி தா" என பழனியப்பன் கூற, "இந்த ஜிஎஸ்டி வரியத்தா பழனியப்பன் சொல்றாறுங்க தோழர்" என்று பழனியப்பனின் பேச்சை கூடுதலாக விளக்கினார் வேங்கையன்."ஆமாங்க, இந்த ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாதுனு சொன்னபிறகும், ஜிஎஸ்டி வரி போட்டபிறகும் நாடு முழுவதும் சிறு குறு தொழில் செய்வோரும், வர்த்தக வியாபாரம் செய்யும் வணிகர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, பெரும் நஷ்டம் அடைந்து தொழிலையே நடத்த முடியாமல் தவிக்கிறார்கள்" என கிருஷ்ணன் சற்று விளக்கமாக கூறினார்."நம்ம சட்டசபையில, தொழில் பாதிச்சு போச்சுனு அமைச்சரே அறிக்கை வாசிச்சார்னு பேப்பர்ல வந்ததை நாங்க படிச்சோம் தோழர்" என்று பழனியப்பன் கூறினார்.


"உண்மைதான் பழனியப்பன், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் தமிழகத்தில் ஐம்பதாயிரம் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஐம்பது லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என அமைச்சர் சட்டசபையில் கூறியது உண்மைதான்" என பழனியப்பனின் கூற்றை ஆமோதித்தார் கிருஷ்ணன்."கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை என தமிழகத்தின் பல நகரங்களின் சிறு தொழில் செய்வோர் கண்ணீர் வடிக்கிறார்கள். சிவகாசி பட்டாசு தொழிலும் கூட நவுத்துப்மோன மாதிரி ஆகிவிட்டது" கிருஷ்ணன் தொழில் பாதிப்பை விளக்கினார்."எங்க பழனிப்பா, பெட்ரோல், டீசல் வெலை ஏறிப்போனதால வண்டி வாகம் வெச்சு ஓட்டறது ஒன்னும் கட்டுபடியாகல, ஏதோ கவுரவத்திற்கு தொழில் செய்யறோம், என்று வண்டி கழுவ வரும் வாகன உரிமையாளர்கள் புலம்புகிறார்கள் தோழரே" என பழனியப்பன் கூறினார்."நம்ம நாட்ட சுத்தி இருக்கிற பக்கத்து நாட்டுல எல்லாம் பெட்ரோல் டீசல் வெலை கம்மியா விக்குது, ஆனா நம்ம நாட்டுல அதிக வெலை உச்சாணி கொம்புல இருக்குது" என்றார் வேங்கையன்."பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப தினசரி ஏத்தி இறக்குவதே மிகப்பெரிய மோசடி, அங்க ஏறும்போது இங்க ஏத்துவதும் அங்க குறையும்போது இங்கே குறைப்பதற்கு பதில் வரி போடுவதுமான பித்தலாட்டம் காரணமாகத்தான் ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல் டீசல் வருவதில்லை" என கிருஷ்ணன் விளக்கினார்.


அப்போது சின்னத்தம்பி டிவிஎஸ் டீ பக்கோடாவுடன் வந்து நின்றது. நால்வரும் டீயையும் பக்கோடாவையும் சுவைத்து அமர்ந்தனர்."இந்த பக்கோடாவை பாத்தாக் கூட மோடி நியாபகம் தா வருது தோழரே" என்று பழனியப்பன் கூற "வருசத்துக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலை தருவேனு சொல்லிட்டு, அப்புறம் பசங்கல எல்லாம் பக்கோடா விக்கச்சொன்னவராச்சே அப்புறம் அவர மறக்க முடியுமா" என சின்னத்தம்பி சிரித்தான்."ஆமா, வேலையும் கொடுக்கல, நீட் தேர்வு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என தமிழக மாணவர்களின் மேல் படிப்பையும் பாலாக்கிட்டாரு மோடி, விடுங்க மோடி வரலாற பேசினா விடுயறது கூட தெரியாது நாட்ட அவ்வளவு நாசக்கேடு பண்ணி வெச்சிருக்காரு" என்றார் கிருஷ்ணன்."இதையெல்லாம் எதிர்த்து தான் ஜனவரில இருபதுகோடி தொழிலாளிகள் இரண்டுநாள் வேலை நிறுத்தம் செஞ்சாங்க தெரியுமா உங்களுக்கு, வர்ர தேர்தல்ல மோடி மண்ணக்கவ்வுறதுல எந்த சந்தேகமும் இல்லை" பழனியப்பன் சின்னத்தம்பியை பார்த்து வேங்கையன் கூறினார்.மேலும் "தோழர் பழனியப்பனையும், மாரப்பனையும், சின்னத்தம்பியையும் நம்ம சங்கத்துல சேர்த்தரலாம், என்ன பழனியப்பா?" என வேங்கையன் கேட்க "நான் ஒருமாசமா கேட்டுட்டு இருக்கிறேன், தலைவர பாத்த பொறவுதா உங்களுக்கு அது ஞாபகம் வருதாக்கும்" பழனியப்பன் வேங்கையனை கிண்டல் செய்தார்.அதைக்கேட்டு சிரித்தபடியே "சரிங்க தோழர், போயிட்டு வர்ரேங்க" வேங்கையன் மற்றும் பழனியப்பன் சின்னத்தம்பியிடம் விடைபெற்று ஈரம் உலர்ந்த தனது பைக்கை எடுத்து சங்க அலுவலகம் நோக்கி புறப்பட்டார் கிருஷ்ணன்.

;