science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) பருவநிலை மாற்றமும்  உயிரினங்களின் எதிர்வினையும்

      மத்திய அமெரிக்க பஞ்சவர்ணக் கிளிகள்  உணவு கிடைக்காமல்  இடம் பெயர்வது, பெர்ரி பழங்கள் முன்பாகவே பழுப்பதால் அதை உண்ட அலாஸ்காவின் பழுப்பு நிறக் கரடிகள் உடல் பருமனாதல், மறைந்து வரும் காடுகளால் இங்கிலாந்திலுள்ள ஊசியிலைத் தாவரங்கள் வாழ்விடம் இல்லாமல் அகதிகளாதல் போன்ற தாக்கங்கள் பருவநிலை மாற்றங்களால்  ஏற்படுவதை  நேரிடையாகக் கண்ட உயிரியலாளர் தோர் ஹான்சன்  அதை ‘Hurricane Lizards and Plastic Squid’’ எனும் தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே இயற்கையின் அற்புதங்கள் குறித்து இறக்கைகள்,விதைகள்,காடுகள்,தேனீ போன்ற தலைப்புகளில் எழுதியுள்ளார். புவி வெப்பமடைதல் பூமியில் உயிரினங்களின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதை இந்த புத்தகத்தில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்;ஆனால் அது விரக்தியின் தொனியில் இல்லை என்கிறார் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்யும் எரிக்கா எங்கெல்ஹாப்ட் (Erika Engelhaupt) பருவநிலை மாற்றத்தின் அறிவியல் அடிப்படையை சுருக்கமாகக் கூறிவிட்டு காலம் மாறி நிகழும் பருவங்கள், கடல் நீர் அமிலமயமாதல் போன்ற மாற்றங்களை உயிரினங்கள் எதிர்கொள்ளும் விதங்கள் குறித்து விவரிக்கிறார். ‘இடம் பெயர்தல். தகவமைத்துக் கொள்தல் அல்லது அழிந்துபடுதல்’ (MOVE,ADAPT OR DIE- MAD)போன்ற தெரிவுகளே உயிரினங்கள் முன் உள்ளன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சூழலின் சிக்கலான தன்மையை இது முழுமையாக காட்டவில்லை. எடுத்துக்காட்டாக இந்தப் புத்தகத்தின் தலைப்பிலுள்ள  ஓணான் 2017ஆம் ஆண்டு கரீபியன் கடல் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளியை தனியொரு விலங்கு சமாளிப்பு மற்றும் தகவமைத்துக் கொள்வது என  இல்லாமல் அந்த இனமே பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. சூறாவளிக்குப் பின்னால் அந்த ஓணான்களுக்கு முன்னங்கால்கள் நீண்டும் பின்னங்கால்கள் குறுகியும் விரல்களுக்கிடையே உள்ள சவ்வு மேலும் பற்றக் கூடியதாகவும் மாறியிருந்ததை அறிவியலாளர்கள் கண்டுள்ளனர். இது மரக் கிளைகளை மேலும் உறுதியாக பற்றுவதற்கு உதவும். தக்கது பிழைக்கும் என்பதை செயல்பூர்வமாக பார்க்க முடிந்தது. முடிவாக பருவ நிலை மாற்றத்திற்கு விலங்குகளின் எதிர்வினை அதன் சூழலுக்கேற்ப பல்தரப்பட்டதாகவே இருக்கும். சில இடம் பெயர்ந்துள்ளன;சில தகவமைத்துக் கொண்டுள்ளன;சில அழிந்துவிட்டன. ஆனால் நம்பிக்கை விட வேண்டாம் என்கிறார் ஹான்சன். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ‘பொறுப்புள்ள ஒரு குடிமகன் என்ன செய்ய வேண்டும் என்றால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்கிற சுற்று சூழலியலாளர் கோர்டன் ஓரியன்ஸ்சின் மேற்கோளை காட்டுகிறார். அதைத்தான் தாவரங்களும் விலங்குகளும் செய்கின்றன.

2 ) சூப்பர் ஜெல்லி 

ஒரு யானை ஏறி நின்றால் கூட தாங்குகிற வலிமை உடைய ஜெல்லி போன்ற ஒரு பொருளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். 80% தண்ணீரால் நிரம்பிய இந்தப் பொருள் அதன் மீது ஒரு கார் ஏறி சென்றாலும் மீண்டும் தன் வடிவத்தை அடையக் கூடியது. தோற்றத்திலும் தொடுதலிலும் ஜெல்லியைப் போல் இருந்தாலும் அழுத்தப்படும்போது மிகுந்த கடினமான உடையாத கண்ணாடியைப் போல் செயல்படுகிறது. மென் ரொபாட்டிக்ஸ், உயிர் மின்னணுவியல், எலும்பு மாற்று மருத்துவ இயல் போன்ற துறைகளில் இந்த சூப்பர் ஜெல்லி பயன்படக்கூடும்.   

3 ) புவி வெப்பமயமாதலும் விவாகரத்தும் 

அல்பட்ராஸ் எனும் அண்டரண்டப் பறவை நீண்ட காலம் ஒரே இணையாக வாழக் கூடியவை. ஆனால் புவி வெப்பமயமாதலினால் அவை இணை பிரிகின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது..கடல் நீர் வெப்பமடையும் வருடங்களில் அவை இணை பிரிவது 1-3% இலிருந்து 8% ஆக உயர்கின்றதாம். ஒரு இணைப் பறவைகள் பருவ காலத்தில் இனப் பெருக்கம் செய்யாமல் அடுத்த பருவத்தில் வேறு ஜோடியை தேடும்போது இணை பிரிவு நடக்கிறது.

4 )  வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடு அபாயம் 

வளி மண்டலத்திலிலுள்ளது போல் மூன்று மடங்கு கார்பன் பூமிக்குள் புதைந்துள்ளது. பேக்டீரியாக்களும் பூஞ்சைகளும் இறந்த அழுகிய பொருட்களை கார்பன் நிறைந்த மண்ணாக மாற்றுவதே இதற்குக் காரணம். ஆனால் இப்படி உண்டாக்கப்படும் கார்பன் எல்லாம் ஒரே தன்மை உடையன அல்ல. சில பத்து ஆண்டுகளுக்கு, இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அழியாமல் அப்படியே இருக்கும். மற்றவை விரைவாக நுண்ணுயிர்களால் உட்கொள்ளப்பட்டு கார்பன்-டை-ஆக்சைடாக காற்று மண்டலத்தில் வெளிவிடப்படுகின்றன. இப்போது ஒரு சோதனையில் பூஞ்சைக் காளான் நிறைந்த மண்ணை சூடாக்கும்போது அவை மற்ற மண்ணை விட குறைவான கார்பன்-டை-ஆக்சைடையே வெளிவிடுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கார்பனை மண்ணுக்குள் சேமிப்பதற்கு பூஞ்சைக் காளான் அவசியம் என இது காட்டுகிறது.  புவி வெப்பமாவதினால் தரை வாழ் நுண்ணுயிர்கள் பெருகி அவை மண்ணுக்கடியில் பல காலம் முன் சேமித்து வைக்கப்பட்டிருந்த கார்பனை உட்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடாக வெளிவிடும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில்தான் பூஞ்சைக்காளான் நிறைந்த மண் குறித்த ஆய்வு வந்துள்ளது. அதிகரிக்கும் வெப்பம், தீவிரமான விவசாயம், அழிந்து வரும் காடுகள் இவற்றால் தரைவாழ் நுண்ணுயிர்களுக்கு ஏற்படும் சேதாரம் போன்றவற்றின் மொத்த பாதிப்புகளினால் 2100ஆம் ஆண்டுக்குள்  தரைக்கடியில் சேமிக்கப்படும் கார்பன் அளவு 40% குறையும் என கணினி மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டதில் தெரிய வந்துள்ளது. 

 

;