science

img

வேறுபாடுகள் தந்த வெளிச்சம்! - அன்பழகன்

அறிவியல் கதை

ஆசிரியர் மெல்ல இருமிக்கொண்டே வகுப்பறைக்குள் வந்தார். நாற்காலியை சற்றே இழுத்து வசதியாக அமர்ந்துகொண்டார். மெல்ல மூச்சை நிதானமாக இழுத்து விட்டுக்கொண்டார். மூச்சு நிதானத்திற்கு வந்ததில் ஒரு புதுத் தெம்பு உண்டானது. சரி பாடம் நடத்தலாமென நாற்காலியில் இருந்து எழுந்த போது அவரையும் மீறி தும்பல் வந்துவிட்டது. சற்றே சுதாகரித்துக்கொண்டு கர்சீப்பால் மூக்கை மூடிக்கொண்டார். மாணவர்களும் கர்சீப்பை எடுத்து மூக்கை மூடிக்கொண்டனர். இது அனிச்சை செயல்போல் உடனடியாக நடந்தேறியது. “கிருமி தொற்று” பரவாமல் இருக்க ஆசிரியர் சொன்ன வழிமுறையில் இதுவும் ஒன்று. சரி! சரி! இந்த இருமலுக்கு என்ன காரணம்? “கிருமிகள்தான் சார்”! என்றான் ஒரு மாணவன். கிருமிகள் என்றால் என்ன? என்றார் ஆசிரியர். அதான் சார்! பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற கிருமிகள்தான் மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு நோய்களை உண்டாக்குகின்றன என்றான் இன்னொரு மாணவன். சரியாகத்தான் சொல்றீங்க, இன்றைக்கு இந்த கிருமிகளைப் பற்றித்தான் படிக்கப் போகிறோம். அதற்கு முன்னாடி இந்த வைரஸ்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் பாடம் எளிதாக புரியும் என்றார் ஆசிரியர். மாணவர்களும் உடனே ஆர்வமானார்கள். அதுமட்டுமல்ல் தங்களுக்குள் பேசி பாக்டீரியா குழு வைரஸ் குழு என்று இரண்டு குழுக்களாக பிரிந்து விட்டார்கள். “இந்த உலகம் காற்றால் நிரம்பி இருப்பதைப்  போல கிருமிகளாலும் நிரம்பி இருக்கின்றன. இவற்றால் நன்மைகளும் உண்டு தீமைகளும்  உண்டு. இந்த கிருமிகளை எதிர்கொள்வதாலேயே மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இதர நுண்ணுயிர்களால் வாழமுடிகிறது. நமது இரத்தத்தில் உள்ள வெள்ளையணூக்கள் இந்த கிருமிகளை எதிர்த்து போராடி நம்மைக் காத்து வருகின்றன. அதோடு நாம் குழந்தையாக இருந்தபோது பல்வேறு நோய்எதிர்ப்பு மருந்துகளை தடுப்பு ஊசிகளாக நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். இதனால் போலியோ, தட்டம்மை போன்ற நோய்கள் நம்மை தாக்கா வண்ணம் வாழ்ந்து வருகிறோம” என்று கிருமிகள் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தோடு ஆசிரியர் விவாதத்தைத் தொடங்கிவைத்தார். மாணவர்கள் தங்கள் குழுக்களோடு பேசிக்கொண்டார்கள்.

சரி! சரி! பாக்டீரியாக்குழுவே தங்களது விவாதத்தைத் தொடங்கி வைக்கட்டும்” என்றார் ஆசிரியர்.     “பாக்டீரியா ஒரு செல் உயிரி; அதனால் தனித்து வாழமுடியும்” என்றது பாக்டீரியாக்குழு. “வைரஸ் ஒரு தீயசக்தி! அதாவது அது ஒரு நியூக்கிளிக் அமில துண்டு! தம்மளவில் உயிருடையவை அல்ல! அவை தனித்திருக்கையில் செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் அது மற்ற உயிரினகளில் உள்நுழைந்து செல்களைத் தாக்கி அழித்து அங்கேயே பல்கி பெருகி வாழத்தொடங்குகிறது. எனவே அதற்கு இன்னொரு உயிரி தேவை” என்றது வைரஸ் குழு. “பாக்டீரியாக்கள் நோய்களை உண்டாக்கும் போது ஆண்டிபயாடிக் மருத்துகளைக் கொண்டு மேலும் பல்கிப்பெருகுவதை கட்டுப்படுத்த முடியும்” என்றது பாக்டீரியாக்குழு. “ஆனால் வைரஸ்கள் நோய்களை உண்டாக்கும்போது ஆண்டிபயாடிக் மருத்துகளைக் கொண்டு மேலும் பல்கிப்பெருகுவதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது: ஓரளவிற்கு மட்டுமே கட்டுப்படுத்தலாம் என்றது வைரஸ் குழு.

மாணவர்கள் இப்படி வேறுபாடுகளை சொல்ல சொல்ல ஆசிரியர் கேட்டுக்கொண்டிருந்தார். சரி! உங்கள் விவாதம் நன்றாக தொடங்கி இருக்கிறது. வாழ்த்துகள்! இன்னும் இதில் நாம் தெளிவுபெற வேண்டுமென்றால் இரண்டு குழுக்களும் பயனுள்ள வேறுபாடுகளை பகிர்ந்து கொள்ளலாமே! என்றார் ஆசிரியர். “காற்றிலிருந்து நைட்ரஜனை எடுத்து நமக்காக பயனுள்ள அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. ஆனால் வைரஸ்கள் மனிதர்களுக்கு தீங்கையே விளைவிக்கின்றன” என்றது பாக்டீரியாக் குழு. “பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள சத்தை உறிஞ்சிக்கொண்டு பல்கி பெருகுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் மேலும் பல்கி பெருகாவண்ணம் வைரஸ்கள் அவற்றை தாக்கி அழிக்கின்றன. இதனால்தான் கிருமிகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரா வண்ணம் ஒரு சமநிலையை அடைகிறது. இதற்கு வைரஸ்தான் காரணம்” என வைரஸ் குழு சொல்லி முடித்தபடியே துள்ளிக்குதித்தனர். “பால் தயிராவதற்கும், நாம் உண்ட உணவு செரிப்பதற்கும், ஆண்டிபயாடிக் போன்ற நோய்எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பதற்கும் பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன. அதுமட்டுமா இந்த பூமியில் தாவரங்கள் உருவாவதற்கு முன்பே சூரிய ஒளியை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிட்டு நமது காற்று மண்டலத்திற்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை இட்டு நிரப்பியது இந்த பாக்டீரியாக்கள்தான்” என்று பாக்டீரியாக் குழுவினரும் துள்ளிக்குதித்தனர். சபாஷ் சரியான போட்டி என ஆசிரியர் பாராட்டினார். சில மாணவர்கள் இரண்டு குழுவில் இருந்தாலும் தங்களுக்கு தோன்றுவதை எடுத்துச் சொல்ல தயக்கத்தோடு அமர்ந்திருந்ததை ஆசிரியர் அப்பொழுதுதான் கவனித்தார். இந்த சப்தத்தில் உங்களால் பேச முடியவில்லையா? ஏன் தயங்குகிறீர்கள்; உங்கள் மனதில் உள்ளதை தைரியமாக சொல்லலாம் என்றார் ஆசிரியர். மாணவர்கள் மத்தியில் சற்று நேரம் அமைதி நீடித்தது.

சரி! சரி! நீங்கள் படித்தவற்றை மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக ஒருவேளை நீங்கள் சொல்லாமல் இருக்கலாம்! சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை தயங்காமல் என்னிடம் சொல்லலாம்! என்று ஆசிரியர் அவர்களையும் பங்கேற்க வைப்பதற்காக முயன்று கொண்டிருந்தார். மெல்ல தயக்கத்தோடு ஒரு மாணவன் எழுந்தான். வெரிகுட்! சொல்லுங்க என்றார் ஆசிரியர்! சார்! பாக்டீரியாகளுக்கும் வைரஸ்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு சார்! நான் நினைப்பது தவறாகக்கூட இருக்கலாம், நான் சொல்லலாமா சார் என்றான்!. எதுவானாலும் சொல்லு! நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ஆசிரியர். சார்! பாக்டீரியாக்களின் பயன்களைப் பார்க்கும்போது அது ஏதோ மாற்றத்திற்கு உள்ளாவது போல் தெரிகிறது சார்! ஆனால் வைரஸ்கள் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் பிற உயிரினங்களின் செல்களை அழிப்பதிலேயே குறியாக இருப்பதாக தெரிகிறது சார்! என்றான். உடனே ஆசிரியர் சபாஷ்! சரியான சிந்தனை! பாடபுத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்லாமல் புதியதாக ஒன்றை சிந்தித்து சொன்னாய் அல்லவா! உனக்கு ஆயிரம் பாராட்டுகள் என்றார். அதுசரி! அது என்ன மாற்றமாக இருக்கமுடியும் என யாராவது சொல்லமுடியுமா? என்றார் ஆசிரியர்! ஒரு நிலையிலிருந்து இன்னொரு புதிய நிலைக்கு மாறுவதால் அதை வேதியியல் மாற்றமென சொல்லலாமா சார் என்றான்! அதே மாணவன்.

மாணவர்கள் அனைவரும் அந்த மாணவனையே அதிசயமாகப் பார்த்தனர். இவனா இப்படி புதியதாக சிந்தித்தான் என மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். “உனது சிந்தனை சரியா! தவறா! என்பது முக்கியமில்லை! அதை ஆய்வாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இப்படி வித்தியாசமாக சிந்தித்தாய் அல்லவா! அதுதான் முக்கியம்” என்றார் ஆசிரியர். அன்றைய வகுப்பை முடித்து விட்டு ஆசிரியர் வீட்டிற்கு வந்து விட்டாலும் வகுப்பறையில் அந்த மாணவன் சொன்ன பதிலே மீண்டும் மீண்டும் சிந்தனையில் வந்து போனது. வேறுபாடுகளை எடுத்து எழுதுக, பொருத்துக போன்றவை எளிமையாக பாடம் நடத்துவதற்கும் எளிதாக புரிந்து கொள்வதற்கும் என்று மட்டுமே ஆசிரியர் நினைத்திருந்தார். உண்மையில் மாணவர்கள் புரிந்து கொள்வதைத் தாண்டி புதிய சிந்தனைகளை உருவாக்கும் மாயத்தை நிகழ்த்துவதை நினைத்துப் பார்த்தார். தனிமங்களின் பட்டியலை முதன்முதலில் வரிசைப்படுத்தி பார்த்த விஞ்ஞானி மெண்டலெவ் நினைத்திருப்பாரா? நாளை இந்த பட்டியல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் புதிய தனிமங்களையும் கண்டறிய உதவுமென்று! வெறும் பட்டியல் படுத்துவதால் என்ன இருக்கிறதென்று அவர் அலட்சியமாக இருந்திருந்தால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்குமா?

நமது மூக்கானது சுவாசத்திற்கு மட்டும் பயன்படவில்லை அதற்கும் மேலாக வாசனையை அறியும் நுட்பத்தை கொண்டுள்ளதை ஒப்பிட்டுப்பார்த்தார் ஆசிரியர். இப்படித்தான் நாம் ஒவ்வொரு செயலையும் வெறும் செயல்கள் அல்ல! அதைத்தாண்டிய புதிய நுட்பத்தை நாம் உய்த்துணர வேண்டும் என்ற சிந்தனை ஆசிரியர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.     இனி நல்லா படிக்கிற மாணவர்களுக்கு தருகிற அதே முக்கியத்துவத்தை தயங்குகிற பின்தங்குகிற ஏன் ஒவ்வொரு மாணவரையும் வகுப்பில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடும், அதை ஒவ்வொரு நாளும் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதோடு அதற்காக கடினமாக உழைக்கவும் உறுதி செய்துகொண்டார்.

;