சூரியனில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் வழக்கத்தை விட பெரியதாக தென்படுவதால் சூரியனில் காந்த புயல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சூரியனில் ஏற்படும் காந்த புயல்கள், கரும்புள்ளிகள், சூரியன் வெளியிடும் கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் உருவாகும் என்றும், தற்போது 25-வது சுழற்சி துவங்கியுள்ளதாகவும் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது கரும்புள்ளிகள் உருவாகத் துவங்கியுள்ளதாகவும், இந்த கரும்புள்ளிகளால் சூரியனில் அதிக அளவு காந்த புயல் ஏற்பட்டு, வளிமண்டலம் வழியாக பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தை வந்தடையும். இந்த காந்த புயலால் வெப்பநிலையில் எந்த பாதிப்பும் இருக்காது.
இந்நிலையில் சூரியனில் கரும்புள்ளிகள் வழக்கத்தை விட பெரியதாக தென்படுவதால் தற்போது தொடங்கியுள்ள 25-வது சுழற்சியில் புள்ளிகள் தொடர்ந்து விரிவடைந்தால் சூரிய காந்த புயல் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் காந்த புயல் ஏற்பட்டால் தொலை தொடர்பு பாதிப்படையும், பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூரியனில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாசா வெளியிட்ட நிலையில் கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.