science

img

அசோலா தண்ணீரில் மிதக்ககூடிய தாவரம்

அசோலா (Azolla) தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது.


நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். பால் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.


மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் பாலீத்தீன் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ(அ) 30 கிலோ அளவுக்கு செம்மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ (அ) 30 குடம் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் (அ) இரண்டு கையளவு ராக் பாஸ்பேட் மற்றும் 300 கிராம் அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.


15 நாள்களில் ஒரு பாத்தியில் 3 கிலோ முதல் 5 கிலோ அசோலா தாயாராகிவிடும். இதில் இருந்து 800 கிராம்முதல் 1 கிலோ அறுவடை செய்யலாம். பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். இதுபோல் மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.


அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.


அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை


10-15 நாட்களுக்கு ஒரு முறை 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்(அ) ஓரு கையளவு பசுஞ்சாணம் சேர்க்கவேண்டும்.


15-20 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.


மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.


அசோலா(Azolla) விதைகளை தவிர ஆறு மாதத்திற்கு ஒரு முறை (அ) வருடத்திர்கு ஒரு முறையாவது அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றிய பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு முன்பு போல் தயார் செய்ய வேண்டும்.


அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்க வேண்டும். இல்லையென்றால் அசோலா(Azolla) தன் உற்பத்தியை நிறுத்தி கொள்ளும்.


வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்


தண்ணீர்: அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.


ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.


சூரிய ஒளி: கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.


காற்று: வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மண்ணின் கார அமிலத் தன்மை: காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.

;