politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்..

தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது!

மேற்கு வங்கத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது  என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தும், வெறும்பார்வையாளராக நடந்துகொண்டது ஏமாற்றமளிக்கிறது. ஆணையத்தின் இத்தகைய செயலற்ற தன்மையை அனுமதிக்க முடியாது. சுற்றறிக்கைகளை வெளியிடுவதைத் தாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

                                   *********************

ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி இலவச தடுப்பூசி!

மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர் களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை யடுத்து, மே 1 முதல் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் சார்பில் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என நாட்டின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிஅறிவித்துள்ளார்.

                                   *********************

‘ஒரே நாடு’ சரி, தடுப்பூசிக்கு ஒரே விலை எங்கே?

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பேசும் பாஜக,மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பூசிக்கு மட்டும் ஒரே விலையைநிர்ணயிக்க முடியாதா? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். வயது, சாதி, இனம், இருப்பிடம் எதுவாக இருந்தாலும் இலவச தடுப்பூசி பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                   *********************

ஒடிசாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

ஒடிசா மாநிலம்,பூரி மாவட்டத்திற்கு உட்பட்ட பிப்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மே 13 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை வருவதால், வேறொரு நாளில் தேர்தலைநடத்துமாறு இஸ்லாமிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இடைத்தேர்தலை தற்போது மே 16-ஆம்தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

                                   *********************

கொரோனா கொள்ளையிலும் ஏப். 25 அன்று ‘மன் கி  பாத்’

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வரும் நிலையில், ‘மன்கி பாத்’ நடக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25 அன்று) காலை 11 மணிக்கு ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;