politics

img

மோடியை புறக்கணிக்க எழுந்தாரா ‘நேசமணி?’

‘கான்ட்ராக்டர் நேசமணி’ இப்போது ஒரு அரசியல் தலைவரின் இடத்திற்கு உயர்த்தப்படுகிறார் என்றால் அரசியல் கான்ட்ராக்டர் நேசமணியின் இடத்திற்கு வந்துவிட்டது என்று பொருள்.சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்காகிக் கொண்டிருக்கும் நேசமணி விவகாரத்தை தலையும் புரியாமல் காலும் புரியாமல் தட்டுத்தடுமாறி இன்னும் பலர் அதன் ஊற்றுக்கண்ணை தேடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ட்ரெண்டிங்கை பின்தொடர்வது என்பது  24 மணிநேர வேலை. அதுமட்டுமல்ல, ட்ரெண்டிங் என்பது ஒரு  சங்கேத மொழி. அதை பரிமாறிக்கொள்பவர்கள் ஒரு ரகசியக் குழுபோல எங்கோ சிலராகத் தோன்றி பிறகு அது பெரும் வெள்ளமாக மாறுகிறது.ஒரே நேரத்தில் ஏதோ ஒரு விஷயம் குறித்து சமூக ஊடகங்களின் டைம்லைனில் ஆயிரம் பேர் பேசுகிறபோது அந்தப் பேசுபொருளின் தகுதி கடந்து அது அனைவரின் பங்கேற்பையும் கோருகிறது. அதற்கு உண்மையான ஒரு பிரச்சினைகூட தேவையில்லை. ஒரு கற்பனை, ஒரு கேலி, ஒரு வதந்திகூட போதும். அடி வாங்கி அழும் குழந்தைகூட போதுமானது.

நடிகர் வடிவேல் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு குணாதிசய அடையாளம். அவர் தமிழ் பேச்சுவழக்கின் ஒரு பகுதி. கடந்த இருபதாண்டுகளாக பொது வெளியில் வடிவேலின் வசனம் ஒலிக்காத இடங்களே இல்லை. அவர் தனக்கென உருவாக்கிக்கொண்ட காட்சி அமைப்புகள் தமிழ் வாழ்க்கையின் அபத்தமான, விசித்திரமான தருணங்களை இடையறாது காட்டி வந்திருக்கின்றன. கலாச்சார வாழ்விலிருந்து தனது கலைக்கான தருணங்களைப் பெறுபவனே வெகுசனக் கலைஞனாகிறான். வடிவேல் அப்படி உருவாக்கிக்கொண்ட காட்சிகளும் வசனங்களும் தமிழ்ப் பாண்பாட்டுப் பிரதிகள் என்றே சொல்ல வேண்டும். வடிவேலின் டைமிங், உடல் மொழி  இந்தக் காட்சி அமைப்புகளோடும் வசனங்களோடும் சேர்ந்து தமிழ் மனங்களின் அழிக்கமுடியாத சித்திரங்களாகவும் நினைவுகளாகவுமே மாறிவிட்டன. அந்த நினைவுகளிலிருந்துதான் இப்போது வடிவேல் உருவாக்கிய மறக்கமுடியாத கதாபாத்திரமான ‘நேசமணி’ எங்கிருந்தோ உலக அளவில் ட்ரெண்டிங் ஆகிறார்.

இது எப்படி ஆரம்பமானது?

ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்டிருந்தார்கள்.. அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயின்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட பின்னூட்டங்களில்  “நேச மணிக்காக பிரார்த்தனை செய்யவும்’’ என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார். ஆனால் அது உண்மை சம்பவம் அல்ல. ‘ஃப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப் போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்
பிட்டிருந்தார். ஆனால் அந்த வேடிக்கை யை பெரும் கொண்டாட்டமாக இணைய உலகம் மாற்றும் என அந்த இளைஞர் கற்பனைகூட செய்திருக்க மாட்டார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நெட்டிசன்கள் இப்போது நேச மணியை ஒரு வாழும் கதாபாத்திரமாக உருமாற்றி பிரார்த்தனைகளை ஆரம்பித்தார்கள். மீம்களின் பெரும்படை கிளம்பியது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சம்பவங்களில் தொடங்கி தமிழகத்தில் நடந்த பல அரசியல் அபத்த நாடகங்களின் குறியீடாகவே நேசமணி ஆகிவிட்டார்.

18 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை காட்சி ஒரு குறிப்பிட்ட தினத்தில் இவ்வளவு தூரம் ட்ரெண்டிங் ஆகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்றால் அதற்கு ஒரு அரசியல்ரீதியான காரணமும் இருக்கலாம். மோடி வடஇந்தியா முழுக்க 350 இடங்களில் பெரும்வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மோடியை முற்றிலுமாக நிராகரித்த தமிழகம் இந்த பதவியேற்பு விழா கொண்டாட்டத்தையும் முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்பதையே இந்த ட்ரெண்டிங் காட்டுகிறது. கிட்டத்தட்ட  ’’கோ பேக் மோடி’’ போன்ற இயக்கம்தான் இதுவும் என்று தோன்றுகிறது. இந்த புதிய அரசின் பதவியேற்பு விழாவில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முகத்திற்கு நேராகச் சொல்லும் இயக்கம்போல இருக்கிறது இந்த நேசமணி இயக்கம்.வாழ்வு என்பது தற்செயல்களின் அபத்த நிலைகள்மேல் கடந்து செல்கிறது. இந்த அபத்தங்களைக் கண்டு சிரிக்கும்போது மட்டுமே வாழ்வை தக்கவைத்துக்கொள்தற்கான சிறிய ஆசுவாசம் கிடைக்கிறது. தனது பணியாளரின் அல்லது உறவினரின் சுத்தியல் தலையில் விழுந்து  நேசமணி அடிபடுவதைக் கண்டு சமூகத்தின் பெரும்பகுதி ஏன் மகிழ்ச்சியாக சிரிக்கிறது என்பதை நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒரு கான்ட்ராகடர் அவரது ஊழியரால் அல்லது அவரிடம் பணியாற்றும் உறவினரால்  நிலைகுலைவுக்கு ஆளாவதை பார்த்து சிரிப்பதன்மூலமாக அதிகாரமற்ற எளிய மனிதர்கள் தங்கள்மேல் அதிகாரம் செலுத்துபவர்களின் வீழ்ச்சியை உள்ளூர ரசிக்கிறார்கள். 

இது கார்ட்டூன் படங்கள் தொடங்கி டைட்டானிக் போன்ற படங்களின் வெற்றிகள் வரை உணரலாம். டைட்டானிக் கப்பல் மூழ்குவதை இந்திய மனம் ஒரு ஆதிக்க சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியாகவே பார்த்ததாக விமர்சகர்கள் சிலர் எழுதினார்கள்.இப்போது ட்ரெண்டிங்காகும் நேசமணி விவகாரத்திற்கு வருவோம். நேசமணி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு எப்போதோ அடிபட்டதற்கு இப்போது கண்ணீர் சிந்துவதுபோல தமிழர்கள் பாசாங்கு செய்து ஏன் இவ்வளவு பெரிய கேலிச் சிரிப்பை எதிரொலிக்கிறார்கள்? ஏனென்றால் சமீப ஆண்டுகளில் தமிழர்கள் ஏராளமான போலி கூட்டுப் பிரார்த்தனைகளைப் பார்த்துவிட்டார்கள். ஏராளமான போலிக்கண்ணீரைப் பார்த்துவிட்டார்கள். தலைவர்களில் ஏராளமான போலி பாசாங்குகளைப் பார்த்துவிட்டார்கள். நலம் விசாரிக்கப் போவது என்ற போலிச் சடங்குகளை ஒரு திருவிழாபோல நடந்த காட்சிகளைப் பார்த்துவிட்டார்கள். இப்போது அந்த போலி நாடகங்களும் பாசாங்குகளும் நேசமணி என்ற கதாபாத்திரத்தை நினைவுகூர்வதன் மூலம் ஒரு பொது மனிதனின் எள்ளலாக வெடிக்கிறது.கவனியுங்கள், கான்ட்ராக்டர் நேசமணி இப்போது ஒரு அரசியல் தலைவரின் இடத்திற்கு உயர்த்தப்படுகிறார் என்றால் அரசியல் கான்ட்ராக்டர் நேசமணியின் இடத்திற்கு வந்துவிட்டது என்று பொருள். மேலும் கான்ட்ராக்டர் நேசமணியின் அரசியல் சிந்தனைகள் எப்படியிருக்கும் என்பதை இன்று தமிழகத்தில், ஏன் இந்தியாவில் நிலவும் அரசியல் அபத்தங்களோடு ஒப்பிட்டு எழுதும்போது நாம் எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.  சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்த நாலாவது நாளே பீப் சாங் போட்டு எதுவுமே நடக்காததுபோல கடந்துசென்ற சமூகம் தமிழ் இணைய சமூகம். இவ்வளவு அரசியல் அழுத்தம் மிகுந்த ஒரு காலத்தை இன்னொரு ட்ரெண்டிங்கால் கண்டும் காணாமல் போவதா அதற்கு பெரிய விஷயம்?நேசமணி நம் காலத்தின் ஒரு சமூக அரசியல் பிம்பம். 

நேசமணி என்பது வேறு யாருமல்ல நாம்தான். 
 


 

;