பெங்களூரு, ஆக.24- சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில், இத்திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது என்று விளக்குகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். 800 மீட்டர் என்ற உயரத்தை எட்டும் வரை விக்ரம் லேண்டர், எதிர்பார்த்த அனைத்து அளவுகளுக்கு உள்ளே தான் இருந்துள்ளது; அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்ததோடு, பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை; ஆனால் 150 மீட்டர் உயரத்திற்குச் சென்றபோதுதான் அது தரையிறங்குவதாக இருந்த இடத்தின் தரைப்பகுதியில் இடர் இருப்பதை உணர்ந்துள்ளது; அதை உடனடியாக உணர்ந்த விக்ரம் லேண்டர், அந்த நேரத்தில் மாற்று இடத்தில் தரையிறங்குவதற்காக பக்கவாட்டில் நகர்ந்தது என்று விவரிக்கிறார். “இது சாதாரணமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், இது மிகவும் கூர்மையான, நுட்பமான இடர். இறுதிவரை கச்சிதமாக வந்த விக்ரம் லேண்டர், தடம் பதிக்கப் போகும் நேரத்தில் அந்த இடத்தில் இடர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தத் தருணம் ஒரு படபடப்பை ஏற்படுத்திவிட்டது,” என்கிறார். “தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய 18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரை யிறங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக திட்ட மிட்ட கால அளவில் 30 விநாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டது. இந்த மாற்றத்தை பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கண்ட விஞ்ஞானிகளின் முகத்தில் படபடப்பு தென்பட்டது” என்று கூறும் த.வி.வெங்க டேஸ்வரன், இறுதியில் அதைச் சரிசெய்து லேண்டர் தரையிறங்கியதும் நிம்மதியடைந்தனர் என்கிறார். பிறகு தரையிறங்கும் வேகத்தை எதிர்பார்த்த வகையில் சரிசெய்து கச்சிதமான வேகத்தில் தரையைத் தொட்டது. அதேபோல், தரையிறங்கு வதற்கான சென்சார் கருவிகள், வழிகாட்டும் கருவிகள், வேகத்தை அளக்கும் கருவிகள், சேதங் களைக் கண்டறியும் கருவிகள் என அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.