science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 )    மேய்ச்சல் இனங்களின் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளுக்கும் நிலப்பரப்பின் மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை ஒரு ஆய்வு விளக்குகிறது. எடுத்துக்காட்டாக தூந்திரப் பிரதேசத்திலுள்ள கரிபோ எனும் மான்வகையினத்தின் செரிமான மண்டலத்திலுள்ள ஒட்டுண்ணிகளால் அவை உண்ணும் அளவு குறைகிறது;இதனால் தாவரங்களின் அளவு அதிகரிக்கிறது. மே 17 தேதியிட்ட ‘Proceedings of the National Academy of Sciences.’ இதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.  இது போன்ற உயிரினங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகள் சுற்று சூழலில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இன்னொரு எடுத்துக்காட்டு பாசிகளை உணவாகக் கொள்ளும் கடல் குச்சிகளை(sea urchins) நீர் நாய்கள் உண்பதால் கடல் பாசிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. சில கிருமிகள் தாங்கள் வாழும் விலங்குகளையே அழித்துவிடுகின்றன. அதன் மூலமும் சுற்று சூழலில் மாற்றங்கள் ஏற்படும். எடுத்துக்காட்டாக 19ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் ரிண்டர் பெஸ்ட் எனும் கிருமி மேய்ச்சல் கால்நடைகளை பெருமளவில் அழித்துவிட்டது. இதனால் புல் வளர்ச்சி அதிகரித்தது. தடுப்பூசி மூலம் அந்தக் கிருமி தொற்று பரவல் நிறுத்தப்பட்டதால் கால்நடைகள் அதிகரித்து புல் வளர்ச்சி கட்டுக்குள் வந்தது. ஆனால் பெரும்பாலான கிருமி தொற்றுகள் உயிர் ஆபத்தானவை அல்ல. இப்படிப்பட்ட கிருமிகள் கால்நடைகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இவை நிலத்தில் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமண்டா கோல்ட்ஸ்சும் அவரது குழுவினரும் கரிபோ இனம் குறித்த தரவுகளின் மூலம் அவை பிழைத்திருத்தல்,அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை குடல் புழுவினால் எந்த அளவு தாக்கம் பெறுகிறது என்பதை கணக்கீடுகள் மூலம் கண்டனர். இதன்மூலம் கரிபோ,ஒட்டுண்ணிகள் மற்றும் தாவரங்கள் தொகை எவ்வாறு மாறும் என்பதை கணக்கிட்டனர். குடல் ஒட்டுண்ணியால் நோயுற்ற கரிபோக்கள் குறைவாக உண்டான;இனப்பெருக்க விகிதமும் குறைந்தது.இதனால் தாவரங்கள் வளர்ச்சி அதிகரித்தது. இந்த ஆய்வு தவிர 18 இனங்களின் மீது நடத்தப்பட்ட  59 ஆய்வுகளை இந்தக் குழு பகுப்பாய்வு செய்தது.நீண்டகால ஒட்டுண்ணி தொற்றினால் பொதுவாக தாவர உண்ணிகள் குறைவாக உண்ணுகின்றன;உடல் எடையும் சேர்ந்திருக்கும் கொழுப்பும்  குறைகிறது என தெரிய வந்துள்ளது. சுற்று சூழல் தாக்கங்களில் உயிரினங்களுக்கிடையே நடைபெறும் இடையீடுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் கோல்ட்ஸ். உலகளவில் காலநிலை மாற்றங்கள், நிலப்பயன்பாட்டினால் வாழ்விட இழப்பு ஆகியவை ஒட்டுண்ணிகளுக்கும் அவற்றின்  ஓம்பிகளுக்கும் (host) இடையிலுள்ள உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி பல ஒட்டுண்ணிகளின் அழிவிற்கு இட்டு செல்லக்கூடும்.   நமது சுற்று சூழலை கட்டுப்படுத்துபவை வேட்டையாடும் விலங்குகள் மட்டுமல்ல; ஒட்டுண்ணிகள் அதை விட முக்கிய பங்கு வகிக்கலாம் என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷிமிட்ஸ்.

2 ) பற்களினுட்பகுதியில் இருக்கும் பேக்டீரியாக்களை அழிப்பதற்கும் ரூட் கேனல் சிகிச்சைக்கும் உதவும் நானோ அளவு ரோபோக்களை பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம் (IISC) வடிவமைத்துள்ளது.  இப்போதுள்ள தொழில் நுட்பம் ,பற்களுக்குள் ஆழமாக சென்று பெக்டீரியாக்களைக் கொள்ளும் அளவிற்கு திறன் உள்ளதாக இல்லை என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். புதிய தொழில் நுட்பத்தில் நானோ போட்கள் ஆழத்திற்கு ஊடுருவி சென்று தொற்றுகளை சுத்தம் செய்கிறதாம். 

3  ) பாட்டில் மூக்கு டால்பின்கள் தங்களது தோல் நோய்களை பவளப் பாறையில் உரசுவதன் மூலம் தன் சிகிச்சை எடுத்துக் கொள்கிறதாம். பவளப்பாறைகளில் பேக்டீரியா எதிர்ப்பு,ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன் குணங்கள் உள்ளனவாம்.இவை தோல் நோய் சிகிச்சையில் உதவலாம். ஈஸ்ட், பேக்டீரியா மற்றும் வைரஸ்களால் உண்டாகும் அம்மை ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இவை புவி வெப்பமாதலினால் தீவிரமடைகின்றன.

 

;