இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் வெற்றிகரமாக பயணித்து தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றன. அதன் அடுத்த இலக்கு நிலவின் தென் துருவத்தை குறி வைத்திருக்கிறது. இது எதற்காக என்றால்? இதுவரை எந்த ஒரு விண்கலமும் தரையிறங்காத கடினமான பகுதி நிலவின் தென் துருவம். 1960களின் பிற்பகுதி யில் அமெரிக்க நிலவு பயணங்கள் நடந்த இடத்திலிருந்து இது மிகவும் வித்தியாசமான இடமாகும். மேலும், வட துருவத்தை விட மிகப்பெரிய நிழல் பகுதிகளை கொண்டது தென் துருவம். நிலவின் மேற்பரப்பில் உள்ள பகுதிகள் நிரந்தர நீர் ஆதாரங்களை கொண்டிருக்கிறது என்பது நமது விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அத்துடன் பனி மற்றும் பெரிய பள்ளங்களை கொண்டுள்ளதால் தரை யிறங்குவதற்கான பகுதியைக் குறிப்பதிலும் சிரமம் உள்ளது. இத்தகைய தடைகளை தகர்த்து நிலவில் தடம் பதிப்பது அவசியமாகிறது. இதன் மூலம் ஆரம்பகால கிரக அமைப்புகளின் மர்ம மான பல கேள்விகளுக்கும் விடைகிடைக்கும்
நிலவில் தண்ணீர்!
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 விண்கலத்தை (செயற்கைக்கோள்) வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது இஸ்ரோ. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்து உறுதி செய்தது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் நாசா போன்ற மிக முன்னணி விண்வெளி நிறுவனங்கள் கூட வெகுவாகப் பாராட்டின. இதன் தொடர்ச்சியாக, நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன வசதிகள் கொண்ட சந்திரயான் -2 விண் கலத்தை மிகவும் சக்தி வாய்ந்த புவி ஒத்திசைவு வாகனங்களில் ஒன்றான இந்தியாவின் குண்டு பையன், பாகுபலி என்றெல்லாம் செல்ல மாக பெயரிடப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் -3 ஏவு கலன் (ராக்கெட்) மூலம் கடந்த 2019 ஜூலை 22இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி யது. தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாலய சாதனை!
இந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து நிலவைச் சுற்றி வரத் தொடங்கியதும் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணித்தது. திட்டமிட்டபடி, விக்ரம் லேண்டர் பெரும் சவால்களை எதிர்கொண்டு நிலவில் தரை இறங்கியதும் உலகத்தை தனது பக்கம் திருப்பியது இஸ்ரோ. இந்த நிலையில், நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் திடீரென சிக்னலை துண்டித்துக் கொண்டது. இதன் விளைவு, நிலவின் தரையை தொடுவதற்கு 335 மீட்டர் உயரம் இருந்த நிலை யில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்கலம் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் மெதுவாக தரையிறங்க வேண்டிய நேரத்தில் வேகம் அதிகரித்ததால் ‘லேண்டர்’ கலன் விபத்தில் சிக்கி செயல் இழந்தது. இந்த நிகழ்வு நமது விஞ்ஞானிகளை வேதனையில் ஆழ்த்தியது. ஆனாலும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, சமீபத்தில் ஜப்பான் நிலவுக்கு அனுப்பிய விண்கலமும் இறங்காமல் மோதி தோல்வியில் முடிந்தது. நிலவில் விண்கலம் தரை இறங்குவதில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
ஒரு செயற்கைக்கோளை நிலவில் தரை இறக்குவது என்பது விஞ்ஞானிகளுக்கு சாதா ரண நிகழ்வல்ல. ஏனென்றால்? செயற்கைக் கோள் செல்ல வேண்டிய பாதை உள்ளிட்ட அனைத்தையும் முன்னரே திட்டமிட வேண்டி யிருக்கிறது. ஒரு செயற்கைக்கோளின் இன்ஜின்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்பாக, நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு பூமியி லிருந்து ஏவுகலன் நொடிப்பொழுதில் புறப்படும்படி திட்டமிட வேண்டும். அத்துடன், செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்கும் போது குறித்த நேரத்தில், சரியான அளவில் அதன் வேகத்தை குறைக்க வேண்டியது மிக மிக அவசியம். இதில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு தவறு நடந்தால் கூட அது தோல்வியில் முடிகிறது. சென்சார் செயலிழப்பு, இயந்திர செய லிழப்பு, கணக்கீடு தோல்வி என பல தோல்வி களை சந்தித்துள்ள இஸ்ரோ நிறுவனம், ‘தோல்வியே வெற்றிக்கு முதல் படி’ என்பதால் சந்திரயான்-2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம் தளரவில்லை. இதை கற்றல் மற்றும் முன்னேற்றத்திற்கான அடுத்த கட்ட வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நம்பிக்கையுடன் முயற்சியை தொடர்ந்தனர்.
சந்திரயான் - 3
முழுவதும் தோல்வியின் அடிப்படையில், நிலவின் தென் துருவ ஆய்வு பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு சந்திரயான் -3 திட்டத்தை 2020 ஆம் ஆண்டு அறிவித்தது இஸ்ரோ. இந்த லட்சியப் பயணம் பல கட்டமைப்புகள் ஒருங்கிணைப்புகளை உள்ளடக்கியது. முந்தைய பயணத்தின் அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள இஸ்ரோ, இந்த முறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங் களை செய்துள்ளது. எவ்வித தொழில் நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழை வதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் துல்லியமாக கணக்கிடும் முயற்சிகளை தொடர்ந்துள்ளது.
நிலவில் எப்படி தரை இறங்கும்?
நிலவின் மேற்பரப்பில் கரடு முரடான பாதைகளை தவிர்த்து, சமமான ஒரு பகுதியில் லேண்டரை தரையிறக்க வேண்டும். அதன் பின்னர், சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி லேண்டரை பிரித்து இயக்க வேண்டும். அப்போதுதான், ரோவர் இயக்கத்தை நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான புதிய தொழில்நுட்பங்களை இந்த முறை புகுத்தியுள்ளனர். இதன் மூலம், தரையிறங்கும் இடத்தை சுற்றியுள்ள நில அதிர்வை அளவீடு செய்து அதன் அடர்த்தி மற்றும் மாறுபாடுகளை நாசாவிலிருந்து தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைத்துள்ளதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்திருக்கிறார். ஏற்கனவே, சந்திரயான் -2 ஆர்பிட்டர் நிலவில் சுற்றி வருவதால் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக விண்கலத்தை இறக்குவதற்கு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர், ரோவர், கலன் களையே அனுப்புகின்றனர். இதனால், கோள்களுக்கு இடையேயான பயணங்களை வெற்றிகரமாக கடந்து ஆர்பிட்டர் வழியாக பூமியுடன் புதிய தொழில் நுட்பத்துடன் தொடர்பு கொள்ளும் வசதிகளை செய்துள்ளனர்.
நாங்க ரெடி! நீங்க ரெடியா?
4 மீட்டர் விட்டத்தில், 43.5 மீட்டர் உயரத்தில் நிற்கும் 640 டன் எடையை உயர்த்தும் திறன் கொண்ட, இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த கிரையோஜனிக் (சிஇ-20) இயந்திரம் பொருந்திய எல்விஎம்- 3 ஏவுகலன் வாகனத்தி லிருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஜூலை 14 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான 48 மணி நேர கவுண்ட் டவுன் துவங்கியது.
எப்படி செயல்படும்?
சந்திரயான்- 3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதும் ஏவுகணையின் உந்து விசை சந்திரனிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு முன்பு வரை லேண்டரையும் ரோவரையும் எடுத்துச் சென்று விடும். நிலவிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் போது லேண்டர், ரோவர் இரண்டும் உந்துவிசையி லிருந்து வெளியேறும். 1/6 தான் புவி ஈர்ப்பு விசை நிலவில் இருக்கிறது. அதனால் மெதுவாகத்தான் கீழே விழும். லேண்டருக்குள் ரோவர் இருப்பதால் இரண்டும் பிரிந்து போக வாய்ப்பு இல்லை. லேண்டர் கீழே விழும் போது அதன் வேகத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. காரணம், பூமியிலிருந்து கொடுக்கப்படும் தகவல்கள் நிலவுக்கு செல்ல சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. அதனால் அவ்வ ளவு நேரம் லேண்டரால் தாக்குப் பிடிக்க முடி யாது. ஆனால், இந்த முறை தானியங்கியாக மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைத்துள் ளனர். மேலும், தரையில் அதிக வேகத்தில் கீழே விழுந்து நிலவுடன் மோதி சேதமாகாமல் இருப்பதற்கு அனைத்து திசைகளிலும் பய ணிக்கும் வகையில் இன்ஜின்களை வடிவமைத் துள்ளனர். விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது ஒரு நொடிக்கு மூன்று மீட்டர் மட்டுமே இறங்க வேண்டும். இப்படி மெதுவாக தரை இறங்கி னால் வெற்றி சாத்தியமாகும். அதற்கு தகுந்தார் போல் இம்முறை லேண்டரை வடிவமைத்துள் ளனர். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்பு தான் ஆறு சக்கரங்களை கொண்ட ரோவர் வெளியே வரும். இப்படி வெளியே வந்து விட்டால் இந்த திட்டம் வெற்றிகரமாகி விடும். ரோவர் வழக்கமாக நிலவில் சென்று அதன் ஆய்வுகளை மேற்கொள்ளதுவங்கிவிடும். பின்னர், ரோவரில் உள்ள பல கேமராக்கள் உதவியுடன் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப் படங்கள், மாதிரிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்யத் தொடங்கிவிடும். அந்த தகவல்களை பூமிக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும். இது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு பயணத்தின் மிக மிக முக்கியமான தாகும். அதற்கான ஆய்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு முறை சோதனை ஓட்டம் நடத்தி முடித்தனர்.
மீண்டும் ஒரு மைல் கல்...
சந்திரயான்-3 விண்கலம், அனைத்து வகை யிலும் வெற்றிகரமாக திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் முறையாக தரையிறங்கா விட்டால் என்ன செய்வது? எரிபொருள் தீர்ந்தால் சமாளிப்பது எப்படி? உள்ளிட்ட அனைத்தை யும் விஞ்ஞானிகள் மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளனர். இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சி களுக்கு இந்த சந்திரயான் -3 திட்டப் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆய்வுப் பணியில் நமது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம் இஸ்ரோ உலகளாவிய விண்வெளி சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை நிலை நிறுத்தும். இந்தி யாவின் விண்வெளி துறை வரும் ஆண்டு களில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 65 லட்சம் கோடி) பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதால் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
- தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு